
கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று (10.07.2026) உரையாற்றிய முதலமைச்சர் விஜய் , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஆண்டு கரூரில் நடந்த துயரச் சம்பவத்தை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

”மக்களோடு நின்றது தளபதியும், உதயநிதியும்தான்!”
”கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக அன்றைக்குக் களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார் என்பது ஒட்டுமொத்த கரூர் மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
அன்று விபத்து குறித்த செய்தி கிடைத்த உடனேயே, கரூருக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உடனடி உயர்சிகிச்சை கிடைக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

”தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, பேச்சைத் தொடர்ந்தது யார்?”
“அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறி மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், மேடையிலிருந்து வெறும் தண்ணீர் பாட்டிலை மட்டும் வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
”பத்திரிகையாளர்கள் சொல்லியும் பார்க்காமல் ஓடியது யார்?”
மேலும், “திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் கூடி, கரூரில் இத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறிய பிறகும், பாதிக்கப்பட்ட தன் சொந்த மக்களை நேரில் சென்று பார்க்கக் கூட மனமில்லாமல், உடனடியாகத் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு மிக நன்றாகத் தெரியும்” என முதலமைச்சர் விஜய்யின் பழைய சம்பவத்தைக் குறிப்பிட்டுச் செந்தில் பாலாஜி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
