spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராகுலை மிரட்டும் தேர்தல் ஆணையர்! பீகாரில் திரளும் எதிர்க்கட்சிகள்!

ராகுலை மிரட்டும் தேர்தல் ஆணையர்! பீகாரில் திரளும் எதிர்க்கட்சிகள்!

-

- Advertisement -

அனைத்து தரப்பு மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தற்போது அதனை SIR நடவடிக்கை மூலம் வாக்குரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திருடப்பட்ட ஜனநாயகம் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் பேசியதாவது:- தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார், ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் தோள்களில் துப்பாக்கியை வைத்து மத்திய அரசை நோக்கி சுடுவதாக சொல்கிறார். உண்மையில் இந்தியாவின் தலைமை கணக்காளரின் தோளின் மீது துப்பாக்கியை வைத்து மோடி, காங்கிரசை சுட்டார். 2ஜி ஊழலை நாம் பலரும் நம்பினோம். ஊழல் ஒழிப்பு என்கிற அந்த நாடகம் அரங்கேறியது. அதன் பிறகு வினோத் ராய், உரிய பதவியை வாங்கிக் கொணடு போய்விட்டார்.

இன்றைக்கு பாஜகவுக்கு எதிராக களம் காண்கிற யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்றவர்கள் அந்த பக்கம் போய் நின்றார்கள். அந்த அளவுக்கு அவர்களால் கருத்து உருவாக்கம் செய்ய முடிந்தது. இப்படிதான் மோடி பதவிக்கு வந்தார். அதன் பிறகு குடியுரிமை திருத்த சட்டம், புல்டோசர் நீதி, மணிப்பூர் பிரச்சினை, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கும்பல் தாக்குதல் போன்றவை தற்போது சட்டப்பூர்வமாக்கப்பட்டது. தலித்துகளுக்கு எதிரான வன்முறை. நமக்கு நீட், உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு நடந்துள்ளது. இவை எல்லாவற்றிலும் மாநில உரிமை பறிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உரிமைகளுக்கான அடிப்படை கோட்டை தகர்க்கும் வேலைகள் நடந்தன.

H1B விசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.... மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
Photo: PM Narendra Modi

நீதித்துறையை பொறுத்தமட்டில் முதலாவது 2015ல் மோடி ஆட்சிக்கு வந்த உடன் தேசிய சட்டப்பணிகள் நியமனங்களுக்கான ஆணையம் கொண்டுவந்தனர். அது கூடாது என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்த பிறகு, கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காமல் இருப்பது, அல்லது தங்களுக்கு பிடிக்காத நீதிபதிகளை மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பி.எம். கேர் நிதிக்கு இன்று வரை கணக்கு கொடுக்கவில்லை. தேர்தல் பத்திரம், பெகாசஸ், அயோத்தி தீர்ப்பு போன்றவை எப்படி வழங்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பாக உள்ள வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் தூங்குகின்றன. பிஎம்எல்ஏ என்கிற கொடூரமான சட்டத்தை செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதை வைத்துதான் எதிர்க்கட்சி அமைச்சர்கள், முதலமைச்சர்களை வேட்டையாடப்படுவதை நாம் பார்த்தோம். இந்தியாவை குடியரசு என்று சொல்வதற்கு என்ன என்ன அடிப்படைகள் உள்ளனவோ அத்தனையும் எடுத்துவிட்டார்கள்.

மகாதேவபுராவில் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் போலியாக ஒரு லட்சம் வாக்காளர்களை சேர்த்து வெற்றி பெற்றார்கள். அது வெளியே தெரிந்துவிட்டதால் தற்போது சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள். அதை செய்வதற்கான முகாந்திரம் எங்கே இருக்கிறது என்றால் சட்டவிரோத குடியேற்றம். வங்கதேச அகதிகள் என்கிற பெயரில் வாக்காளர்களை நீக்குகிறார்கள். 2024 மக்களவை தேர்தலின்போது பல்வேறு தொண்டு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் விவிபேடில் பதிவாகும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் நீதிமன்றம் கேட்கவில்லை.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் அங்கு பதிவாகிய வாக்கு விவரங்களை கேட்டார்கள். அதை கொடுக்கவில்லை. குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக சொல்லும் நிலையில், துல்லியமாக எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளது என்று கேட்டார்கள் ஆனால் அதையும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவில்லை என்பது மட்டுமின்றி இதை எதையும் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் சொல்ல வில்லை. மாறாக ஓட்டுபோட்டவர்கள் இந்த தேசத்துக்கு எதிரானவர்கள் என்று ஒரு கருத்தை சொன்னார் ஒரு நீதிபதி. 2024ல் இந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்துவிட்டு தில்லு முல்லை செய்து கொண்டிருந்தார். இன்றைக்கு அது வெளியே வந்துள்ளது.

சென்ற ஆண்டு இங்கே நடைபெற்ற கூட்டத்தில் போட்டது முதல் தகவல்  அறிக்கை என்று வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு தற்போது ராகுல்காந்தி வைத்திருப்பது  குற்றப்பத்திரிகையாகும். இஸ்ரேலிய பேராசிரியை ஒருவர் இந்தியா எப்படி ஜனநாயக நாடானது என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குகிற சம காலத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளும் சேர்ந்து நடைபெற்றதாக சொல்கிறார். அப்போது பம்பாய் நகர ஆட்சியராக இருந்தவர், தேர்தல் பணிகளை கவனிக்கும் அமைப்புக்கு கடிதம் எழுதுகிறார்.

அதில்  பல மக்கள் சாலை ஓரங்களிலும், மரத்தின் அடியிலும் தங்கி இருப்பதாகவும், அவர்களை வாக்காளர்களாக சேர்க்கலாமா? என கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு அவர்கள் அனைவரும் வாக்காளர்களாக சேர்க்கப்பட வேண்டும். பி.எல்.ஓ-க்களை நேரடியாக அனுப்பி அவர்கள் அந்தந்த இடங்களில்தான் தங்கியுள்ளனரா? என பார்க்க வேண்டும். அப்படி அவர்கள் மரத்தின் அடியில் தூங்கினால் அது அவருடைய முகவரி. அவருக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று சொன்னார்.

தற்போது என்ன செய்கிறார்கள். வாக்குரிமையை பறிப்போம். காரணம் செல்ல தேவையில்லை. 11 வகை ஆவணங்கள் கொடுத்தால்தான் வாக்குரிமை வழங்குவோம் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. அப்போது அது எந்த நாடு? இது எந்த நாடு? இஸ்ரேலிய எழுத்தாளர் சொல்கிறார், இந்தியா என்கிற ஒரு நாடு கிடையாது. 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைந்ததுதான் இந்தியா. இவர்களை ஒரு நாடாக பிணைத்தது எது என்றால், அவர்களுக்கு வாக்குரிமை அளித்ததுதான் என்று சொல்கிறார். ஆர்.என்.ரவி சொல்வது போல நாகரிகமும் கிடையாயது, ஒரு வெங்காயமும் கிடையாது. அந்த வாக்குரிமையை எடுக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன பொருள். அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்குரிமை என்பதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.  இந்து மகாசபா ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமியருக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அப்போது அவர்கள் அதை மீட்க விரும்புகிறார்கள்.

2014ல் இருந்து நடப்பது என்றால், நமது கண்களுக்கு முன்னால் ஒரு எதிர் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாசிசம் இயல்பு நிலையாக்கப்பட்டு இருக்கிறது. அதனுடைய முடிவுக்கு தற்போது வந்துள்ளோம். ராகுல்காந்தி அங்கே யாத்திரை நடத்துகிறார் என்றால்? அது அவருடைய பிரச்சினை அல்ல. அவருக்கு கிடைக்கின்ற மக்களின் பேராதரவை நாம் பார்க்கிறோம். ஆனால் இவற்றை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு, அதிகாரத்தை கொண்டு நாம் செய்ய முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஏனென்றால் அதிகார பலமும், பண பலமும் அவர்களிடம் உள்ளது. அரசியல் கட்சிகள் ஆதாயத்திற்காக அரசியலுக்கு வந்தவை. இந்த முறைகேடுகளுக்கு எதிராக அவை போராடுமா என்பது சந்தேகம் தான். ஆனால், நாம் நம்முடைய எதிர்காலம், உரிமைகள் நிலைக்குமா? என்பது நம்முடைய பிரச்சினை. அந்த கோணத்தில் இருந்து இயக்கங்கள், பொதுமக்கள் எந்த அளவுக்கு குரல் கொடுக்கிறார்களோ, அந்த அளவுக்குதான் இதில் இருந்து நாம் மீண்டுவர முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ