திமுகவில் அமைப்பு ரீதியான கட்டமைப்பை மாற்றி, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்தின் போது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், அடிமட்ட அளவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்களான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கட்சியின் எதிர்கால கட்டமைப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ள 36 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை நியமித்திருந்தது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக குறைபாடுகள் மற்றும் கட்சி அமைப்பு பலவீனங்கள் குறித்து பல்வேறு புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் 2 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகள் வரை உள்ள நிலையில், நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில் அதை 2 முதல் 4 தொகுதிகளாகக் குறைக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய 78-இல் இருந்து 100-க்கும் மேல் உயர்த்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நீண்ட காலமாக கட்சிக்காக பணியாற்றி வரும் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் முன்னுரிமை வழங்குவது குறித்தும் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் சில மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்ற தகவலும் கட்சி வட்டாரங்களில் பரவி வருகிறது.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் குழுத் தலைவர் டி கே எஸ் இளங்கோவன், கூட்டணி அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகும் என தெரிவித்த அவர், வெற்றி மற்றும் தோல்வியை திமுக எப்போதும் சமமாக எதிர்கொள்ளும் கட்சி என்றும் கூறினார்.
மேலும், கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்து இறுதி முடிவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் எடுப்பார் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
யூடியூபர் மாரிதாஸ் கைது – தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்
