spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை மிரட்டிய பாஜக? தவெக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

விஜயை மிரட்டிய பாஜக? தவெக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

அதிமுகவை தாக்கி பேசியிருப்பதன் மூலம் அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணையமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் அதில் விஜய் உரையின் பின்னால் உள்ள அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், அப்படி அழுத்தத்திற்கு அடங்கிப் போகிற ஆள் தான் இல்லை என்றும் தெரிவித்தார். அதேவேளையில் அழுத்தம் இருப்பதாக தெரிந்தே வார்த்தையை விட்ட விஜய், பின்னர் சுதாரித்துக்கொணடு மக்களுக்கான அழுத்தம் என்று மாற்றினார். சிபிஐ விசாரணைக்கு அழைத்து அழுத்தம் தர வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதையும் பல்வேறு வழிகளில் விஜயை மிரட்டவும், உருட்டவும் வழிகள் உள்ளன. அது ஒரு விஷயமே இல்லை.

ஆக மொத்தம் அழுத்தம் வந்தது. அந்த அழுத்தங்களுக்கோ, வேண்டுகோள்களுக்கோ விஜய் செவிசாய்க்க வில்லை என்பதுதான், அவருடைய பேச்சில் தெளிவாக தெரிந்துவிட்டது. ஊழல் சக்தி என்கிற ஒரு வார்த்தையை அதிமுகவுக்கு எதிராக மற்றொரு முறை பயன்படுத்துகிறார். முன்பு மதுரை மாநாட்டிலேயே ஊழல்வாதிகள் என்று சொல்லிவிட்டார். அதிமுக மீதான தாக்குதலை மீண்டும் ஒருமுறை செய்ததன் மூலம், அதிமுக அணியில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என்பதை சொல்லிவிட்டார். இதன் மூலம் 4 அணிகள் உறுதியாகி உள்ளது.

காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை விஜய் மேற்கொண்டார். இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசாதீர்கள் என்று பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்கு கட்டுப்பாடுகளுக்கு விதித்து உள்ளனரே தவிர, இவர்களுடன்தான் கூட்டணி என்று சொல்லவில்லை. அதேநேரம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரசில் குழுஅமைத்து, அவர்கள் முதலமைச்சரை சந்தித்து பேசிய பிறகு காங்கிரஸ் கூட்டணியை விட்டு போகும் என்பது வாய்ப்பு குறைவு. தவெக சார்பில் காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கவில்லை என்று வெளியாகும் தகவல் தவறானது.

விஜயே நள்ளிரவில் ஒருவரை போய் சந்தித்து பேசினார். அவருக்கும் கூட்டணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எடப்பாடியும், அருப்புக்கோட்டை, விருதுநகரில் இருந்து காண்ட்ராக்டர் ஒருவரை வரவழைத்து 2, மூன்று மாதம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார். அவரால் முடியவில்லை. அடுத்து பாஜக தரப்பில் சில அழுத்தங்கள் தரப்பட்டதாக தகவல் உள்ளது. அதுவும் கைகூடவில்லை. திமுகவை தவிர எல்லோரும் விஜய்க்கு வலை வீசினார்கள். விஜயும் சிலருக்கு வலைவீசினார்.

சிபிஐ விசாரணை குறித்து விஜய் பேச கூடாது. அதேநேரம், ஜனநாயகன் விவகாரம் குறித்து விஜய் பேசி இருக்க வேண்டும். அதனால்தான் ஒரு தலைவருக்கு உரிய தலைமைப் பண்பு இன்னும் அவருக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேச முடியாது என்று சொல்வது காதில் பூசுற்றுகிற வேலையாகும். நீதி வெல்லும் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரா? அப்படி சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடுமா? ஜனநாயகன் படத்திற்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி என்று சொல்வது எந்த நீதியின் மாண்பை கெடுப்பது மாதிரி இருக்கும். இப்படி பயப்படும் ஒருவர் அரசியல் தலைவராக இருக்க முடியுமா?

பாஜக குறித்து விஜய் பேசாதது குறித்து ஒவ்வொரு தமிழர்களும் கேள்வி எழுப்ப வேண்டும். நமக்கான வாக்குகளை ஒவ்வொரு குடும்பத்திலும் உறுதிபடுத்த வேண்டும். அதை வாக்குச்சாவடியில் கொண்டுவந்து சேர்ப்பதற்கான வேலைகளை பாருங்கள் என்று விஜய் சொல்லியுள்ளார். யாருடனும் கூட்டணி இல்லை என்று விஜய் சொன்னது, அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று நினைக்கிற தவெக நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும்.

நீங்கள் எல்லாம் சுதந்திரம் முழுமனதோடு வேலை செய்யுங்கள், வேலை செய்ய விடுங்கள் என்றும் விஜய் சொன்னார். இதன் மூலம் கோஷ்டி பூசல் இருப்பதை உணர்ந்து பொதுமேடையில் உடைத்துள்ளார். விஜய்க்கு வாக்குகளை இல்லை என்று சொல்வதையும், அவருக்கு 40 சதவீதம் வாக்குகள் உள்ளது என்று சொல்பவர்களையும் நாம் புறந்தள்ளி விட வேண்டும். முதல் தேர்தலில் விஜய் தனியாக நின்றார் என்றால் இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் வரும் என்று கணிக்கலாம். அதிமுக தரப்பில் 41 பேர் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம் என்று ட்விட் போடப்பட்டுள்ளது.

தார்மிக பொறுப்பு. ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி முதல் நாளே கரூரில் இதை தெரிவித்திருக்க வேண்டாமா?. அரசியலுக்காக நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வீர்களா? விஜய் கூட்டணி வந்தால், அந்த 41 மரணத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை. கூட்டணிக்கு வராவிட்டால் அவரும் பொறுப்பு என்கிறார்கள்.  41 பேரின் உயிரை வைத்துக்கொண்டு இப்படி விளையாடலாமா? விஜய் தார்மிக பொறுப்பேற்க வேண்டும் என்று எந்த தலைவரும் சொல்லவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ