ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


ஜவுளி வியாபாரம் செய்து வரும் அந்தப் பெண், குடும்பத் தேவைகளுக்காக கிருஷ்ணகுமார் என்ற பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய தொகைக்காக ஏற்கனவே ரூ.7 லட்சம் வரை வட்டி செலுத்தியுள்ளதாகவும், இருந்தபோதிலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக சிறுநீரகத்தை அகற்றிவிடுவேன் என பைனான்சியர் மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மிரட்டலால் தானும் தனது குழந்தைகளும் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேரில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமை மற்றும் மிரட்டல் குறித்த இந்த குற்றச்சாட்டு ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
