Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? திமுக எம்பி ஆ.ராசா மீது தவெக வழக்கறிஞர்கள் புகார்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? திமுக எம்பி ஆ.ராசா மீது தவெக வழக்கறிஞர்கள் புகார்

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியதாக திமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி சார்பில் இன்று பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ​இப்புகார் விபரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஆ.ராசா

திருமண விழாவில் சர்ச்சை பேச்சு:
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மண்டல வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையில் தவெக வழக்கறிஞர்கள் இன்று தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
​”சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டுத் திருமண விழாவில் அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மிகக் கேவலப்படுத்தும் விதமாகவும், ஒருமையிலும், அநாகரிகமான முறையிலும் அவதூறாகப் பேசியுள்ளார்.

we-r-hiring

தொண்டர்கள் கடும் அதிர்ச்சி:
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவரைப் பொது மேடையில் இத்தகைய தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது அரசியல் நாகரிகம் கிடையாது. ஆ.ராசாவின் இந்த அவதூறுப் பேச்சு தற்போதைய தமிழக முதலமைச்சருக்கு வாக்களித்த தமிழக பொதுமக்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மிகப்பெரிய மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முதலமைச்சரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆ.ராசா பேசிய அந்தக் குறிப்பிட்ட வீடியோ பதிவை, திமுகவினர் சிலர் திட்டமிட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிப் பரப்பி வருகின்றனர். இதனைப் பார்க்கும் தவெக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

எனவே, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், அசிங்கமாகவும் கருத்துக்களைப் பேசிய நீலகிரி எம்பி ஆ.ராசா மீதும், சமூக அமைதியைக் கெடுக்கும் உள்நோக்கத்துடன் அந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருபவர்கள் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
​அதிமுக, திமுகவிலிருந்து நிர்வாகிகள் விலகி தவெக-வில் இணைந்து வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் மீதான ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராகத் தவெக வழக்கறிஞர் அணி தேனியில் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ