2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் கல்வி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கும். அதன் அடிப்படையில்,அறிவியல்,தொழில்நுட்பம், கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் புதியதாக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தது பாஜக.
இதையடுத்து, 2014-ஆம் ஆண்டில் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் முதல் அமைச்சரவை ஆட்சியமைத்தது. ஓராண்டு காலம் கழித்து, ‘இந்தியாவின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்திசெய்யவும். இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றுவதற்குத் தேவையான திறன்கள் மாணவர்களுக்குக் கிடைக்கவும், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்’ என ஒன்றிய பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டு அமைசச்கம் (Ministry of Human Resource Development-MHRD) வெளியிட்டது.

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இந்திய கிராமங்கள் தொடங்கி மாநில, தேசிய அளவிளான கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தப்போவதாகவும், ஆன்லைன் மூலம் ஆலோசனைகள் பெறப்போவதாகவும் MHRD அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கருத்துக்கேட்புப் பணிக்காக, பள்ளிக் கல்வி தொடர்பாக 13 கருப்பொருள்களையும் உயர்கல்வி தொடர்பாக 20 கருப்பொருள்களையும் அறிவித்தது அமைச்சகம். தொடர்ந்து ஒன்றிய அரசின் பிற அமைச்சகங்களுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள். ஆன்லைன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக்கொண்ட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் குழுவில் டெல்லி-NCTயின் முன்னாள் உள்துறைச் செயலர் சேவாராம் ஷர்மா, முன்னாள் தலைமைச் செயலர் ஷைலஜா சந்திரா, குஜராத்மாநில முன்னாள் தலைமைச் செயலர் சுதிர் மன்கட் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஜே.எஸ். ராஜ்புத் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.
இவர்களில் ஜே.எஸ்.ராஜபுத் RSS துணை அமைப்பான ‘சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ்’ (Shiksha Sanskriti Utthan Nyas)-இல் முக்கிய உறுப்பினராக அறியப்படுபவர். இந்தக் குழு தேசிய கல்விக் கொள்கை தொடர்பான தனது வரைவு அறிக்கையை நிறைவுசெய்து, ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. இதையடுத்து ‘தேசிய கல்விக் கொள்கை-2016 வரைவு சில உள்ளீடுகள் (Inputs on Draft National Education Policy 2016) என்ற தலைப்பில் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையின் சுருக்கப்பட்ட ஆவணத்தை அமைச்சகம் வெளியிட்டது.
அந்த ஆவணத்தில் இடம்பெற்ற கருத்துகள் இந்திய அளவில் கல்வியாளர்களிடையே கடும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. அன்றைக்குத் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தேசிய கல்விக் கொள்கை வரைவு ஆவணம் குறித்து தனது கண்டன அறிக்கையை 2016-ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார்.
‘புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகளில் இருந்த ஆபத்துகளைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக புதிய (தேசிய) கல்விக் கொள்கைப் பரிந்துரைகள், மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதையும், கல்வித் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, ஆசிரியர்களுக்குப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சான்றிதழ் தேர்வு, +2 முடித்த மாணவர்களுக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு உள்ளிட்ட பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்தார்.
”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தேசிய கல்விக் கொள்கை வரைவு ஆவணம் குறித்து தனது கண்டன அறிக்கையை 2016-ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார்”
அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு மாறாக, தகுதியின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கலாம் என்பதையும் பாடத்திட்ட உருவாக்கம், மொழித் திணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு மாநில உரிமைகளை தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு பறிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக்கொண்ட ஒரு குழுவை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். அதில் அனைத்து இந்திய மாநிலங்களையும், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும், சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ள சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்கள். சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வியாளர்கள் இடம்பெற வேண்டும். அந்தக் குழு தயாரிக்கும் வரைவு அறிக்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு, மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் திருத்தங்களுடன் இந்திய அரசின் கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் எனக் கொள்கை வகுக்கும் குழுவை உருவாக்க வேண்டிய அணுகுமுறை குறித்து ஒன்றிய அரசுக்குப் பாடம் எடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
இறுதியாக, ‘புதிய கல்விக் கொள்கை என்ற மதயானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றிவரும் சமூக நீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை! என்று நமக்கு எச்சரிக்கையும் செய்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.இதற்கிடையே ஒன்றிய பாஜக அமைச்சரவை மாற்றப்பட்டு, மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக்கப்பட்டார் பிரகாஷ் ஜவடேகர். அடுத்த சில மாதங்களில், ‘தேசிய கல்விக் கொள்கை’யை உருவாக்க புதிய குழு அமைக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார். ‘இந்த அறிவிப்பின் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசின் நிழல் அதிகார பீடமான RSS அமைப்புகளின் பங்களிப்புகள் இருக்கின்றன’ என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், ‘சுல்வித் துறையில் நிலவும் சமகாலச் சிக்கல்கள் குறித்து நாங்கள் சில விமர்சனங்களை முன்வைத்தோம். அவையெல்லாம் 2016-ஆம் ஆண்டு வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை’ என்று குறிப்பிட்டார். அதாவது, கல்விக் கொள்கைக் குழுத் தலைவரின் ஒப்புதல் இன்றி, முழுமையற்ற வடிவத்தில் ஓர் வரைவு அறிக்கையை வெளியிட்டு, சிறிது காலத்திற்குள்ளேயே புதிதாக ஒரு பதி குழுவை அமைக்கப்போவதாகச் சொல்லப்பட்டது கல்வியாளர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, மின்ட் உள்ளிட்ட வெகு சில ஊடகங்கள் இதில் RSS அமைப்பின் பங்கு இருப்பதை அம்பலப்படுத்தின.
2014-ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பாஜக ஒன்றிய அரசு பேசத் தொடங்கியபோதே, RSS தரப்பிலிருந்து ஆர்திக் சமுக் (Aarthik Shamukh), சேவா சமுக் (Seva Shamukh), சிக்ஷா சமுக் (Shiksha Shamukh), சுரக்ஷா சமுக் (Suraksha Shamukh), ஜன் சமுக் (Jan Shamukh), விஷார் சமுக் (Vichar Shamukh) என ஆறு குழுக்களை அரசின் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டிகளாகச் செயல்படுவதற்காக ஒருங்கிணைத்தது. அதோடு, RSS-இன் 11 துணை செயமப்புகளையும் அதன் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து, தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் பின்னணியிலிருந்து செயல்படவைத்தது.
இந்த அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள மத்தியப் பிரதேச பவனில் அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்கள். ஆறு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள் RSS பிரசாரகர் ராம்சங்கர் கதேரியா, மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அடுத்த சில நாட்களில் ‘இந்து கல்வி’ என்ற தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்றை, RSS அமைப்புகள் டெல்லியில் ஏற்பாடு செய்தன.
அதைத் தொடர்ந்து, ‘ஆங்கிலேயரான மெக்காலே உருவாக்கிய பழைய கல்வித் திட்டங்கள் திறனற்றவை. மாணவர்களுக்கு உண்மையான கல்வி கிடைக்க வேண்டும். 100 சதவிகிதம் திறனுள்ள மாணவர்களை குருகுலக் கல்வி முறையால் மட்டுமே உருவாக்க முடியும்’ என்று தீவிரப் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். பின்னர், வாரணாசியில் தேசிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் அன்றைய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
அவரது அறிவிப்பின்படி, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டு, 2016-இல் வரைவு அறிக்கையும் வெளியானது. ஆனால், RSS அமைப்பினருக்கு திருப்தி அளிக்கும் விதமாக அந்த அறிக்கை இல்லை. எனவே, பிரகாஷ் ஜவடேகர் அமைச்சர் பொறுப்புக்கு வந்த பிறகு, மீண்டும் புதிய குழுவை அமைக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த மாற்றங்களின் பின்னணியில் ஏ.பி.வி.பி.பாரதிய சிக்ஷா மண்டல், சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ் உள்ளிட்ட அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டிருக்கின்றன என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வளவு நிதானமாகக் காய் நகர்த்தியும் பண்டைய வேதக் கருத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், குருகுலக் கல்வி, சமஸ்கிருதத் திணிப்பு உள்பட கல்வியில் RSS புகுத்த நினைக்கும் காவிச் சித்தாந்தங்களை முழுமையாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தனது அறிக்கைக்குள் கொண்டுவரவில்லை என்பது மதவாதிகளின் தீராத மனக்குறையாக இருந்தது. எனவே, தங்களின் காவிச் செயல்திட்டத்தை’ முதன்மைப்படுத்தி தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கவேண்டும் என்பதற்காக, தங்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் புதிய குழுவை ஒன்றிய பாஜக அரசின் மூலமாக RSS அமைப்பினர் நியமித்தார்கள் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.
நன்றி,
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய
தேசிய கல்விக் கொள்னை – 2020
எனும் மதயானை
நூலிலிருந்து.
மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி