முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பாக திமுகவினர் 60-க்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்றுகூடினர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாகத் திருச்செந்தூரின் முக்கியச் சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை உடனடியாகக் கைது செய்து, காவல் வாகனங்களில் ஏற்றி அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்தனர். திமுக எம்.எல்.ஏ. கைதானதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதி முழுவதும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் நகரின் முக்கியப் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்
