Homeசெய்திகள்ஆவடிமுதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!

முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!

-

- Advertisement -

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியாரை ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் மனைவி

we-r-hiring

 

​செங்குன்றம் அடுத்த பொத்தூர், வள்ளி வேலன் நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு கௌசல்யா (40) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், சாந்தகுமாருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை சாந்தகுமார் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னாள்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு தனது முதல் மனைவி கௌசல்யாவிடம் மன்னிப்பு கேட்டு, இனி ஒழுங்காக குடும்பம் நடத்துவதாக உறுதியளித்து மீண்டும் அவருடன் சாந்தகுமார் வாழத் தொடங்கியுள்ளார்.

​சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொத்தூர் பகுதியில் குடியேறிய சாந்தகுமார், அங்கு திடீரென கருப்பசாமி கோவில் ஒன்றை அமைத்து, சாமியாராக மாறி குறி சொல்லத் தொடங்கியுள்ளார். கோவிலுக்கு வழிபாட்டிற்காக வரும் பெண்களிடம் நெருக்கமாக பழகி அவர் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

​இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் குறி கேட்பதற்காக இவரிடம் வந்த ஏரோநாட்டிக்கல் படித்த 22 வயது இளம்பெண் ஒருவரை, சாந்தகுமார் ஆசைவார்த்தை கூறி மூன்றாவது திருமணம் செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது கணவரின் இந்த அடுத்தடுத்த மோசடிகளை அறிந்து அதிர்ச்சியடைந்த முதல் மனைவி கௌசல்யா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த போலி சாமியார் சாந்தகுமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ