நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் கட்சிக்கு, ஆதவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு, தேர்தல் வியூக வகுக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கிறார். அவருக்கு எல்லா தளங்களிலும் தொடர்புகள் இருக்கும், அதனால் விஜயின் தளபதியாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் வியூகத்திற்கு ஏற்கனவே பெரிய பெரிய கட்சிகள் ஒரு நிறுவனங்களை தொடர்பு வைத்து, அவர்கள் வேலை செய்து வருகின்றனர். அப்படி யார் விஜய்க்கு வேலை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது யார் என்ற தகவல் வெளியிடாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. கட்சியின் கொள்கைகளை அறிவித்தது. கட்சி கொடி அறிவித்தது. பின்னர் தவெக மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசப்பட்டது என எல்லா விஷயங்களையும் பின்னால் இருந்து ஒருவர் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பெயர் வெளியே வரவில்லை. எனினும் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கும், அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கும் தெரியும் அந்த நபர் ஜான் ஆரோக்கியசாமி என்பது.
ஜான் ஆரோக்கியசாமி விஜயுடன் சேர்ந்த பின்னர்தான் தவெக ஒருசில விஷயங்களை முன்னிறுத்தி தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டது. பெரியார், அம்பேத்கரை கட்சியின் கொள்கை தலைவராக அறிவித்தது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாமே என்று விஜய் பேசிய ஸ்டேட்மெண்ட் என எல்லாமே ஜான் ஆரோக்கியசாமி பின்னாடி இருந்து விஜயை இயக்கினார். ஒரு பக்கம் ஜான் ஆரோக்கியசாமி தேர்தல் வியூக வகுப்பாளராக விஜய்க்கு ஆலோசனைகளை வழங்குவார். அதனை செயல்படுத்தும் நபராக கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் அதனை களத்தில் இறங்கி வேலை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஜான் ஆரோக்கியசாமி, தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ, அதில் பேசப்பட்ட விஷயங்கள் எல்லாம் இப்போது தவெகவில் நடைமுறையில் உள்ளது. கட்சி என்பது புஸ்ஸி ஆனந்த உடையது. அந்த கட்சியின் முகமாக விஜய் இருக்கிறார். விஜய்க்கு நிகராக ஆனந்த் தன்னை பிராண்ட் செய்து கொள்கிறார். இது தவறான முடிவு. இப்படியே சென்றால் இந்த கட்சி 2 சதவீத வாக்குகள் கூட தாண்டாது என்று ஜான் ஆரோக்கியசாமி அந்த ஆடியோவில் சொல்லி இருந்தார். இந்த ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையாகியது. இது புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக ஜான் ஆரோக்கியசாமி காய் நகர்த்துகிறாரா? என கேள்வி எழுந்தது. இதில் உண்மையான பிரச்சினை என்ன என்றால் விஜய்க்கு நம்பர் 2 ஆக யார் இருப்பது என்பதுதான். 2009ஆம் ஆண்டு முதல் விஜயுடன் புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகிறார். விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். மற்றொரு புறம் தேர்தல் வியூக வகுப்பாளராக ஒவ்வொரு அப்டேட்டும் விஜயிடம் ஆலோசிக்கும் நபராக ஜான் ஆரோக்கியசாமி இருந்தார். அவர்கள் இடையிலான ஈகோ கிளாஷ்தான் இந்த ஆடியோ வெளியானதற்கு காரணம் என்று வெளிப்படையாக தெரிந்தது.
ஜான் ஆரோக்கியசாமி கட்சியை பற்றி, நிர்வாகிகளை பற்றி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் தான் முக்கிய முடிவு ஒன்றை தவெக தலைவர் விஜய் எடுத்திருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் இடையே பிரச்சினை உள்ளது. இது கட்சிக்கு நல்லது அல்ல என விஜய்க்கு தெரிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பனையூரில் புஸ்ஸி ஆனந்தை வெளியே அனப்பிவிட்டு மாவட்ட செயலாளர்களுடன் விஜய் தனியாக ஆலோசனை மேற்கொண்டார். அந்த அளவிற்கு விஜய் கால்குலேட்டிவாக யோசித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ஒரு கட்சியின் முக்கியமான பொறுப்பில் இருந்துகொண்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் என்றால் அது ஆதவ் அர்ஜுனா. விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சியான திமுகவை நோக்கி எழுப்பிய கேள்விகள் கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனா 40 நிமிடங்கள் விஜயை சந்தித்து பேசியுள்ளார். உங்கள் கட்சியில் பணிபுரிய வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனாவுக்கு 2019, 2021 தேர்தல்களில் திமுகவுக்கு வேலை பார்த்துள்ளார். 2011-16ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினின் நமக்கு நாமே நடை பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். விசிகவில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்த ஒரு மாதத்தில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. திருச்சியில் ஜனநாயகம் வெல்லும் மாநாடு, மதுஒழிப்பு மாநாடுகளை நடத்தி கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார். ஆனால் அவர் தெரிவித்த கருத்தக்கள் பேசு பொருளாகியது. உதயநிதி குறித்த விமர்சனம், மன்னராட்சி என பேசியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியிடப்பட்டது. அந்த நுல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனையும், விஜயையும் ஒரே மேடையில் நிறுத்துவதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
அந்த நிகழ்வுக்கு பின்னர் டிசம்பர் 9ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவரது வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு விஜயின் கட்சிக்காக தேர்தல் வேலை செய்யப் போகிறதா என கேள்வி எழுந்தது. ஆனால் அப்போது இல்லை என்று ஆதவ் அர்ஜுனா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா, விஜயை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு நடிகர் விஜய்க்காக தேர்தல் வியூகம் வகுக்கும் வேலை செய்ய உள்ளது. இந்த 40 நிமிட சந்திப்பின்போது விஜயிடம் ஆதவ் பேசிய விஷயங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆதவின் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெறறி கழகத்துக்கு எந்த அளவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. எந்த மக்கள் தவெகவை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூத் கமிட்டியை பலப்படுத்தவும், மாவட்ட செயலாளர்களை பலப்படுத்த வேண்டும் என ஆலோசனைகளை ஆதவ் வழங்கியுள்ளார். இதனால் விரைவில் விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்து இருக்கும் புகைப்பம் வெளியாகி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் சேரும் நிலையில், ஜான் ஆரோக்கியசாமி உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட மாட்டார். ஆனால் அவருக்கு பொறுப்புகள் படிப்படியாக குறைக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை தவெகவில் இணைப்பது போன்ற அசைன் மெண்ட்டும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் விஜயுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர், அவர் விஜய்க்கு சினிமா ரீதியாகவும் உதவி செய்கிறார். அவருக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். அவரும், ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்து தவெகவின் சோசியல் மீடியாவை கவனிக்க உள்ளனர். கட்சியை பொருத்தவரை புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து கட்சியை பலப்படுத்துவார்கள். இந்த ஆலோசனை விஜய்க்கு தேர்தலுக்காக வாய்ஸ் ஆப் காமன் வேலை செய்வது என்பது மட்டுமானது அல்ல. ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் கட்சியில் ஒரு முக்கியமான பொறுப்பு வழங்கப்படுகிறது. கட்சியில் புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்தபடியான பொறுப்பு அது. ஆதவ் இணைப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.