சீமான் தன்னுடைய பெரியார் என்று சொல்பவர்களுக்கு எல்லாம், பெரியார் தான் பெரியார் என்று திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறையில் திராவிடர் மாணவர் பேரவை சார்பில் “பெரியார் ஒருவர்தான் பெரியார்” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு பேசியதாவது:- சீமான் பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பதாக சொல்கிறார். சீமான் என்கிற கடப்பாரையே, பெரியாருக்கு பல் குத்தும் குச்சிதான். சீமானுக்கு பெரியார் பெரியார் கிடையாதாம். அவருக்கு ராமதாஸ், திருமாவளவன் தான் பெரியார் என்று சொல்கிறார். ஆனால் அவர் யாரை எல்லாம் பெரியார் என்று சொன்னாரோ, அவர்களுக்கு பெரியார் தான் பெரியார். அதிமுகவில் இருந்து போய் தவெகவில் இணைந்தவர்கள் எல்லாம் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தை, தணிக்கை குழு பார்த்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. விஜயை முடக்க முயற்சிகள் நடப்பதாக சி.டி.நிர்மல்குமார் சொல்கிறார். தணிக்கை சான்றிதழ் கொடுப்பது மத்திய அரசு. நீங்கள் அவசரத்துக்கு பார்ட்னரையே திட்டுகிறீர்கள். இவ்வளவு பேசுகிற தவெகவினர், தங்களின் கொள்கை தலைவரான பெரியார் குறித்து ஒருவர் விமர்க்கும்போது வாய்திறக்கவில்லை. ஏனென்றால் அந்த கட்சியில் யாருக்கும் பெரியாரை தெரியாது. வெறும் பெரியாரை மட்டும் சொன்னால் தெரியாது என்று யாரோ சொன்னதால் தற்போது அண்ணாவையும் சேர்த்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் இறந்த 53 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரை இன்னும் பேசி கொண்டிருப்பது அவ்வளவு பெருமைக்குரிய விஷயம் அல்ல. இன்னும் அவருடைய பெயரை சொன்னால் எதிரிகள் எல்லாம் பயந்து நடுங்கி பதறுவது தான் பெருமையாகும். எப்போதும் எவரால் ஒருவர் கோட்டை தகர்க்கப்படுகிறதோ, அவர்கள் வெஞ்சினம் கொண்டு காத்திருப்பார்கள். எப்படியாது ஏதவாது செய்து விட முடியாதா? என்று காத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றனர். காரணம் அவர்கள் எடுப்பது எல்லாம் அட்டை கத்தி. இன்றைக்கு எடுத்திருக்கும் கத்தி சீமான்.
அடுத்த தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா பக்கமும் கம்பு சுத்துகிறார்கள். தற்போது சீமானுக்கு இருக்கும் பதற்றம் என்பது, தன்னிடம் உள்ள பைத்தியக்கார கூட்டத்தை விஜய் கடத்திவிட்டு போய்விடுவாரோ என்கிற பயம்தான். சீமான் தலைவராகிய பிரபாகரனுடன் இருந்த கவிஞர் காசி ஆனந்தன் சொன்ன வார்த்தை தான் பெரியார் ஒருவர் தான் பெரியார். அவருடைய கவிதைதான் அது.

பெரியாருக்கு ஒருநாளும் பிராமணர்கள் மீது எதிர்ப்பு கிடையாது. ராஜாஜி இறுதிச்சடங்கில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்த பெரியார், அங்கு குடியரசுத் தலைவர் வி.வி.கிரி வந்ததால் தன்னுடைய நாற்காலியை அவரிடம் வழங்கும்படி சொன்னார். அவர் பிராமணர் என்பதை விட இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் என்று பார்த்தார். திமுக அரசின் திட்டங்களை நகல் எடுக்காத மாநிலங்களே இல்லை. எந்த மாநிலத்திலும் மகளிர் உரிமைத் தொகை இல்லாமல் இல்லை. எப்படி பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய முடியாதோ, அதேபோல் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை எந்த அரசாலும் ரத்து செய்ய முடியாது.
இதேபோல், நாம் அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை மற்ற மாநிலங்கள் எல்லாம் நகல் எடுக்கப் போகின்றன. இந்த திட்டத்தை காஷ்மீரில் நல்ல திட்டம் என வரவேற்றுள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல படிக்க வேண்டும். அறிவு வேண்டும். எனவே சீமான் சொல்வதை எண்டர்டெய்ன்மென்ட் ஆக பார்த்துக் கொண்டு, முதலமைச்சர் சொல்வதை போன்று வெல்வோம் 200 படைப்பாம் வரலாறு என்பதை நோக்கி நகர்வோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


