அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயரை வைக்க தடை கோரிய சி.வி. சண்முகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை வைக்க தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் யாருடைய பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் அவருடைய பெயர் வைக்கப்பட்டது. சி.வி.சண்முகம் போன்ற அதிமுகவினர் எம்எல்ஏ ஆவதற்கும், பதவிகளை அனுபவிப்பதற்கும் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்தனர். பேனர்கள் வைப்பது எல்லாம் சாதாரண விஷயமாகும். ஜெயலலிதாவின் கார் டயர்களுக்கு வணக்கம் வைப்பது. ஹெலிகாப்டரை கும்படுவது என்று செய்தனர். அரசு திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரை வைக்க உயர்நீதிமன்றம் தடை வழங்கிய நிலையில், தற்போது அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும் சி.வி.சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்து உள்ளது.
சி.வி.சண்முகம் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு, அவரது பெயர் வைக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். எனினும் நீதிமன்றம் அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. விளம்பரங்களை வைத்துதான் அனைத்து கட்சிகளும் அரசியலே செய்கின்றன. எடப்பாடி பழனிசாமி தற்போது பணம் செலவு செய்து, அரசியல் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரே ஆட்சியில் இருக்கும்போது, அரசின் பணத்தில் செலவு செய்து பிரச்சாரம் செய்வார். பிரதமர் மோடி, அரசுப்பணத்தில் விளம்பரம் செய்யாவிட்டால் அவரை யார் என்றே மக்களுக்கு தெரியாது. கொரோனா தடுப்பூசி சான்றிதழிலேயே தன்னுடைய போட்டோவை வெளியிட்டார். தடுப்பூசிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு உள்ளது? எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படுத்தினார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு ரூ.500 பணம் மற்றும் 5 கிலோ அரசி கொடுத்து குடும்பக் கட்டுப்பாடு செய்தனர். அப்போது அனைத்து அரசுத்திட்டங்களிலும் எம்ஜிஆரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. அதனை திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அப்படி பட்ட ஒரு கட்சி தான் அதிமுக. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அனைத்து திட்டங்களுக்கும் அவருடைய பெயர் தான் வைத்தார்கள். ஆனால் அவர்கள் அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்கிறார்கள்.
திமுக சின்னத்தை பயன்படுத்துவதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள். அதேவேளையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இரட்டை இலை சின்னத்தை வைத்துவிட்டு, குதிரையின் இறக்கை என்று சொல்கின்றனர். விளம்பர வெளிச்சம் தேடுவதில் நாட்டிலேயே மோசமான கட்சி அதிமுக. கடந்த 1991-96ல் ஜெயலலிதாவை கன்னி மேரியாக காட்டினார்கள். கடும் விமர்சனத்திற்கு பிறகு கைவிட்டார்கள். 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக்காலம் என்பது சர்வாதிகார ஆட்சியாகும். இவர்கள் அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்கக்கூடாது என்று மனு தொடர்ந்து, வெற்றி பெற்றத்தை கொண்டாடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் பேனரில் அவருடைய புகைப்படத்தை பெரிதாக போட்டதற்காக பதவியையே இழந்தார். சி.வி.சண்முகத்தின் மனுவால் நீதிமன்றத்தின் நேரம்தான் வீணாகி இருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் தலையில் கொட்டி அனுப்பியுள்ளது. ஒரு வாரத்திற்குள் 10 லட்சம் பணம் கட்டுமாறு உத்தரவிட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடடிவக்கைக்காக பிரதமர் மோடிக்கே உத்தரபிரதேசத்தில் பல கட்அவுட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைவிடவா திமுக அரசு செய்தது மோசமானது? சி.வி. சண்முகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும்.
அதிமுகவின் இந்த செயலை, அதன் கூட்டணி கட்சியான பாஜகவே ரசித்து இருக்காது. காரணமாக நீதிமன்ற உத்தரவு காரணமாக மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்களையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். சி.வி.சண்முகத்தின் அவசரத்தால் இந்த அதிமுகவுக்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்த உடன் அதிமுக ஐ.டி. விங் பிரிவினரும், சமூகவலைதள இன்புலூயன்சர்கள் போன்றவர்களும் மிகவும் கொண்டாடினார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அனைவரது வாயிலும் மண்ணை போட்டுவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கோபத்திற்கு காரணம், ஏற்கனவே இதுபோன்று ஒருவர் மூலம் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.சண்முகம் மூலம் பொதுநல வழக்கு தொடர்கிறீர்களா என்று கண்டித்துள்ளார். இனிமேலாவது திருந்துவார்களா? என்று பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.