Homeசெய்திகள்தேர்தல் 2026'' நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கி...

” நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு முழு தடை”

-

- Advertisement -

நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்த தடை. டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்யவும் தடை. வாக்காளர் அல்லாதோர் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். பிரசார வாகனங்களுக்கான அனுமதி நாளை மாலையுடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

'' நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு முழு தடை”

we-r-hiring

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது. கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் சூடுபிடித்திருந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு, பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், வீடு தேடி வாக்கு சேகரிப்பு போன்ற செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வழக்கமாக முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுவதால், வாக்குப்பதிவு இயந்திரங்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்ற கருத்தை கட்சிகள் முன்வைத்தன. இதனை ஏற்று, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட தேதிக்கு பதிலாக ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1977-ம் ஆண்டுக்கு பிறகு பெரும்பாலும் இருமுனைப் போட்டி நிலவிய நிலையில், இம்முறை திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் மோதும் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. இது தேர்தலின் அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடாக 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸார் என மொத்தம் 4.74 லட்சம் பேருக்கு இரு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தபால் வாக்குகளும் வழங்கப்பட்டு, தொடர்புடைய தொகுதிகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய அளவிலும் பல முக்கிய தலைவர்கள் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தனர்.

இந்நிலையில், நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்ததும், 48 மணி நேர அமைதிக் காலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நேரடி மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படும். தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழியாகவும் அரசியல் விளம்பரங்கள் வெளியிட அனுமதி இல்லை.

மேலும், ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக, ஏப்ரல் 23-ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு, 22-ம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட உள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தத் தேர்தல், வாக்காளர்களின் இறுதி தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ரூ.25,000 பணம்…வெள்ளை தாலில் சில பெயர்கள் – அதிமுக பிரமுகரை மடக்கி பிடித்த பறக்கும் படை…

MUST READ