தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தனியார் சட்டக்கல்லூரிகளில் மேற்கொண்ட அங்கீகார ஆய்வில் மோசடி என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகம் சார்பில், தனியார் சட்டக்கல்லூரிகளில், முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது இல்லை, மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை மேலும் பேராசிரியர்கள் பெயரளவிற்கு கணக்கு காண்பிக்கப்படுகிறார்கள் மற்றும் வகுப்புகளுக்கு உரிய பேராசிரியர்கள் இல்லை என்ற புகார்கள் அறப்போர் இயக்கத்திற்கு வந்தது.

அதை தொடர்ந்து சட்டப்பல்கலைக்கழகத்திற்கு RTI தொடுத்து தனியார் சட்டக்கல்லூரிகள் ஆய்வு செய்த தேதி மற்றும் குழு உறுப்பினர்கள், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் விவரங்கள் பற்றிய தகவல்களை பெற்றோம். அப்படி பெறபட்ட RTI தகவல்களில், அங்கீகார ஆய்வில் மோசடி நடைபெற்றதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக தெரிகிறது.
RTI தகவல் படி, 2024 – 25 மற்றும் 2025 – 26 ஆகிய இரு கல்வி ஆண்டுகளுக்கான இணைவு ஆய்வு கடந்த 30.01.2024, 31.01.2024 மற்றும் 01.02.2024 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழுவினர் 3 நாட்களில் சுமார் 1200 கிமீ மொத்தமாக பயணித்து 10 தனியார் சட்டக் கல்லூரிகளை நேரடியாக ஆய்வு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டப்படி (The Tamil Nadu Dr.Ambedkar Law University (Affiliation of Law Colleges) Regulations, 2013) , ஒவ்வொரு தனியார் சட்டக்கல்லூரிகளை ஆய்வு செய்ய ஒரு முழு நாள் தேவையிருக்கும் நிலையில், ஒரே நாளில் 3 முதல் 4 தனியார் சட்டக்கல்லூரிகளை ஆய்வு செய்துள்ளனர். 10 கல்லூரிகளுக்கு இடையிலான தூரம் மற்றும் பயணம் கழித்து, ஒரு கல்லூரியின் ஆய்வு நேரம் கணக்கீடு செய்தால், சராசரியாக 7 நிமிடங்களுக்கு ஒரு தனியார் சட்டக்கல்லூரி ஆய்வு என்பது எப்படி சாத்தியம்?
எனவே, இது குறித்து விரிவான புகார் மற்றும் RTI இல் பெறப்பட்ட ஆதாரங்கள் இணைத்து, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், ஆளுநர் R.N.ரவி, சட்டத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், முன்னாள் நீதிபதி V.பாரதிதாசன் (convenor – convenor committee), துறைச்செயலர் திரு. S.ஜார்ஜ் அலெக்சாண்டர், இயக்குநர் – ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் மற்றும் திரு.P.S.அமல்ராஜ் (தலைவர் : தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில்) ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறோம். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளாா்.
பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படம்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!