தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசக்கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களின் தரம் குறித்தும், சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்தும் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

பெ.சண்முகம் ஆற்றிய காரசார உரை:
மானியக் கோரிக்கை தாண்டி வாய்ப்பில்லை: இடதுசாரிக் கட்சியின் உறுப்பினர்கள் எப்போதும் மக்கள் நலன் மற்றும் மானிய கோரிக்கைகளைத் தவிர தேவையில்லாத வேறு எதையும் பேரவையில் பேசுவதில்லை. ஆனால், அத்தகைய பொறுப்புமிக்க உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கே வாய்ப்பு தரப்படாத ஒரு சூழல் தான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிலவுகிறது.
அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: இருதரப்பும் மோதிக்கொள்ளும் போது இரண்டு பேர் பேசுவதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டால், அதுதான் சபாநாயகரின் நடுநிலையான செயல்பாடா? தவறு செய்பவர்களையும், மக்கள் பிரச்சனையப் பேசுபவர்களையும் ஒரே தராசில் நிறுத்துவது நடுநிலையாகாது.
குழாய் அடி சண்டை: மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பேசி தீர்வுகாண வேண்டிய சட்டமன்றத்தில், ஆரோக்கியமான விவாதங்களுக்குப் பதிலாக குழாய் அடி சண்டையைப் போல காரசாரமாக மோதிக்கொள்வது தேவைதானா?
ஜனநாயகப் பண்புகள் காப்பாற்றப்பட வேண்டும்
மாநிலத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் பேரவையில், சிறிய கட்சிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் ஜனநாயக மரபுகளையும் சபாநாயகர் நடுநிலையோடு காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
