ஆளுநரின் நடவடிக்கையால் ஜனநாயகத்திற்கு ஆபத்து
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டு ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2011- 2015ம் ஆண்டு காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் நியமனத்தில் 81 பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் உள்ளிட்ட 40 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இடையே சமரசம் ஏற்பட்டதால் செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் அமலாக்கத்துறை தானாக முன்வந்து செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க நோட்டீஸ் வழங்கியது. மேலும் உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுப்பட்டது. அந்த சோதனைக்கு பின்னர் ஜுன் 14ந் தேதி நள்ளிரவு 1.39 மணி அளவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் உடல்நிலை மோசம் அடைந்ததும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரால் துறை சார்ந்த பணிகளை கவனிக்க முடியாது என்பதால் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்படுவார் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அமைச்சர் பதவியில் வைத்திருப்பதும் அல்லது நீக்குவதும் முதலமைச்சரின் விருப்பம். அதில் தலையிட ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை, அவர் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்தை மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை. அந்த படுகொலையை ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிதும் கூச்சப்படாமல் செய்து வருகிறார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் சட்டத்தையும், அதிகார வரம்பையும் தொடர்ந்து மீறிவரும் தமிழ்நாடு ஆளுநர், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்து அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார்.
மாநில அரசாங்கத்தை வழிநடத்துவதும், அமைச்சர்களை நியமிப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உள்ள அதிகாரம் ஆகும். அதில் மூக்கை நுழைப்பது ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்றே காட்டுகிறது.
இந்த போக்கினை, மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரின் செயல்பாட்டை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஆளுநரின் இதுபோன்ற செயல்பாட்டினால் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் அறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.