ராமதாஸ் – அன்புமணி இடையே நடைபெறுவது குடும்ப சண்டைதான் என்றும், இதில் அரசியல் காரணங்கள், நிதி விவகாரங்கள், கட்சிக்கட்டுப்பாடுகள் என எல்லாம் கலந்து இருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் மற்றும் குருமூர்த்தி சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவின் அரசியல் பயணம் என்று பார்த்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அனேகமாக அதிமுக தலைமையிலான அணியில் தான் வந்து இணைவார்கள். அப்படி தங்கள் அணிக்கு வர வாய்ப்பு உள்ள ஒரு கட்சி, பலமாக இருக்க வேண்டும், குடும்ப சண்டையால் பலவீனப்பட்டு விடக்கூடாது என்று அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிற எல்லா கட்சிகளுக்கும் ஒரு சுயநலம் கலந்த அக்கரை இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதன் காரணமாக பாஜக நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமாதானத்தை ஏற்படுத்தினால் அந்த சுயநலம் கலந்த அக்கரையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பாஜகவின் செயல்பாடுகளையே விமர்சிக்கிற குருமூர்த்தி, அதிமுகவின் பிளவுக்கு பிள்ளையார்சுழி போட்ட குருமூர்த்தி செல்கிறபோதுதான் சந்தேகம் ஏற்படுகிறது. ஏனென்றால் அதே காரில் செல்கிற சைதை துரைசாமி குறித்து யாரும் கவலைப்பட வில்லை. அவர் பாஜக சார்பு நிலை உடையவர்தான். குருமூர்த்தி செல்கிறபோதுதான் ஒருவித பதற்றம் ஏற்படுகிறது. ஒரு அசாதாரண சூழலில் குருமூர்த்தி வருகிறபோது, அவரது கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்த்தோம் என்றால் அது ரசிக்கும் படியாக இருந்தது கிடையாது.
குருமூர்த்தி யாரை வைத்து முதலில் இயக்க ஆரம்பித்தாரோ அந்த ஓபிஎஸ்- இன்றைக்கு கிட்டத்தட்ட தெருவில் நிற்கிறார். அதை குருமூர்த்தி வேடிக்கை பார்க்கிறார். தன்னை தேடி வந்த அமித்ஷாவிடம் கூட உறுதிபட சொல்லி, ஓபிஎஸ்-ஐ பற்றி ஏதாவது சொல்லிவிட்டு போங்க என்று அவரால் சொல்ல முடியவில்லை. அதிமுக உடன் கூட்டணியை உறுதிபடுத்த குருமூர்த்தி வீட்டில் இருந்துதான் போன் வர போக இருந்துள்ளது. இவ்வளவு தூரம் பேசுபவர், தினகரனையும், ஓபிஎஸ்-ஐயும் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டிருக்க வேண்டும் அல்லவா? அந்த டிராக் ரெக்கார்டை வைத்து குருமூர்த்தி மீது சந்தேகம் எழுப்புகிறேன். ராமதாசை சந்தித்துவிட்டு பேசாமல் சென்றிருந்தார் என்றால் அது சாதாரண சந்திப்பு என்று நினைக்கலாம். எதார்த்தமான சந்திப்பு என்று சொன்னதால் தான் சந்தேகம் வருகிறது. சத்தியத்தை மீறி 35 வயதில் எம்.பி. ஆக கொண்டு வந்து, மத்திய அமைச்சர் ஆக்கி, பாமகவின் தலைவராக நியமித்தவர் ராமதாஸ். அவர் ஆசைக்காக முகுந்தனை கொண்டுவரட்டும். ராமதாசின் காலத்திற்கு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அன்புமணி விட்டுக்கொடுத்திருக்கலாம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு ராமதாசால் தீவிர அரசியலில் ஈடுபட முடியும்?. இந்த எதார்த்தம் மருத்துவரான அன்புமணிக்கு புரியவில்லையா?
புதுச்சேரியில் பாமக பொதுக்குழுவில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் முன்னிலையில் மைக்கை எரிந்துவிட்டு ஒரு வீட்டில் இருந்து எத்தனை பேர். முகுந்தன் கட்சிக்கு வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது என்றெல்லாம் சொன்னார். ஒரு தலைவர், நிறுவனர் குறித்து பொதுவெளியில் பேசி இருக்கக்கூடாது. அன்றைக்கு தொடங்கிய அநாகரிகம் இன்று வரை தொடர்கிறது. ராமதாஸ் – அன்புமணி இடையே நடைபெறுவது குடும்ப சண்டைதான். அரசியல் காரணங்கள், நிதி விவகாரங்கள், கட்சிக் கட்டுப்பாடுகள் என எல்லாம் அதில் கலந்து இருக்கிறது. பாமகவை நிர்வகிப்பவர்கள் எல்லாம் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருக்கிறபோது, நீங்க என்ன பெயர் சொன்னாலும் அது கட்சியில்தான் வந்து நிற்கும். எந்த சமுதாயத்தையும் விட வன்னிய சமுதாயம் பாமக என்கிற ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பாக உள்ளது. அவ்வளவு பெரிய சமுதாயத்தை இவ்வளவு தூரம் கட்டமைத்துக்கொண்டு வந்து பயணித்த மருத்துவர் ராமதாசும், அவரால் அடையாளப் படுத்தப்பட்ட அன்புமணியும் பொதுவெளியில் அடித்துக்கொண்டால் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதனால் பாமக சிதறுண்டு, அவர்கள் பாஜகவுக்கு சென்றார்கள் என்றால் அவர்களால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஆகும். இதை எல்லாம் உணர வேண்டிய பொருப்பு ராமதாசுக்கு உள்ளது.
பாமக தனித்து நின்றும் 5 இடங்கள் தான், கூட்டணி அமைத்தும் 5 எம்எல்ஏ-க்கள் தான் வருகிறார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் அவர்களது தவறான கூட்டணி கணக்குகள் தான். அதற்காக விரக்தி வருகிற அளவுக்கு ராமதாஸ் முதிர்ச்சி அற்றவர் கிடையாது. இது குடும்ப பிரச்சினையாகும். அதில் பெண்களும் சம்பந்தப்பட்டு விட்டால் கேட்கவே வேண்டாம். இவற்றை எல்லாம் ஒட்டுமொத்த குடும்பமும் உட்கார்ந்து பூட்டிய அறைகளுக்குள் சரி செய்வார்களே என்றால், அது அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும், கட்சிக்கும், வன்னியர் சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும். ராமதாசின் பார்வையில் அன்புமணி துரோகம் செய்கிறார்தான். அதற்கு காரணமாக இருந்தது நீங்கள் தான். மற்ற எத்தனையோ தகுதியானவர்கள் இருந்தபோதும், சத்தியத்தை மீறி தகுதிகளை மீறி அன்புமணியை நீங்கள் தானே மத்திய அமைச்சர் ஆக்கினீர்கள். நீங்கள் தானே தலைவர் ஆக்கினீர்கள். நீங்கள் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஜி.கே.மணி சத்தியத்தை விட்டுக்கொடுத்தார் அல்லவா? அந்த ஜி.கே.மணியை இன்றைக்கு எந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள்? ஜி.கே.மணியின் வேதனை என்பது லட்சக்கணக்கான வன்னியர்களின் வேதனையாகும். அவர்கள் கொஞ்சம் உஷாராகி கணக்கு கேட்க தொடங்கினாலோ, கணக்கு போடவோ தொடங்கினாலோ என்ன செய்வீர்கள். இதைதான் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாமக ஏதோ தனித்து இயங்குவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் பாமகவை இன்றைக்கும் இயக்குவது வன்னியர் சங்கம்தான். வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் பாமக. கூடுதலாக ராமதாசின் விசாலமான பார்வையால் மற்ற சமுதாயத்தினருக்கும் பல நேரங்களில் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். சிலவற்றை சாதித்தும் கொடுத்தார். அதை யாரும் மறுக்கவில்லை. பாமக சாதிய கட்சியாக தற்போதுதான் மாறிவிட்டது என்று இல்லை. பாமக வலதுசாரி பாதையில் சென்றதால் அழிவை சந்தித்து உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுகவே ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிதான். அரசியல் நிர்பந்தங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்து ஒரு கட்சியின் கொள்கைகளை கொச்சைப்படுத்துவது கேள்வி எழுப்புவது தவறு. ஆனால் அந்த கூட்டணியின் காரணமாக அந்த மாநிலத்திற்கோ, அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கோ துரோகம் செய்தார்கள் என்றால் அப்போது தோலுரித்துக் காட்டலாம்.
பாமக எவ்வளவு பெரிய தோல்விகளை சந்தித்தபோதும், 5 சதவீதம் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தான் பாமக வருமா? வராதா? என்று பாஜக – அதிமுக ஏங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால் பாமக எந்த கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று திமுகவும் தீர்மானித்தது. பாமக, திமுக கூட்டணிக்குதான் வர வேண்டும் என்பது இல்லை. அது எங்கே கூட்டணிக்கு போக வேண்டும். எங்கே போகக் கூடாது என்றெல்லாம் தீர்மானிப்பதும் ஒரு திரைமறைவு அரசியல் தான். அதை திமுக செய்தது. எதிர்வரும் தேர்தலிலும் செய்தால்தான் அவர்கள் தப்பிப்பார்கள். அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்திருந்தால் 3 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்று இருக்கும் என்று ராமதாஸ் சொன்னார். புள்ளி விபரங்கள் படி பார்த்தோம் என்றால் அந்த அணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். அதனால் தான் திமுக உள்ளே புகுந்து சில வேலைகளை செய்தார்கள். அதற்கு அன்புமணியும் துணை போனார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.