’21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன…’ என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) என்று பெயர். மொத்தம் 17 இலக்குகள் முன்மொழியப்பட்டு, அதில் நான்காவது இலக்காக (SDG’s-4), கல்வி வளர்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறப்பு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization) உலக நாடுகளிடையே கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட தன்மையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இனம், மொழி, மதம், பாலினம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நாடுகளுக்கிடையிலும் அமைதி, அடிப்படைச் சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவை மதிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் யுனெஸ்கோ அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பு, கடந்த 2015-ஆம் ஆண்டில் கொரியாவிலுள்ள இன்சியோன் நகரில், இந்தியா உள்பட 160 நாடுகளைச் சேர்ந்த 1,600 பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்து, ‘உலகக் கல்வி மாநாடு’ ஒன்றை நடத்தியது. அதில்தான், 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சமமான மற்றும் எல்லாரையும் உள்ளடக்கிய தரமான கல்வியையும் வாழ்நாள் முழுக்கக் கற்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. ‘Focused on achieving equitable and inclusive quality education and lifelong learning for all by 2030.
ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியிருக்கும் தேசிய கல்விக் கொள்கை -2020 அம்சங்களில் சில பகுதிகள், யுனெஸ்கோ முன்மொழிந்த தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. தேசிய கல்விக் கொள்கை ஆவணமும் அதை உறுதி செய்கிறது.‘2015-இல் இந்தியாவால் ஏற்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான ஆய்வுநிரல், 2030-இன் கல்வி இலக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில்… உள்ளடக்கத்தில் நடுநிலைகொண்ட தரமான கல்வியை உறுதிசெய்வதோடு, அனைவருக்கும் வாழ்நாள் முழுவதுமான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்த விழைகிறது. கல்வி அமைப்பு முறைக்கு முழுமையாக மறுவுருவம் கொடுக்கும் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்கிறது.’ -தேசிய கல்விக் கொள்கை-2020
ஆனால், யுனெஸ்கோ முன்மொழிந்த தீர்மானங்களைக் கைகாட்டிவிட்டு, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ஒன்றிய பாஜக அரசு வகுத்திருப்பது முழுக்க முழுக்க RSS அமைப்பின் கொள்கைகளைத்தான். தங்களின் மதவாத அரசியலுக்கான எதிர்காலத் திட்டங்களைக் கல்விக் கொள்கையின் பெயரால் நமது கல்விக்கூடங்களுக்கு உள்ளே நுழைக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு, தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதில், அரசு சாரா அமைப்புகளின் (NGO) தலையீடுகளும், செல்வாக்கு மிக்க நபர்களின் விருப்பங்களும் பின்னிப் பிணைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலகளாவிய அமைப்பான ‘யுனெஸ்கோ’-வின் கண்காணிப்பு அறிக்கைகள் விமர்சித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
GEM அறிக்கைகள்
கொரியாவிலுள்ள இன்சியோன் நகரத்தில் நடைபெற்ற உலகக் கல்வி மாநாட்டில் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்குப் பிறகு, உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களின் கல்வி இலக்குகளை எவ்வாறு கையாள்கின்றன என்று யுனெஸ்கோ கண்காணிக்கத் தொடங்கியது. அது தொடர்பான முடிவுகளை 2016-ஆம் ஆண்டு முதல் அறிக்கைகளாகவும் வெளியிட்டுவருகிறது.
2016-ஆம் ஆண்டில் வெளியான முதலாவது GEM அறிக்கை (Global Education Monitoring Report), உலக நாடுகளின் அரசுகள், யுனெஸ்கோவின் நான்காவது நிலையான வளர்ச்சி இலக்கான (SDG’s-4) கல்வியை மேம்படுத்தி, முன்னேற்றங்களை விரைவுபடுத்த வேண்டும்’ என்பதற்கான மதிப்புமிக்க அறிவுரைகளை வழங்கியது.
2017-18-ஆம் ஆண்டுக்கான GEM அறிக்கையில், அனைத்து நாடுகளும் கல்வியில் ஏற்படுத்திவரும் முன்னேற்றம் குறித்து விளக்கும் வகையில், ‘தேசிய கல்விக் கண்காணிப்பு அறிக்கை’களை வெளியிட அறிவுறுத்தியது. முக்கியமாக கல்வி வளர்ச்சி இலக்குகளில் அரசு, பள்ளிகள், ஆசிரியர், மாணவர், பெற்றோர் என அனைத்து மட்டங்களிலும் ‘பொறுப்புணர்வு’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது.
2019-ஆம் ஆண்டு GEM அறிக்கை, புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான கல்வியை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியது. அவர்களுக்கான கல்வியைப் புறக்கணிப்பது ஏராளமான மனித ஆற்றலை வீணடிப்பதற்குச் சமம் என அறிவுறுத்தியது. மொழிப் பாகுபாடுகளைக் கடந்து, பல்வேறு கலாசாரங்களைக்கொண்ட மக்களுக்கென வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்குவது அவசியம் என்று அறிவுறுத்தியது. ‘புலம்பெயர்ந்தோர் கல்விக்கான முதலீடு என்பது, சீர்குலைவுக்கான பாதையை அமைப்பதற்கும், ஒற்றுமைக்கான பாதையை அமைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள உதவும்’ என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
2020-ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கிடையே வெளியான GEM அறிக்கை, சமமற்ற கல்வி வாய்ப்புகள், குறைந்த வயதிலேயே கல்வியிலிருந்து வெளியேறும் சிறார்களின் கற்றல் இடைநிற்றல், பள்ளிகள் மூடப்படுவது உள்ளிட்ட பாதிப்புகளைப் பட்டியலிட்டது. குறிப்பாகப் பெண் கல்வி பற்றிய கவனத்தைக் கூடுதலாக வலியுறுத்தியது.
இந்தக் காலகட்டத்தில்தான் தேசிய கல்விக் கொள்கை-2020 ஒன்றிய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு வெளியான GEM அறிக்கை (2021-22) மிகுந்த கவனத்துக்குரியது. அது உலக நாடுகளில் கல்விக் கொள்கை வகுக்கும் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவை குறித்துக் கேள்வியெழுப்பியது. ‘யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்! என்கிற தலைப்பிலேயே அந்த அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையில், ‘இந்தியாவில் கல்விக் கொள்கை மீது தாக்கம் செலுத்துவதில் அரசு சாராத நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கின்றன. ஏசர் எனும் (ASER: Annual Status of Education Report) கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கையை வெளியிடும் ‘பிரதம்’ (Pratham organization) போன்ற அரசு சாரா அமைப்புகள் அளித்த தரவுகள், இந்திய நாடாளுமன்ற விவாதங்களில் முக்கிய பரிந்துரைகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றொரு என்.ஜி.ஓ- வான ‘சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷன்’ (Central Square Foundation) ஒன்றிய அரசின் கவனங்களை மாற்றியதோடு, தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் செயல்பாடுகளிலும் தலையீடுகளைச் செய்திருக்கிறது’ எனக் குறிப்பிடுகிறது.
மேலும், ‘தேசிய கல்விக் கொள்கை வடிவமைப்பில் ‘சில ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. அவை செல்வந்தர்கள் சிலரின் நலன்களைப் பிரதிபலிக்கும் விதமாக, கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கும் வல்லுநர்கள் சிலரை, தேசியக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கச்செய்து பொது விவாதத்தை வடிவமைக்க உதவியிருக்கின்றன. இந்த என்.ஜி.ஓ அமைப்புகள் மற்றும் ஊடகச் செல்வாக்குகளைக் கடந்து, தேசிய கல்விக் கொள்கையின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய வெளிப்படையான விவரங்கள் இல்லை’ என்றும் யுனெஸ்கோ வெளியிட்ட 2021-22 GEM ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக, தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதிலும் அதற்கான பொது விவாதத்தை (Public Debate) வடிவமைப்பதிலும் அரசுசாரா அமைப்புகள் (Non-state Actors) மற்றும் ஊடகங்களின் பங்களிப்பை, யுனெஸ்கோ கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. நாட்டின் நீண்டகாலக் கல்வி இலக்குகளை உருவாக்கும் திட்டத்தில், சிலர் தங்களின் சொந்த நலன்களுக்காகத் தலையீடுகள் செய்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஏற்பாடுகளைச் செய்ய, இந்திய ஒன்றிய அரசு தவறிவிட்டது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ.
இந்தப் பின்னணிகளுடன் ‘தேசிய கல்விக் கொள்கை-2020’-ஐ அணுகும்போது, பாஜக அரசின் வெளிப்படையற்ற செயல்பாடுகள், கொள்கை வகுப்பாளர்கள் மீதான பொதுச் சமூகத்தின் குற்றச்சாட்டுகள், சுயலாபத்துக்காகக் கல்வியில் அரசியலைக் கலக்க நினைக்கும் RSS, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் நோக்கம் தெளிவாகப் புரிந்துவிடும். உதாரணமாக, பள்ளிக் கல்வியை முழுமையானதாகவும், நெகிழ்வானதாகவும், பல்துறை சார்ந்ததாகவும் மாற்றுவதன் மூலம், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப, ‘ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான திறன்களை’ வெளியில் கொண்டுவர விரும்புகிறது. ஒரு துடிப்பான அறிவுசார் சமூகமாகவும்’, ‘உலகளாவிய அளவில் அறிவார்ந்த வல்லரசாகவும்’ இந்தியாவை மாற்றுவோம் என அறிவிக்கிறது தேசிய கல்விக் கொள்கை-2020.
முந்தைய காலகட்டங்களில் நடைமுறையிலிருந்த கல்விக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்து, இடைப்பட்ட ஆண்டுகளில் எழுந்த சவால்களை மதிப்பிட்டு, தற்போதைய நிலவரங்களையும் கணக்கில்கொண்டு, ‘ஜனநாயக’மான பார்வையுடன், அரசியலமைப்பின் வழிகாட்டுதலுடன் தொலைநோக்கோடு அதனை உருவாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதில் இடம்பெறும் பரிந்துரைகளெல்லாம் பகுத்தறிவுக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பொருந்தாத பழைமைவாதக் கருத்துகள். நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து, ‘ஒரே நாடு ஒரே கல்விக் கொள்கையாக, அதுவும் RSS முன்மொழியும் காவிக் கொள்கை என்பதாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
நன்றி,
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய
தேசிய கல்விக் கொள்னை – 2020
எனும் மதயானை
நூலிலிருந்து.
மதயானை: எங்கள் கல்வி… எங்கள் உரிமை!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி