Homeசெய்திகள்தலையங்கம்ஓரணியில் திமுக - தவெக; திருமாவின் அரசியல் ஆலோசனை ஆபத்தானது: திமுகவை தற்கொலைக்குத் தூண்டும் செயல்.

ஓரணியில் திமுக – தவெக; திருமாவின் அரசியல் ஆலோசனை ஆபத்தானது: திமுகவை தற்கொலைக்குத் தூண்டும் செயல்.

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய தமிழ்நாடு அரசியல் களம் இதுவரை கண்டிராத பல புதிய திருப்பங்களையும், வியூகங்களையும் சந்தித்து வருகிறது. தேர்தல் முடிந்து அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் முன்வைத்துள்ள “திமுக – தவெக இணைய வேண்டும்” என்ற புதிய அரசியல் ஆலோசனை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த ஆலோசனை திமுகவை அரசியல் ரீதியாக தற்கொலைக்குத் தூண்டும் ஒரு முயற்சி என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசியல்

we-r-hiring

845 நாட்களில் அரியணை ஏறிய தவெக: மாறிய அரசியல் களம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்ட வெறும் 845 நாட்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, 108 இடங்களில் அபார வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அசுர வளர்ச்சி தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, “திமுக ஒரு தீயசக்தி” என்ற ஒற்றை முழக்கத்தை முன்னிறுத்தி, மிகக் கடுமையான திமுக எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுதான் தவெக வாக்குகளை அறுவடை செய்தது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின், தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத்தான் தவெக தற்போது ஆட்சி நடத்தி வருகிறது.

வாயளவில் பாஜக எதிர்ப்பு: திரைமறைவில் டெல்லி ஆதரவு?
​தவெக தனது கொள்கை எதிரி பாஜக என்று மேடைகளில் வாயளவில் சொல்லிக் கொண்டாலும், நடைமுறையில் இதுவரை ஒரு இடத்தில் கூட பாஜகவை தவெக எதிர்க்கவில்லை என்பதுதான் யதார்த்தம். மாறாக, பாஜகவின் மறைமுக தயவுடன்தான் தவெக ஆட்சி நடத்துகிறது என்பது விபரம் அறிந்த அனைவருக்கும் தெரிந்த பகிரங்க ரகசியமாக உள்ளது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களைத் தமிழ் மண்ணில் இருந்து அழிப்பது, அந்த கொள்கை வழியில் இயங்கி வரும் திமுகவை அரசியல் ரீதியாக நிர்மூலமாக்குவது என்பதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் நீண்டகாலச் செயல்திட்டம். டெல்லியின் இந்த வழிகாட்டுதலைத்தான் தவெக தற்போது மிக அழகாகத் தமிழ்நாட்டில் அரங்கேற்றி வருகிறது.
​சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாக இருந்த பாஜக எதிர்ப்பு மனநிலை மற்றும் பிரச்சாரங்கள், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது இதன் முதற்கட்ட நகர்வே ஆகும்.

விசிக-வை ஆட்டிப்படைக்கும் ‘அதிகார ஆசை’
​இந்தத் திரைமறைவு அரசியல் நகர்வுகள் அனைத்தையும் நன்கு அறிந்திருந்தும், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் வெறும் அதிகார ஆசைக்காக தவெக-வுடன் இணக்கமாகி, தற்போது பிரிக்க முடியாத அளவிற்கு ஐக்கியமாகி விட்டன.
​இனிமேல் விசிக தலைவர் திருமாவளவனே நினைத்தாலும், அக்கட்சியினரை தவெக கூட்டணியில் இருந்து பிரிக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு அதிகார வெறியும், பதவியின் சுகமும் அந்தந்தக் கட்சியினரின் அடிமட்டம் வரை ஊடுருவி விட்டன என்பதே கசப்பான உண்மை.

திமுகவிற்குப் பாடம் நடத்தும் திருமா: ஆபத்தான வியூகம்
​பாஜக எதிர்ப்பு நிலையில் தவெக உண்மையிலேயே இருக்கிறதா? அதன் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன? என்பதே இன்னும் தெளிவடையாத நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தற்போது திமுகவிற்கு அரசியல் வகுப்பெடுக்கத் தொடங்கியுள்ளார்.
​காலாகாலமாகத் தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அரசியலையே தங்களின் முதன்மைக் கொள்கையாகப் பிரகடனம் செய்து, அதையே தேர்தல் களத்தில் பேசி வரும் திமுக-வுடன் தவெக-வும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருமா புதிய ஆலோசனையை வழங்கி வருகிறார்.

ஆர்எஸ்எஸ் – பாஜகவின் ஆலோசனையில் இயங்கி வரும் தவெக, முதற்கட்டமாக திமுக கூட்டணியில் வலுவாக இருந்த தோழமைக் கட்சிகளைப் பிரித்துத் தன் பக்கம் இழுத்தது. அதன் தொடர்ச்சியாக, அக்கூட்டணியில் இருந்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது ‘ஆலொசனை’ என்கிற பெயரில் திமுகவையே முற்றிலுமாக முடக்கி, தற்கொலைக்கு ஆளாக்கும் ஆபத்தான முயற்சியில் இறங்கியுள்ளார். இதுவும் பாஜக ஆலோசனையாகக்கூட இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது.

பாஜகவை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் திருமாவளவன் முன்வைக்கும் இந்த அரசியல் வியூகம், திமுகவிற்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் சமூகநீதி அரசியலுக்கே பேராபத்தானது.

MUST READ