புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மூன்று வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


தி.மு.க உறுப்பினர் மகனின் இறால் பண்ணை அதிபர் வீட்டில் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் அருகே, தி.மு.க உறுப்பினரான செல்லையா என்பவரது மகன் திருகுமரன் (46) என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு குழுக்களைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். முன்பு வெல்டிங் பட்டறை நடத்தி வந்த திருகுமரன், தற்போது அதிராம்பட்டினம் அருகே இறால் பண்ணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் அதிரடி
அதேபோல், கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகரில் உள்ள பயாஸ் (31) என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவரது வீட்டில், இரண்டு குழுக்களைச் சேர்ந்த 6 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எண்ணெய் ஆலை உரிமையாளரிடமும் விசாரணை
மூன்றாவதாக, ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பெருங்களூர் பகுதியில் உள்ள பாக்கியராஜ் (33) என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் தங்களது சோதனையைத் தொடர்ந்துள்ளனர். இவர் எண்ணெய் ஆலை (Oil Mill) நடத்தி வருகிறார்.
பின்னணி:
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (Money Laundering) நடைபெற்றதா அல்லது வரி ஏய்ப்பு ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில், மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் இந்த சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
