நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள் போல நடித்து ரூ.53 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் (80). இவர் கால்நடை பராமரிப்புத்துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த சேவியரிடம் பேசிய நபர், தன்னை பெங்களூரு காந்திநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிபிஐ எஸ்ஐ என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்பின், சேவியரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசுக்கு எதிராக கருத்துகள் பரப்பப்பட்டதாகவும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி சில போலியான ஆவணங்களையும் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேவியரிடம், பின்னர் பெண் ஒருவர் சிபிஐ அதிகாரி போல பேசி, விரைவில் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, தொடர்ந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் பேசிய மர்ம நபர்கள், ஆள் கடத்தல் கும்பலுடன் சேவியருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரது வங்கி கணக்கில் ரூ.30 லட்சம் பரிவர்த்தனை நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் தங்களை உண்மையான காவல் அதிகாரிகள் போல காட்டிக் கொள்ள காவல் துறை சீருடை அணிந்து வீடியோ கால் மூலமும் பேசியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த சேவியரிடம், “உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை விசாரணைக்காக குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்ற வேண்டும்; சோதனை முடிந்ததும் பணம் திருப்பி அனுப்பப்படும்” என்று கூறி நம்ப வைத்துள்ளனர். இதை உண்மையென நம்பிய சேவியர், தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.53 லட்சத்தை அவர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் 10 நாட்களுக்கும் மேலாகியும் பணம் திரும்ப வராததால், தான் மோசடிக்குள்ளானதை சேவியர் உணர்ந்துள்ளார். பின்னர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த மோசடியில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சந்தோஷ் பிரபு (44) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…
