spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒரே சீட்டில் அமித்ஷா திட்டம் காலி! தேமுதிகவை தூக்கிய ஸ்டாலின்!

ஒரே சீட்டில் அமித்ஷா திட்டம் காலி! தேமுதிகவை தூக்கிய ஸ்டாலின்!

-

- Advertisement -

அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள தேமுதிகவை, திமுக கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருகிறது. அதற்காக செல்வப்பெருந்தகை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக – தேமுதிக இடையே ஏற்பட்டுள்ள உரசல்கள் குறித்தும், திமுகவுடன் பிரேமலதா நெருக்கம் காட்டுவதன் பின்னணி குறித்தும் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வாழ்த்து கூறியுள்ளார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்துள்ளார். விஜயகாந்த் தொடக்கத்தில் திமுக உடன் தான் நெருக்கமாக இருந்தார். 2011ல் அதிமுக கூட்டணிக்கு போகிறபோது கூட கலைஞரையோ, திமுகவையோ பெரிதாக விமர்சிக்கவில்லை. 2016ல் மக்கள் நலக்கூட்டணி என்கிற தவறான முடிவை எடுத்தார். விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். விஜயகாந்தின் இறுதிச்சடங்கிற்கு கூட திமுக அரசு பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. பிரேமலதா இங்கிதம் இல்லாமல் அறிக்கைகளை வெளியிட்டார். எனினும் திமுக விஜயகாந்துக்காக அதன் பொருட்படுத்தவில்லை. விஜயகாந்த் இருந்திருந்தால் திமுக கூட்டணி அமைந்திருக்கும்.

விஜயகாந்த் - மு.க.ஸ்டாலின்

தற்போதைய நிலையில் மாநிலங்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் போட்டியிடுகிறார்கள். திமுக 7-வது வேட்பாளரை நிறுத்தியிருந்தால், போட்டி ஏற்பட்டிருக்கும். ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக அப்படி ஒரு ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்ததா? என்று சரியாக தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியும் அதை மறுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறுகிற மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு இடம் தருகிறேன் என்று கே.பி.முனுசாமி சொல்கிறபோதே அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கனிமொழி சோமு, திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ போன்றவர்களின் பதவிக்காலம் முடிகிறது. அப்போது திமுக 4 இடங்களில் வென்றுவிடும். அதிமுகவுக்கு இருக்கிற 2 இடங்களில் தேமுதிகவுக்கு தருவதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் தங்கள் சொந்த கட்சியினருக்கே இடங்களை தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தேமுதிக இப்போதே கூட்டணியை உறுதி செய்திட வேண்டும். இம்மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்திட வேண்டும் என்று அமித்ஷா விரும்புகிறார் என்று பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. கூட்டணி முடிவுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி வரை காத்திருக்க முடியாது என்று அதிமுக – பாஜக தெரிவித்துள்ளது. அதன் பிறகு தொகுதிகள் குறைந்துவிடும். கூட்டணி வாய்ப்புக்கான கதவுகள் அடைக்கப்படும் என்று மிரட்டும் தொனியில்தான் அந்த செய்தி அமைந்திருந்தது. அப்போது அதிமுக ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

சில சமிக்ஞைகள் கிடைத்தன. ஒன்று திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானத்திற்கு பிரேமலதாக நன்றி தெரிவித்தார். மற்னொன்று கலைஞர் பிறந்த நாளுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது  திமுக  தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை ஒட்டிதான் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். பொதுவாக கூட்டணிகளில் பெரிய கட்சிகள், சின்ன கட்சிகள் மூலம் சொல்லி கூட்டணிக்கு அழைப்பு விடுப்பார்கள். அந்த வகையில் தேமுதிக பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்கிற செல்வப்பெருந்தகையின் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்தியா கூட்டணி என்றால் தமிழ்நாட்டில் தேமுதிக கூட்டணிதான். தேமுதிக அடுத்த ஒரு சில நாட்களில் முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தேமுதிகவை பொறுத்தவரை நடப்பு தேர்தலில் போதிய சதவீத வாக்குகளை வாங்கா விட்டால் அவர்களது கட்சியின் அங்கீகாரமும், சின்னமும் போய்விடும் அபாயம் உள்ளது. தேமுதிகவுக்கு தற்போது மாநில கட்சியாக அங்கீகாரம் உள்ளது. எதிர்வரும் தேர்தலில் தோற்றால் அங்கீகாரம் போய்விடும். குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளை வாங்கினால்தான் அங்கீகாரம் கிடைக்கும். தேமுதிக 2026ல் திமுக கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு ராஜ்யசபா இடம் கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான். 4 எம்.பி பதவிகள் காலியாகிறபோது, அதில் 3 பேருக்கு மீண்டும் வழங்கிட வேண்டும். ஒருவர் வேண்டுமானால் புதுமுகமாக இருக்கலாம். அதுவும் சிறுபான்மையின  பெண்ணாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அல்லது அந்தியூர் செல்வராஜுக்கு பதிலாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்படலாம். அதனால் தேமுதிக சட்டமன்ற இடங்களை கூடுதலாக கேட்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் தேமுதிக வர வேண்டும் என்று திமுக தலைமை விரும்புகிறது.

2024ல் பெற்ற வாக்கு சதவீதத்தை விட குறையக்கூடாது என்று திமுக  தலைமையின் திட்டமாக உள்ளது. அதிமுகவில் மக்களை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் இல்லை. எதார்த்தத்தில் கமல்ஹாசன் பேசுகிறபோது நட்சத்திர அந்தஸ்து உள்ளது. விஜயபிரபாகரன் பேசுகிறபோதும் நட்சத்திர அந்தஸ்து வரும். அதுபோக தமிழ்நாட்டின் தென் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் வாக்கு வங்கி உள்ளது. அதன் காரணமாக தான் விருதுநகர் தொகுதியில் அதிகளவு வாக்குகளை பெற்றார்கள்.

75 வயதான பழமையான திமுகவுக்கு வாக்காளர்களை ஈர்ப்பதற்கான திட்டங்கள் உள்ளன. அதிமுகவிடம் அந்த திட்டங்கள் இருக்கிறபோதும், மக்களை ஈர்க்கும் வசீகரம் கிடையாது. ஆனால் விஜயிடம் திட்டம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் வசீகரம் உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் வேறு யாரும் கிடையாது. அதனால் தமிழ்நாடு முழுவதும் அவர் ஒருவராக வர முடியாது. எல்லோரும் தங்களுடைய பிரச்சார யுக்திகளை மாற்றி அமைக்கிறார்கள். அதில் புதிய வரவாக தேமுதிக வருகிறபோது அதில் சின்ன உற்சாகம் கிடைக்கும். விஜயகாந்தின் மகன் வருகிறபோது முக்கியத்துவம் கிடைக்கும். இதெல்லாம் கணக்குபோட்டு தான் காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதை தொடங்கி வைத்துள்ளது செல்வப்பெருந்தகை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ