உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தாகத்திற்கு குடித்த தண்ணீர்:
ஹாபூர் அர்ஜுன் நகர் பகுதியில் பெண் ஒருவர் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவருக்குத் தாகம் எடுத்ததால், தனது கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அந்த ஊழியர், பக்கத்தில் இருந்த மிட்டாய் கடை ஒன்றின் குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார்.
தொண்டை எரிச்சல் – அதிர்ச்சி பின்னணி:
பாட்டிலைத் திறந்து அந்தப் பெண் ஒரு மடக்கு குடித்த உடனே, அவருக்குத் தொண்டையில் பயங்கர எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அந்தப் பாட்டிலை எடுத்து ஆய்வு செய்தபோது, அதில் இருந்தது குடிநீர் அல்ல, ஆபத்தான ஆசிட் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை – வாட்டர் கேன்கள் பறிமுதல்:
இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த போலீஸார், பாட்டில் வாங்கி வந்த ஊழியரிடம் விசாரணை நடத்தினர். அவர் பக்கத்து மிட்டாய் கடையிலிருந்து பாட்டிலை வாங்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் புகழ்பெற்ற மிட்டாய் கடையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான சீலிடப்பட்ட வாட்டர் கேன்கள் மற்றும் பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். புகழ்பெற்ற நிறுவனத்தின் சீலிடப்பட்ட பாட்டிலுக்குள் ஆசிட் எப்படி வந்தது? இது ஏதேனும் திட்டமிட்ட சதியா அல்லது பேக்கிங் செய்யும்போது நடந்த தவறா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
