“25 ஆண்டுகளாகத் தளபதி விஜயின் ரசிகராக, மக்கள் இயக்கத் தொண்டனாக உழைத்த எங்களைப் போன்றவர்களுக்குக் கட்சியில் மரியாதை இல்லை. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது” எனச் சோழவந்தான் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. கருப்பையாவிடம் அக்கட்சியின் பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் ஆவேசமாகப் புகார் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித்தொகுதியின் தற்போதைய தவெக எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் கருப்பையா. இவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆவார். கடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பிற்கு முந்தைய நாள்தான் இவர் தவெக-வில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டுச் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அதே நேரத்தில், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜயின் தீவிர ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து களப்பணியாற்றியவர். கட்சி தொடங்கப்பட்ட பின்னரும் தீவிரமாகப் பணியாற்றி, தற்போது தவெக-வின் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

மாற்றுக்கட்சியினரின் ஆதிக்கம் – நிர்வாகிகள் அதிருப்தி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் மாற்றுக் கட்சிகளில் இருந்து சிலர் தவெக-வில் இணைந்தனர். அவ்வாறு புதிதாக இணைந்தவர்களுக்கும், எம்.எல்.ஏ.-வின் உறவினர்களுக்கும் மட்டுமே தற்போது தொகுதியில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.-வைச் சுற்றி ஒரு பலமான வளையத்தை அமைத்துக் கொண்டு, பல ஆண்டுகளாக உழைத்த பழைய நிர்வாகிகளை அவரைச் சந்திக்க விடாமல் தடுப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்கள் குறைதீர்க்கும் இடமா? கட்சி ஆலோசனைக் கூடமா?
வாடிப்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்பது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் இடமாகச் செயல்பட வேண்டும். ஆனால், அங்கு எப்போதும் கட்சி நிர்வாகிகளின் கூட்டமும், புதியவர்களின் ஆலோசனைகளும் மட்டுமே நடப்பதாகப் பொதுமக்களும், தவெக-வின் அடிமட்டத் தொண்டர்களும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த காரசார விவாதம்
புறக்கணிக்கப்படுவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ், இன்று வாடிப்பட்டியில் உள்ள தவெக சட்டமன்ற அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு எம்.எல்.ஏ. கருப்பையாவை நேரில் சந்தித்துத் தனது ஆதங்கத்தை ஆவேசமாக வெளிப்படுத்தினார். தவெக நிர்வாகி சுரேஷ் மற்றும் இளவரசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் திரைப்படக் காலம் தொட்டு, கடந்த 25 வருடங்களாகத் தளபதியின் மக்கள் இயக்கத்திற்காகக் குடும்பத்தை மறந்து உழைத்தவர்கள். பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளோம்.
ஆனால், இன்று எங்களுக்கே எம்.எல்.ஏ.-வைச் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. உங்களைச் சுற்றி எப்போதும் புதியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். உழைத்த எங்களுக்கு இங்கு அங்கீகாரம் இல்லை. இதுதான் எங்களின் 25 ஆண்டுகால உழைப்பிற்குத் தரும் பரிசா?” என்று எம்.எல்.ஏ.-விடமே நேரடியாகக் கேள்வியெழுப்பியதாகத் தெரிவித்தனர். கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் வென்ற குறுகிய காலத்திலேயே, சோழவந்தான் தொகுதியில் தவெக-வின் பழைய நிர்வாகிகளுக்கும், புதியவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் மதுரையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!
