அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:- என்னுடைய நாடங்களிலேயோ, திரைப்படங்களிலேயோ யாரும் சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற ஒரு காட்சியை வைத்தது இல்லை. அண்ணாமலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு உள்ளார். ஒருவர் அரசியலுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் அரசியலே தெரியாமல் கோமாளியாக இருக்க வேண்டும் என்றால் அது அண்ணாமலைத்தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அண்ணாமலை ஏன் சாட்டையால் அடித்துக் கொள்கிறார். தமிழக சட்டம், ஒழுங்கிற்கு கவலைப்பட இவர் என்ன டிஜிபியா அல்லது முதலமைச்சரா?. நான் டெல்லிக்கு செய்தி அனுப்பியுள்ளேன். அண்ணாமலையை தலைவராக தேர்வு செய்தவர்கள் தான் சாட்டையால் அடித்துக்கொள்ள வேண்டும் என்று.
நல்ல வேளையாக நான் பாஜகவில் இருந்து வந்துவிட்டேன். இல்லாவிட்டால் என்னையும் கூப்பிட்டு சாட்டையால் அடித்திருப்பார்கள். பச்சை வேட்டியை கட்டிக்கொண்டு, வேலை கையில் தூக்கிக்கொண்டு வருவது யாரை ஏமாற்றும் வேலை. அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம் தான். நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சொன்னோன். 40க்கு பூஜியம். அவருக்கு நாக்கு மட்டும்தான் வேலை செய்கிறது. அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்றேன். அதுபோலவே பூஜியம் ஆகிவிட்டது.
அண்ணாமலை செருப்பு அணியமாட்டேன் என சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம். இனி அண்ணாமலை வாழ்க்கை முழுவதும் செருப்பு அணிய மாட்டார். நல்ல வேலை அவர் திமுக ஆட்சியை அகற்றும் வரை வரும் சட்டை அணியமாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் மிகவும் சிரமமாகி இருக்கும். சவுக்கால் அடித்துக் கொள்வதுதான் தகுதி என்றால் தமிழக பாஜகவுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தான் தலைவராக வேண்டும். அவர் படத்தில் நடனம் ஆடிக்கொண்டே சாட்டையால் அடித்துக்கொள்வார். அந்த அளவிற்கு எதார்த்தமாகவும் அண்ணாமலை செய்ய வில்லை. இந்த ஆட்சி அகற்றப்படாவிட்டால் தினமும் செறுப்பால் அடித்துக் கொள்வாரா? அல்லது மண்சோறுதான் சாப்பிடுவாரா?. தெருவில் சவுக்கால் அடித்துக் கொண்டு காசு வாங்குபவர்கள் கூட தங்களது உடலை வறுத்திக் கொண்டுதான் காசு வாங்குகின்றனர். அதேபோல், கம்பி மேல் நடப்பவர்களும் சிரமப்பட்டே பணம் பெறுகின்றனர்.ஆனால் அண்ணாமலையின் செயல் காரணமாக அவர்கள் மீதும் நமக்கு வெறுப்பு ஏற்பட வைத்துவிடுவார் போல உள்ளது. தமிழ்நாட்டு அரசியலுக்கு பிடித்த சாபக்கேடு அண்ணாமலை.
அண்ணாமலை தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒரு பாஜக கொடி ஏற்றுவோம் என்றார். கோவை கார் குண்டுவெடிப்பின்போது 60 இடங்களில் பொதுக்கூட்டம் போடுவதாக சொன்னார். முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார். ஆனால் அவ்வாறு போராட்டம் நடத்தவில்லை. அண்ணாமலை இந்த விவகாரத்தை வைத்து யாரிடமோ பணம் பறிக்க பார்க்கிறார். தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி போன்றது. விளம்பரத்தை பார்த்து மக்களே அலுவலகத்திற்குள் வந்தால்தான் உள்ளது. இவர்கள் மக்களிடம் செல்லாதவரை பாஜகவுக்கு ஒரு சதவீதம் அல்ல, ஒரு ஒட்டு கூட கிடைக்காது. கடந்த தேர்தலின்போது யாருக்கும் கிடைக்காத இடத்தில் இருந்து ஓட்டு கொண்டுவருவேன் என்று அண்ணாமலை சொன்னார். அப்படி என்றால் ஆந்திராவில் இருந்து வாக்குகளை கொண்டுவருவாரா?. அண்ணாமலை ஆர்மி, அண்ணாமலை அண்ணா என சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் ஆப்பிரிக்காவிலும் , வெளிநாடுகளிலும் தான் உள்ளனர். எதார்த்த அரசியலுக்கும், எதார்த்த கள நிலவரத்துக்கும் அண்ணாமலைக்கும் சம்பந்தமில்லை.
பச்சை வேட்டியை எல். முருகன் கட்டியதால் அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். அதேபோல் நாமும் பச்சை வேட்டி கட்டினால் நமக்கும் அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்று அண்ணாமலை எதிர்பார்க்கிறார். அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதை பார்க்கும்போது, காமெடியாக உள்ளது. அவரது ஒவ்வொரு செய்கையும், ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு முறையும் 100 ஒட்டு, ஆயிரம் ஒட்டு என பாஜகவில் இருந்த பிரிந்து சென்றுகொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.