விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போன சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி காணாமல் போய் 40 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவரைக் குறித்த உறுதியான தகவலோ, வழக்கில் முக்கியத் தடயமோ கிடைக்காததால், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்றுடன் 30வது நாளாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை வடிவேலை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் சுமார் 5 மணி நேரம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா ஆகியோரிடமும் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, நேற்று சிறுமியின் பாட்டி சாந்தியிடம் அவர் பயின்ற பள்ளியில் வைத்து சுமார் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமியின் தாய் பவானியிடமும் டிஎஸ்பி வேல்முருகன் மீண்டும் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, எதிர்வீட்டுப் பெண் மஞ்சுளாவின் உறவினர் என்று கூறப்படும் கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ரேணு என்ற இளைஞர் உள்ளிட்ட 10 பேரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி காணாமல் போன வழக்கில் இதுவரை உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 18 நாட்கள்: சிபிசிஐடி போலீசாருக்குப் புதிய துப்பு!
