மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி புல் பிளான்ட் (Pull plant) பகுதிகள் மற்றும் அதன் அருகிலுள்ள விவசாயப் பாசனப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சுத்திகரிப்பு நீரை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு, வெள்ளக்கல் பகுதியில் மட்டும் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் மாட்டுத் தீவனப் புல், கீரை மற்றும் காய்கறி விவசாயம் தடையின்றி நடைபெற்று வந்தது.

சுத்திகரிப்பு நீர் நிறுத்தம்: கண்மாயில் வீணாகும் அவலம்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக விவசாயப் பாசனத்திற்கு வழங்கப்பட்டு வந்த சுத்திகரிப்பு நீரை மாநகராட்சி நிர்வாகம் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் முறையான நீரின்றி விவசாயப் பயிர்கள் கருகத் தொடங்கின. இதுமட்டுமன்றி, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய சுத்திகரிப்பு நீர், அருகிலுள்ள கண்மாயில் கலந்து வீணாக வெளியேற்றப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி வேதனை தெரிவித்து வந்தனர்.

விவசாய நிலங்களுக்குப் பரவிய தீ: 36 ஏக்கர் பயிர்கள் நாசம்
இச்சூழலில், நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால், குப்பைக் கிடங்கில் எரிந்த தீ கடகடவெனப் பக்கத்து நிலங்களுக்கும் பரவியது. இதனால் குப்பைக் கிடங்கை ஒட்டியுள்ள மாநகராட்சி புல் பிளான்ட் பகுதி உட்பட சுமார் 36 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தீ புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த மாட்டுத் தீவனப் புற்கள் மற்றும் பிற விவசாயப் பயிர்கள் அனைத்தும் தீயில் கருகி முற்றிலும் சாம்பலாகின.
நீர் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் திணறல்
தீ வேகமாகப் பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், அதனை அணைக்கப் போராடினர். ஆனால், அப்பகுதியில் பாசன நீர் நிறுத்தப்பட்டிருந்ததால், தீயை அணைக்கப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். மேலும், குப்பைக் கிடங்கு தீயினால் ஏற்பட்ட அடர்ந்த நச்சுப் புகை மூட்டம் காரணமாக விவசாய நிலங்களுக்குள் ஆட்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், பயிர்கள் கண் முன்னே எரிவதைக் கண்டும் ஏதுமறியாது விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

”வழக்கம்போல் சுத்திகரிக்கப்பட்ட நீர் விவசாயத்திற்குத் தடையின்றி வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தியே பயிர்களில் பரவிய தீயை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி, இவ்வளவு பெரிய சேதத்தைத் தடுத்திருக்க முடியும்” என வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி திசை கண்ணன் செய்தியாளர்களிடம் வேதனையுடன் தெரிவித்தார்.
அரசுக்கு கோரிக்கை
தற்போது ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவனப் புற்கள் மற்றும் விவசாயப் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் சுத்திகரிப்பு நீரைத் தடையின்றி விவசாயப் பாசனத்திற்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
