Homeசெய்திகள்சென்னைபில்லி சூனியம் செய்வதாகக் கூறி குடும்பத்தையே மிரட்டி ரூ.56 லட்சம் பறிப்பு: அகில பாரத இந்து...

பில்லி சூனியம் செய்வதாகக் கூறி குடும்பத்தையே மிரட்டி ரூ.56 லட்சம் பறிப்பு: அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலாளர் கைது!

-

- Advertisement -

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினரிடம் பில்லி, சூனியம் மற்றும் பரிகார பூஜைகள் செய்வதாகக் கூறி, சுமார் நான்கு ஆண்டுகளாக மிரட்டி ரூ.56 லட்சம் பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கும்பகோணத்தைச் சேர்ந்த அகில பாரத இந்து மகா சபாவின் பொதுச் செயலாளர் ராம நிரைஞன் (45) என்பவரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தையில்லாததால் பரிகார பூஜைகளை நாடிய தம்பதி

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவருக்கும், காயத்திரி (38) என்பவருக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எம்.பி.ஏ. படித்த காயத்திரிக்கு இதுவரை குழந்தை இல்லை. இருவரும் தங்களது தாய்மார்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், தம்பதியினர் கோயில்களுக்குச் சென்று பூஜைகள் மற்றும் பரிகாரங்களைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

விளம்பரப் பதாகை மூலம் அறிமுகமான நபர்

அவ்வாறு ஒருமுறை கும்பகோணத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த விளம்பரப் பதாகையில் இடம்பெற்றிருந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டுள்ளனர். அப்போது பேசிய ராம நிரைஞன், பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அவர் மேலும் இருவருடன் நங்கநல்லூரில் உள்ள தம்பதியின் வீட்டிற்குச் சென்று பூஜை செய்துள்ளார். அதன்பிறகு காயத்திரியின் செல்போனுக்கு வாட்ஸ் அப் அழைப்புகள் மூலம் தொடர்புகொண்டு குடும்ப விவரங்களைச் சேகரித்ததாகவும், தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பணம் கேட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலியை அடகு வைத்து தொடங்கிய பணம் கொடுக்கும் நிலை

முதலில் காயத்திரி தனது தாலியை அடகு வைத்து ரூ.45 ஆயிரம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தாலியை விற்று பணம் கொடுக்குமாறு கூறியதுடன், சிறுகச் சிறுக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் புகார் தெரிவிக்கிறது.

காயத்திரியின் தாயார் ஓய்வூதியம் பெறுபவர் என்பதை அறிந்துகொண்ட ராம நிரைஞன், அவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் பெற்றதாகவும், வீடு விற்று கிடைத்த பணத்தையும் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், காயத்திரியின் கணவர் லாரி மோதி உயிரிழந்துவிடுவார் என அச்சுறுத்தி, குடும்பத்தினரிடமிருந்து மொத்தம் ரூ.56 லட்சம் வரை பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் கொடுப்பதை நிறுத்தியதால் கொலை மிரட்டல்

கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் பணம் கொடுப்பதை நிறுத்தியபோது, குடும்பத்தையே காலி செய்துவிடுவதாகவும், தாயாருக்கு கை, கால்கள் செயலிழந்துவிடும் என்றும், குடும்பத்தினர் அனைவரும் நோய்வாய்ப்படுவார்கள் என்றும் ராம நிரைஞன் மிரட்டியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர், நண்பர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காயத்திரி புகார் அளித்தார்.

போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பழவந்தாங்கல் போலீசார், ராம நிரைஞனை கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 308(2), 318(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

காயத்திரி வேதனை

இந்தச் சம்பவம் குறித்து காயத்திரி கூறுகையில், படித்தவரான தானே கோயிலுக்குச் சென்றபோது பரிகார பூஜை செய்வதாக அறிமுகமான நபர்களிடம் ஏமாந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

குடும்பத்தில் நாளுக்கு நாள் விபரீதங்கள் ஏற்படும் என்றும், பில்லி சூனியம் எடுக்க வேண்டும் என்றும் கூறி குடும்பத்தினரின் பண விவரங்களை அறிந்துகொண்டு ரூ.56 லட்சம் பறித்ததாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், அந்த நபர் மிரட்டும்போதெல்லாம் குடும்பத்தினருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால் அச்சத்தில் அவர் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலை உருவானதாகவும் தெரிவித்தார்.

பணம் கொடுக்க மறுத்தபோது மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறிய காயத்திரி, தன்னைப் போன்று வேறு யாரும் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என வேதனையுடன் தெரிவித்தார்.

சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 72.24 கிலோ ஹெராயின் பறிமுதல் – ஐஸ்கிரீம் வாகனத்தில் கடத்த முயன்ற இருவர் கைது!

MUST READ