spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

-

- Advertisement -

மருதையன்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

“திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்” என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் நின்று சமூக சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்வதென்பது, கல்லில் நார் உரிப்பதையொத்த முயற்சி என்பதும் நாம் அறியாதவையல்ல. இருப்பினும், கட்சி தொடங்கிய நாள் முதல் பவளவிழாக் காணும் இன்றைய நாள் வரையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் அம்முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை.

we-r-hiring

அவ்வகையில், முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தனயனாக, பதவியேற்ற 100-வது நாளில், அனைத்து சாதி அர்ச்சகர்’ நியமனத்தை அறிவித்தார். 2008 ஆம் ஆண்டிலேயே அர்ச்சகர் பயிற்சி முடித்து நியமனத்துக்காக நெடுங்காலமாகக் காத்திருந்தவர்களுக்கு அது ஓர் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்தது. எனினும் பயிற்சி முடித்த அனைவரையும் நியமிக்க முடியாத வண்ணம் அடுக்கடுக்கான வழக்குகள் மூலம் நீதிமன்றத்தில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவற்றை மீறி, எடுத்த பணியை முடிக்கும் நோக்கில், பத்தாண்டு அதி.மு.க. ஆட்சிக்காலத்தில் மூடப்பட்டிருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பெண்களை ‘தீட்டு’ என்று ஒதுக்கும் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டும் வகையில், பெண்கள் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்; அர்ச்சகர்களாகவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 1972ல் கலைஞர் எதிர்கொண்ட தடைகளைக் காட்டிலும் இன்றைய முதல்வர் எதிர்கொள்ளும் தடைகள் வலிமையானவை.

ஆட்சிக்கட்டிலில் ஏறிய தருணத்திலிருந்தே கருவறைத் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தி.மு.க. தொடங்கிவிட்டது. 1970ஆம் ஆண்டு சனவரித் திங்களில் தந்தை பெரியார் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியை அறிவிக்கிறார். உடனே தந்தை பெரியாரைத் தொடர்புகொண்ட முதல்வர் கலைஞர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையிலான சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமென்றும் அதன்பொருட்டு இக்கிளர்ச்சியை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுக்க, அதனை ஏற்கிறார் பெரியார்.

2.12.70 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தை அன்றைய காங்கிரசு துணைத்தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும், மேலவையில் குன்றக்குடி அடிகளாரும் ஆதரித்ததை ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர் பதிவுசெய்துள்ளார். ஆலயங்களின் அறங்காவலர்குழு உறுப்பினராகப் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் இடம்பெறவேண்டுமென்ற அரசாணையும் அப்போதுதான் பிறப்பிக்கப்பட்டது.

உடனே, அர்ச்சகர் நியமனச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின்மீது உச்ச நீதிமன்றம் 14.3.72 அன்று தீர்ப்பளித்தது. அர்ச்சகர் நியமனமென்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை என்பதாலும், வழிபாடு தொடர்பான நடவடிக்கைகளில் இது தலையிடவில்லை என்பதாலும் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்கும் இச்சட்டம் செல்லுபடியாகுமென்றும், இருப்பினும் அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி அமைய வேண்டுமென்றும் அத்தீர்ப்பு கூறியது.

‘அறுவைசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம்’ என்று இத்தீர்ப்பை விமர்சித்தது ‘விடுதலை’ தலையங்கம். இதற்கெதிராக நாடு தழுவிய போராட்டத்துக்கு நாள் குறித்த பெரியார், கெடுவாய்ப்பாக அதற்கு முன்னரே இயற்கை எய்தினார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

சாதி என்பது குலத்தொழில் மற்றும் வாரிசுரிமையின்மீது நிற்கிறது என்ற காரணத்தினால், பிறப்பின் அடிப்படையிலான வாரிசுரிமையை ஒழிப்பது சாதி ஒழிப்புக்கு அவசியம் என்பதை தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உணர்ந்திருந்தனர். ஒரு சாதி என்ற வகையில் புரோகித முறையை ரத்துசெய்ய வேண்டுமென்றும், மதம் மற்றும் புரோகிதத்தை முறையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார், அண்ணல் அம்பேத்கர்.

கிராமங்களில் சாதி ஒழியவேண்டுமென்றால் “கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப்பிள்ளையாக பார்ப்பானும் மணியமாகப் பிள்ளையும் கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே சாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே, சாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும்” என்றார் பெரியார். (விடுதலை 12.4.64, 16.4.64).காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

திருமணத்தைப் பார்ப்பன புரோகிதத்திடமிருந்து விடுவிக்கும் சுயமரியாதை திருணமணச் சட்டத்தை நாட்டிலேயே முன்னோடியாகக் கொண்டுவந்தது மட்டுமல்ல, கர்ணம், மணியம் வேலைகளில் நிலவிவந்த வாரிசு முறையை ஒழிக்க Tamilnadu Proprietary Estates Village Service and the Tamilnadu Village Offices (Repeal) Qct, 1968 எனும்  சட்டத்தையும் அண்ணா பிறப்பித்தார். அதனைச் செயல்படுத்துவதில் எழுந்த சட்டச் சிக்கல்களை Tamilnadu village officers service rules, 1970 வாயிலாக சரி செய்தார், கலைஞர். இவற்றுக்கு எதிராகவும் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின்னரே இன்று நாம் காணும் கிராம நிர்வாக அலுவலர்கள் (VAOS) முறை அமலுக்கு வர முடிந்தது.

கிராமப்புறங்களில் சாதி ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், நிலவுடைமை ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டுமென்ற பார்வை கலைஞருக்கு இருந்தது. உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு, Tamilnadu Cultivating Tenants (Right to Purchase Landowner’s rights) bill, 1973 சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தனிப்பட்ட நிலச்சுவான்தார்களுக்கு மட்டுமின்றி, பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்களைச் சொந்தமாக வைத்திருந்த மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் நிலங்களுக்கும் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்சவரம்பை விதித்து, அந்நிலங்களில் பாடுபட்டுவந்த உழவர்களுக்கே அவற்றை சொந்தமாக்கும் முயற்சி இது. இருப்பினும் கலைஞரின் இந்தச் சட்டம். மடங்களும் ஆதீனங்களும் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கின் காரணமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவியலாமல் முடக்கப்பட்டது.

கருவறைத் தீண்டாமை ஒழிப்பு என்பது தனித்தவொரு பிரச்சனையல்ல. வீதியில் நடக்கும் உரிமை, குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமை, கோயிலுக்குள் நுழையும் உரிமை ஆகியவற்றுக்கான போராட்டத்தின் தொடர்ச்சி. சம உரிமைக்கான போராட்டங்கள் தமிழ்நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டன. 1897ல் நாடார் சமூக மக்கள் கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நுழைவுப்போராட்டம் நடத்தியுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக, பாஸ்கர சேதுபதி தொடுத்த வழக்கில், நாடார் சமூகத்தினர் ஆலயத்தில் நுழைவது சாத்திரவிரோதமென உ.வே.சா சாட்சியமளித்துள்ளார். இவ்வழக்கில் பெரும் பொருட்செலவு செய்து லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று இம்மக்கள் வழக்காடினர் என்பது அவர்களது சுயமரியாதை உணர்ச்சிக்கு ஒரு சான்று.

நீதிக்கட்சி தொடங்கப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே 1914ல் திருச்சி, உறையூரின் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த டி.எஸ். பொன்னுசாமி தேவர், குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளிக்கும் உரிமை பார்ப்பனரல்லாதாருக்கு மறுக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார். 1918ல் திருச்சி தாயுமானவர் கோயிலில், பார்ப்பனரல்லாதார் அர்த்த மண்டபத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படாமல் கொடிமரத்தோடு நிறுத்தப்படுவதை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர். ‘பார்ப்பனரல்லாத பொதுப்புத்தியின் உருவாக்கம்’ என்ற தனது கட்டுரையில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த இத்தகைய பல நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறார் மறைந்த ஆய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியன்.

இந்த வரலாற்று நிகழ்வுப் போக்கின் தொடர்ச்சியாக 1920-களில் சுயமரியாதை இயக்கத்தினர் தலைமையில் பல்வேறு ஊர்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடந்தன. 1924-25 வைக்கம் போராட்டமும், அண்ணல் அம்பேத்கரின் காலாராம் கோயில் நுழைவுப் போராட்டமும் சனாதனத் தீண்டாமைக்கு எதிரான போராட்டக்குரலை ‘தேசிய அரசியலின்’ நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டுவந்தன.

இவையனைத்தையும் மறைத்து, 1939ல் வைத்தியநாதய்யர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடத்தப்பட்ட போராட்டம்தான் தமிழகத்தின் முதல் ஆலய நுழைவுப் போராட்டம் என்ற வரலாற்றுப் புரட்டு இன்றளவும் கடைவிரிக்கப்படுகிறது.

உண்மையில், தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவை அனுமதிக்குமாறு மன்றாடிய காந்தியாரின் கோரிக்கையை சனாதனிகள் மதிக்கவில்லை. ‘இப்போது அவர்களைக் கோயிலுக்குள் விட்டால், அடுத்து கர்ப்பகிரகத்துக்குள் நுழைய வேண்டும் என்று கேட்பார்கள்” என்று 1930-களிலேயே ‘தொலைநோக்கோடு’ எச்சரித்திருக்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சனாதனிகள் தானாக முன்வந்து எந்த உரிமையையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதில்லை என்பதற்கு இதுவோர் சான்று.

நாடு முழுதும் நடந்த தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகத்தான் தலங்களை (கோயில்களை) இந்துக்களின் எல்லா வகுப்பினருக்கும் “சமூக நலன் மற்றும் சீர்திருத்த நோக்கில் இந்து பொது வழிபாட்டுக் திறந்துவிடுவது’ என்ற அரசமைப்புச் சட்டத்தின் 25(2)ஆ உட்பிரிவு பிறந்தது. இருப்பினும் மத உட்பிரிவின் உரிமை (denominational right)என்ற பெயரிலும், மரபு-வழக்கம் (custom and usage) என்ற அடிப்படையிலும் (ஆகம விதி) வழிபாட்டில் தீண்டாமை நியாயப்படுத்தப்படுகிறது. 1972ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு இதற்குச் சான்று.

இந்தத் தீர்ப்பு தோற்றுவித்த தடை காரணமாக கலைஞர் ஓய்ந்து விடவில்லை. இச்சீர்திருத்தத்தை நிறைவேற்றும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயன்றும் நடுவண் அரசு இணங்கவில்லை என்பதை ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் வேதனையுடன் குறிப்பிடுகிறார். 1977ல் அதி.மு.க. சார்பில் நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு விழாவில் பேசிய மணியம்மையார், பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றவியலாமல் நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் அவரைப் புதைத்திருக்கிறோம்’ என்று கலைஞர் பேசியதைக் குறிப்பிட்டு, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வகை செய்யுமாறு எம்.ஜி.ஆரிடம் கோரியதையும், இப்பிரச்சினை குறித்த எந்தப் புரிதலும் இல்லாத எம்.ஜி.ஆர், “கோயிலே வேண்டாமென்று கூறிய பெரியார், அர்ச்சகராவது பற்றி பேசியிருப்பாரா என்ற ஐயம் ஏற்படுகிறது” என்று பதிலிறுத்ததையும் அந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

அதன் பின்னர், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி மகராசன் குழு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதைத் தடையின்றி நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கேற்றவாறு அரசமைப்புச் சட்டமும், இந்து அறநிலையத் துறை சட்டமும் திருத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரையைச் செயலாக்கத்துக்குக் கொண்டுவர அதி.மு.க. அரசு முயற்சி செய்யவில்லை.

80-களின் இறுதியில் இந்திய அரசியலில் இந்துத்துவ சக்திகள் தலையெடுக்கத் தொடங்குகின்றன. மண்டல் பரிந்துரைகளை முடக்கும் நோக்கில் பா.ஜ.க தொடங்கிய ரதயாத்திரை ‘முஸ்லிம் எதிர்ப்பு – இந்து ஒற்றுமை’ என்ற நச்சுக்கருத்தை நாடெங்கும் பரப்பி, இறுதியில் பாபர் மசூதியையும் இடித்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா, வெளிப்படையாகவே கரசேவையை ஆதரித்துப் பேசியதுடன், வேத ஆகமக் கல்லூரி தொடங்குவது, இந்து அறநிலையத் துறையின்மீது மடாதிபதிகள் அதிகாரம் செலுத்தும் வகையிலான நிர்வாக அமைப்பை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கினார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

இத்தகைய அரசியல் சூழலில், ‘இந்து ஒற்றுமை’ என்ற மாய்மாலத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் 1993ல் மக்கள் கலை இலக்கியக் கழகம் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம்’ நடத்தியது. போராட்டக்காரர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பொய்வழக்குகள் போட்டதுடன், குத்திரர்கள் கருவறைக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு கோயிலுக்குள்ளேயே புறக்காவல் நிலையம் அமைப்பதாகவும் அறிவித்தது அன்றைய ஜெ. அரசு.

அன்று ம.க.இ.க.வின் பொதுச்செயலாளராக இருந்த நான் கலைஞரைச் சந்தித்து ஆதரவு கோராதபோதிலும், போராட்டத்தை ஆதரித்து முரசொலி மூன்று தலையங்கங்கள் தீட்டியதுடன், இதனை மையப்படுத்தி. ஞாயிறு சிறப்பு மலரும் வெளியிட்டது. போராட்டம் நடத்தியது யாராக இருந்தாலும், கருவறைத் தீண்டாமை ஒழிப்பு என்ற கொள்கையின்பால் தி.மு.க. கொண்டிருந்த இயல்பான பற்றுறுதிக்கு இது சான்றாக அமைந்தது.

2002-ல் கருவறைத் தீண்டாமைக்கு எதிராக உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய ஆதித்யன் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. கேரளத்தில் ஒரு சிவன் கோயிலின் அர்ச்சகராகத் தாழ்த்தப்பட்டவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், “அரசமைப்புச் சட்ட விழுமியங்களுக்கு எதிரான எந்த மரபும் செல்லத்தக்கதல்ல” என்று கூறி, அவரது நியமனத்தை அங்கீகரித்தது அந்தத் தீர்ப்பு.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கலைஞருக்கு இத்தீர்ப்பு ஊக்கமளித்தது. 2006ல் ஆட்சிக்கு வந்தவுடனே நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவொன்றை அமைத்து இதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சாதி வேறுபாடின்றி சைவ, வைணவ அர்ச்சகர்களைப் பயிற்றுவிப்பதற்கான பள்ளிகளைத் தொடங்கினார். மதுரை சிவாச்சாரியார்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஆகம விதிக்கு முரணான இப்பள்ளிகளை உடனே மூடவேண்டுமென்றும், இதில் பயின்ற மாணவர்களை நியமிக்கத் தடை விதிக்கவேண்டுமென்றும் வழக்கு தொடுத்து, பதவி நியமனத்துக்கு இடைக்காலத் தடை பெற்றனர். இத்தடை காரணமாகப் பயிற்சி முடித்து தீட்சை பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பொதுப்பட்டியல் சார்ந்த 207 மாணவர்கள் பணி நியமனம் பெற முடியவில்லை.

2011ல் மீண்டும் ஆட்சி மாற்றம் 2014 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கோகோய், ரமணா அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நடத்துவதில் அதி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை. வழக்கில் இடையீடு செய்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம், “புனிதம் – தீட்டு என்ற கருத்தாக்கம்தான் தீண்டாமைக்கு அடிப்படை” என்ற அண்ணல் அம்பேத்கரின் விளக்கத்தை முன்வைத்து, “ஆகமவிதி என்ற பெயரில் திணிக்கப்படுவது தீண்டாமையே” என்று வாதிட்டது. இருப்பினும் “குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவியலாது என்று கூறுவதுதான் தீண்டாமையேயொழிய, குறிப்பிட்ட பிரிவினர் தவிர மற்றவர் யாரையும் அனுமதிக்கவியலாது என்று கூறுவது தீண்டாமையாகாது” என்ற விநோத விளக்கத்தை அளித்த உச்ச நீதிமன்றம், “ஆகமவிதிப்படிதான் நியமனம் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் சாதி போன்ற அரசமைப்புக்கு விரோதமான விழுமியங்கள் நியமனத்துக்கு அடிப்படையாக அமையக் கூடாது” என்ற சிக்கலானதொரு தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றங்களின் இந்த அணுகுமுறை கருவறைத் தீண்டாமை ஒழிப்பில் அரசு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றால் அது மிகையல்ல.

தனது விடாமுயற்சியில் வெற்றி காண இயலாமல் 7, ஆகஸ்ட் 2018 அன்று கலைஞர் மறைந்தார். 2021ல் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலின், பதவியேற்ற நூறாவது நாளில், 14, ஆகஸ்ட் 2021 அன்று, ‘தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றினார். பயிற்சி முடித்து தீட்சை பெற்று 2008 முதல் காத்திருப்போரில் 24 பேரை அர்ச்சகர்களாக நியமித்தார். 1970ல் கலைஞர் கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராக 12 வழக்குகள் போடப்பட்டனவென்றால், மு.க.ஸ்டாலினின் இந்த நியமனத்துக்கு எதிராக சனாதனிகள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளின் எண்ணிகை சுமார் 25.

“பயிற்சிப் பள்ளியில் சேர அறநிலையத் துறை விதிக்கும் வயது, 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி, பயிற்சி முடிந்தபின் தீட்சை, பணிமூப்பு ஆகியவை எதுவும் எங்களுக்குப் பொருந்தாது. 7 வயதில் தீட்சை பெற்ற பின்னர்தான் நாங்கள் பயிற்சியைத் தொடங்குவோம். சுல்வித் தகுதி, வயது, பணி மூப்பு ஆகிய ஊழியர் விதிகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. இவையனைத்தும் ஆகமத்துக்கு எதிரானவை” என்பதுதான் பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்.

அவர்களது வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, பார்ப்பன அர்ச்சகர்களின் வாதங்களை ஏற்றது மட்டுமின்றி, ஆகமக் கோயில்கள் எவை, அல்லாத கோயில்களை எவை என்பதை ஆய்வுசெய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமோ, இறுதித் தீர்ப்பு வரும் வரையில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவேண்டுமென உத்தரவிட்டு, புதிய அர்ச்சகர் நியமனங்களுக்கு மறைமுகத் தடை ஏற்படுத்திவிட்டது.

இது மட்டுமல்ல, வயலூர் முருகன் கோயிலில் நியமிக்கப்பட்டிருக்கும் இரு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டுமென்றும், பார்ப்பனர்களும் குருக்கள் என்ற உட்சாதியைச் சேர்ந்தவர்களும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த சிவாச்சாரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுமான அக்கோயிலின் மூத்த அர்ச்சகர்களின் உறவினர்களில் தகுதி வாய்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டுமென்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். சாதியை ஒரு தகுதியாகக் குறிப்பிடும் வாதத்தை அங்கீகரித்த இத்தீர்ப்பு, 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று வாதிட்டு, இத்தீர்ப்புக்குத் தடை பெற்றது தமிழக அரசு.

அடுத்தடுத்து போடப்படும் நீதிமன்ற முட்டுக்கட்டைகளின் விளைவாகப் பயிற்சி முடித்த மாணவர்கள், அதிலும் குறிப்பாக, நல்ல கல்வித் தகுதி இருந்தும், இறைத்தொண்டின்பால் கொண்ட பற்று காரணமாக அர்ச்சகர் பயிற்சியில் இணைந்த பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், பணிநியமனம் பெறவியலாத நிலை நான்கு ஆண்டுகளாக நீடிக்கிறது. 400-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த அர்ச்சகர்கள் காத்திருக்கிறார்கள்.

கோயில் கூடாது என்பதல்ல, கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது” என அன்றைக்கு எழுதினார் கலைஞர். கருவறையைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள், கோயில்களையும் கைப்பற்ற முனைகிறார்கள். கோயில்களைக் கைப்பற்றுவதே கோட்டையைக் கைப்பற்றுவதற்கான வழி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ‘இந்து அறநிலையத் துறையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்’ என்று 2022ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பாஜக வழக்கறிஞர் அசுவினி உபாத்யாயா. இதைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் ‘இது கடிகாரத்தை பின்னோக்கித் திருப்பும் முயற்சி’ என்று குறிப்பிட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

ஒரு நூற்றாண்டாகப் பெற்ற சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் பின்னோக்கி இழுப்பதற்கு, பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்ச்சமூகமும் ஒருக்காலும் அனுமதிக்கப்போவதில்லை என்பது உறுதி.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

 

MUST READ