வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி குற்றம்சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தொடர்பாக பத்திரிகையாளர் இந்திரகுமார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முக்கியமான வழக்கறிஞர்களுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் நடைபெறுவதை அங்கே பார்க்க முடிகிறது. மூத்த வழக்கறிஞர் வில்சனாக இருக்கட்டும். வழக்கறிஞர் வாஞ்சிநாதனாக இருக்கட்டும் தொடர்ந்து ஏதோ ஒரு அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நேரத்தை குறிப்பிட்டு உத்தரவிடுகிறார்கள். அதன் அடிப்படையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜர் ஆகிறார். அப்போது, இந்த வழக்கில் நான் சாதி ரீதியாக செயல்படுவதாக நீங்கள் கருத்து தெரிவித்தீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். அப்போது குறிப்பிட்ட வழக்கிற்கும் தனக்கும் தற்போது எந்த தொடர்பும் கிடையாது. அந்த வழக்கை வேறு ஒரு மூத்த வழக்கறிஞரை வைத்து நடத்துவதாக அவர்கள் சொன்ன உடன், நான் வக்காலத்து டிரான்ஸ்பர் செய்துவிட்டேன் என்று வாஞ்சிநாதன் சொல்கிறார். அப்போது நான் சாதி ரீதியாக தான் அனைத்து தீர்ப்புகளை கொடுக்கிறேனா? என்று இப்போதே செல்லுங்கள் என்று நீதிபதி பதற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நீங்கள் என்னை அழைத்தது பேராசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு. அந்த வழக்கில் இதுபோன்ற கருத்துக்களை நான் சொல்லவில்லை. வேறு தருணங்களை கேட்கிறீர்கள் என்றால்? எந்த விவகாரம் தொடர்பாக என்ன கருத்தை நான் தெரிவித்தேன்?. எதுவும் சொல்லாமல் கருத்து கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்? என்று வாஞ்சிநாதன் கேட்கிறார். நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா? என்று கேட்ட நீதிபதி, வழக்கறிஞர் வாஞ்சிநாதனை ஒரு கோழை என்று சொல்கிறார். வழக்கறிஞர் வாஞ்சிநாதன், எந்த நிகழ்வில் நான் அப்படி பேசினேன் என்று எழுத்துப்பூர்வமாக கேளுங்கள். நான் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறேன் என்று கேட்கிறார். அப்போது திறந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞரை கோழை என்று குற்றம்சாட்டுகிற தேவையும், நெருக்கடியும் எங்கிருந்து வருகிறது?. அதற்கு தேவை என்ன? பல்வேறு வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றால் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை மக்கள் தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.
ஏனென்றால் வாஞ்சிநாதன், ஸ்டெர்லைட் போன்ற முக்கியமான வழக்குகளில் அந்த மக்களுக்காக ஆஜராகி வாதாடி இருக்கிறார். அதேபோல், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தொடங்கியபோது, மதுரையில் உள்ள மக்களை திரட்டி மதநல்லிணக்க கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அது தொடர்பான பல்வேறு வழக்குகளையும் நடத்தி பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசு அண்ணாமலை போன்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வற்கான முகாந்திரமும் கிடைப்பதற்கான வாய்ப்பாக மாறுகிறது. பாஜகவினர் செய்யும் மதவெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து தட்டிக்கேட்கின்ற நபராக வாஞ்சிநாதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வயலூர் கோயிலில் பார்ப்பனர் அல்லாத இருவர் அச்சகர்களாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற நிலையில், அவர்களின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதே கேள்வி எழுப்பும். இந்த விவகாரத்தை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வெளிப்படையாக பேசுகிறார். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் சூத்திரர்கள் உருளுவதை ஒரு சடங்காக கடைபிடிக்கிறார்கள். இதை நடத்த வேண்டும் என்றும் வழக்கு தொடர்கிறார்கள். இதை ஒருவர் அனுமதிக்கிறார் என்றால், இதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? என்கிற கேள்வி சமூகத்தில் வராதா. இதை பேசினால் எனக்கு நீங்கள் சாதி ரீதியாக முத்திரை குத்துகிறீர்கள் என்று சொல்கிறார்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மீது நமக்கு நன்மதிப்பும் உள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளது. அவர் தன்னுடைய ஓய்வின்போது, தன் மீதான விமர்சனங்களை தாங்க எனது தோள்கள் வலிமையுடையதாக உள்ளன என்று தெரிவித்தார். நீதித்துறை வரலாற்றிலேயே இவ்வளவு விமர்சனங்களை எதிர் கொண்டவர் நானாக தான் இருப்பேன். இனி தன்னை விமர்சிப்பவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்று சொல்லியிருந்தார். ஜி.ஆர்.சுவாமிநாதன், உயர் நீதிமன்ற கிளையின் ஒரு நீதிபதிதான். ஆனால் அவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. அவருக்கு கீழ் தான் ஒட்டுமொத்த நீதித்துறையும் உள்ளது. அவருக்கு உள்ள பக்குவம், மதுரை கிளையில் உள்ள உங்களுக்கு ஏன் வரவில்லை. இதை புரிந்து கொள்வதில் சாமிநாதன் அவர்களை தடுப்பது எது? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்றால்? அதை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்வதே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். தீர்ப்புக்குதான் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. ஆனால் அந்த தீர்ப்பின் விளைவு என்னவாக இருக்கிறது. அந்த விளைவுக்கு நீதிபதியும் பொறுப்பு என்று சொல்கிற வேலையை சமூக செயற்பாட்டாளர்கள் செய்கிறார்கள் என்றால்? அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் இதனை உத்தரவாதப் படுத்தியும் உள்ளனர். உச்ச நீதிமன்றத்திலேயே இதுபோன்ற பல வழக்குகள் எல்லாம் தள்ளுபடியாகி தான் உள்ளது. இதனுடைய நோக்கம் என்பது என்ன? வாஞ்சிநாதனை பணி செய்யவிடாமல் செய்வதா? ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு வாஞ்சிநாதன் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, வாஞ்சிநாதன் கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தை அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் வாட்ஸ்அப்பில் பகிர்கிறார் என்றால் அது எப்படி? தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் எப்படி இவர்களுக்கு வந்தது? யார் மூலமாக அந்த கடிதம் வெளியானது? அப்போது இதற்கெல்லாம் உச்சநீதிமன்றத்திலும் ஆட்கள் உடந்தையாக இருக்கிறார்களா? பதில் சொல்லட்டும். வாஞ்சிநாதன் உங்கள் மீது கிரிமினல் குற்றாட்டையோ, அல்லது அவதூறு குற்றச்சாட்டையோ முன்வைக்கிறாரா? நீங்கள் செய்ததை தானே பேசியுள்ளார். வாஞ்சிநாதன் அப்போதுதான் விளக்கம் சொல்கிறார். உடனே உத்தரவை எழுதுகிறீர்கள். அவருக்கு உரிய கால அவகாசம் கொடுக்காதது நீதிமன்ற மாண்பை கெடுக்காதா? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? நீதிபதிகளை விமர்சிப்பது அவமதிப்பு அல்ல. நீதிமன்ற நடவடிக்கைகளையே முன்னுக்குப் பின் முரணாக தனக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்வது நீதிமன்ற அவமதிப்பாகும். அந்த முன்னெடுப்பை ஜி.ஆர். சுவாமிநாதன் மீது யார் போட போகிறார்கள்.
சாமிநாதன் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால் இது ஜனநாயக நாடு. நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளிக்கு ஏற்றிவிட்டீர்கள். நான் மகாபெரியவரை வைத்துக்கொள்வது என்னுடைய உரிமை என்று சொல்லிவிட்டீர்கள். அதை வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்வதற்கு எதிரில் உள்ளவர்களுக்கு நீங்களே உரிமை கொடுத்துவிட்டீர்கள். அப்படி கொடுத்து விட்ட உரிமையை பறிப்பதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் சொல்கிறார். அவரைவிட உயர்ந்த பதவி நீங்கள் கிடையாது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத தடை உங்கள் மனதில் எங்கிருந்து வருகிறது? அந்த படிநிலை தடையை தகர்க்க வேண்டும் என்பதுதான், தமிழ்நாடு நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்