தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், இன்று தோழமைக் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.


சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் இல்லத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் நேரில் சென்றனர். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, விசிக தலைவர் தொல். திருமாவளவனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்களுடனும் ஆலோசனை
அதனைத் தொடர்ந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) ஆகிய இடதுசாரி கட்சிகளின் மாநிலத் தலைமை அலுவலகங்களுக்குச் சென்றனர். அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரை காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்.
கூட்டணி பலத்தை உறுதிப்படுத்தும் நகர்வு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இச்சந்திப்புகளின் போது சமகால அரசியல் சூழல் மற்றும் கூட்டணி ஒற்றுமை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
