Homeசெய்திகள்தேர்தல் 2026தவெக வேட்பாளர்கள் மீது குவியும் புகார்கள்...விஜயின் தூய சக்தி வசனம் என்ன ஆனது?

தவெக வேட்பாளர்கள் மீது குவியும் புகார்கள்…விஜயின் தூய சக்தி வசனம் என்ன ஆனது?

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது புகார்கள் குவிந்துள்ளது. தவெக ஒரு தூய சக்கி என கூறும் விஜய் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பிவருகினறனர்.

தவெக வேட்பாளர்கள் மீது குவியும் புகார்கள்...விஜயின் தூய சக்தி வசனம் என்ன ஆனது?

we-r-hiring

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்த வேட்பாளர் பட்டியல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக சில வேட்பாளர்களின் பின்னணி மற்றும் முன்பு வெளியான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.

ஆண்டிப்பட்டி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.பாண்டி, பெண்களை தரக்குறைவாக விமர்சித்ததாக முன்பு சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் அவரின் தேர்வு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நெல்லை தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் கனிமொழி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜோதிடம் மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என கூறியதற்காக சர்ச்சையில் சிக்கியதுடன், போலியான பிஎச்டி பட்டம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இல்லாத பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறி மக்களை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மரிய வில்சன் மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடு புகுந்து தாக்குதல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை வேட்பாளராக அறிவித்தது குறித்தும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

மேலும், பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் சந்திரகாண்டிபன் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கஞ்சா கடத்தல் வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தவரை வேட்பாளராக அறிவித்தது அங்கு கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் அறிவிக்கப்பட்ட மதன் மீது பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கட்சி தலைவர் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில், “நான் ஜாதி வெறியன்” என கூறியதாக சர்ச்சையில் சிக்கிய ஜெகநாத் மிஸ்ரா கம்பம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

இதனுடன், தவெக தலைவர் விஜய் தனது கட்சி ஒரு மாற்று அரசியல் சக்தி என்றும் தூய அரசியல் நடத்துவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அறிவிக்கப்பட்ட 106 வேட்பாளர்களில் பலர் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒவ்வொரு வேட்பாளரையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தேர்வு செய்ததாக விஜய் கூறிய நிலையில், அவருக்கு தெரியாமல் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறி கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் விவாதத்திற்கு இடமளித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் தேர்வு முறையே தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமான விவாதமாக மாறியுள்ளது.

பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…

MUST READ