காளி
வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக அனுமானித்து வைத்திருக்கும் சிலர், “எல்லா ஆண்களும் அப்படிச் செய்வதில்லை (Not All Men)” என்பார்கள்.மேலும், “பெண்களால் ஆண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா (Victim card)” என்றும் பேசுவார்கள். உண்மையில் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பவர்களிடம் வந்து, இதையும் பேசச்சொல்லி வலியுறுத்துவார்கள். பாதிக்கப்பட்டவருக்காக அந்தச் சந்தர்ப்பத்தில் பேசிக்கொண்டிருக்கும் நியாயத்தை நீர்த்துப் போக வைப்பார்கள். யார் இவர்கள்?
நச்சாண்மை என்று நாம் சொல்லும் கூறுகளை இவர்களிடம் பொதுவாகக் காணமுடியாது. தான் என்றும் செய்யாத தீங்கை இன்னொருவன் செய்தாலும், அவன் செய்த தப்பை விதிமுறைகளுக்குட்பட்டது (Conditions Apply)” ரீதியில் மட்டுமே கண்டனம் தெரிவிப்பார்கள்.

குடிகாரன் படுபாதகச் செயலை செய்தாலும், “போதைல செஞ்சிட்டான், பெருசு பண்ணாதீங்க” என்று பெரியமனுசத்தனம் பண்ணுவார்கள். “ஆம்பளன்னா அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வான்” என்று ஒரு நச்சாண்மையாளர் சொன்னால், “இந்த ஆம்பள தடிமாடுக இப்பிடித்தாம்மா. இவனுங்களுக்கு மகிழ்ச்சின்னா என்னன்னே தெரியல” என்று நச்சாண்மையாளர்க்கு அப்பாவி பிம்பம் கட்டமைப்பார்கள். எப்போதும் “கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்”, “அடிக்கிற கை அணைக்கும்” என்று பஞ்சாயத்து சொம்பு, நாட்டாமைத்துண்டு இவற்றோடு சில பழமொழிகளையும் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களின் செயல் ஆண்களுக்கிடையில் எழுதப்படாத சகோதர விதி (Bro Code) பின்பற்றி அவர்களைக் காப்பாற்றுகிறார்களே என்று தோன்றும். ஆனால் உண்மையில் இவர்கள் தான் “ஆண்களுக்கு ஆண்களே எதிரி” என்ற அணுகுமுறைக்கு உதாரண புருஷர்கள்.உண்மையிலேயே பெண்ணியம் பேசும் ஆண்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைத்து விதங்களிலும் பெண், ஆணுக்கு இணையானவள் என்று நம்புகிறவர்கள். இவர்களும் இப்படியே பிறப்பதில்லை. நம் சமூகமே பாலாக ஊட்டி வளர்க்கும் அத்தனை நச்சுகளிலிருந்தும் விடுபட்டு, பகுத்தறிவின் மூலமோ, நற்சிந்தனையாளர்களின் வார்த்தைகள் மூலமோ, புத்தகம் மூலமோ, அன்பு செலுத்தும் ஒரு உயிரின் சார்பாகவோ, மகள்களுக்கான அப்பாவாக முதிரும்போதோ இவர்கள் எல்லாம் தோன்றுகிறார்கள். இவர்கள் ஓர் பிரச்சினையின் அடிப்படையில் பொது சமூகத்தில் ஒரு பேச்சுவரும்போது, Not All Men என்று சொல்லவே மாட்டார்கள், ஏனென்றால், உண்மையில் திட்டு வாங்கும் ஆண்கள் நச்சாண்மை வகையினர் தான் என்று இவர்களுக்குத் தெரியும். ஆனால், இவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமே.
நச்சாண்மை குணநலன்களை முழுக்கமுழுக்க காட்டிக்கொள்ளும் ஆண்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்கள் முட்டாள்தனமானவர்கள். இயற்கையின் விதிப்படி இவர்களின் பலமும், குணமும் இணையைக் கவரும் யுக்திகளில் சேரும் என்பதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நமக்கு ஒத்துவராது என்று வாழ்வினை இல்லா தனியர்களாகத் தொடரவும் மாட்டார்கள். இவர்களுக்குப் பெண் வேண்டும், அடிமையாக வேண்டும், அன்பும் வேண்டும், பணத்துடனும் வேண்டும். முழுக்க நச்சாண்மையினராக வாழும் இவர்களின் என்ணிக்கை கணிசமாக இருக்கிறது.
பெரும்பான்மையினராக இருப்பது மேற்சொன்ன இரு வகையினருக்கும் இடையே இருக்கும் ஆண்கள். இவர்கள் சில சந்தர்ப்பங்களில் பெண்ணியம் பேசுபவராகவும், சில சந்தர்ப்பங்களில் நச்சாண்மையாளராகவும் நகர்ந்து கொண்டே இருப்பார்கள். எப்போது எந்தப் பகுதியில் நிற்கிறார்கள் என்பது குறிப்பிட்ட தருணத்தில், இவர்களுக்கு எந்த நிலைப்பாடு பயன் தரும் என்பதே முடிவு செய்யும்.இவர்களுக்கு நச்சாண்மையாளர் வேண்டும். அவர்கள் பெண்களை அச்சுறுத்துபவர்களாக, பெண்ணின் மாண்பைச் சிதைப்பவர்களாக இருக்க வேண்டும். “நீ ஸ்லீவ்லெஸ் போட்டா அவன் உன்னய காமக்கண்ணுல பாத்திருவான்”, “நீ இந்த நேரத்துல போனா அவன் உன்னய மானபங்கப் படுத்திருவான்”, “நீ இந்த பெண்ணோட சேர்ந்தா அவன் உன்னயும் அப்பிடி நெனப்பான்” இப்படியெல்லாம் சொல்லி, இவர்களைக் காட்டித்தான், இந்த இடைப்பகுதி ஆண்கள் தாங்கள் நினைக்கும் வண்ணம் பெண்களைப் பயமுறுத்தி வைப்பார்கள். இவர்களுக்குப் பெண்களிடம் “நல்லவன்” என்ற பெயர் வேண்டும், நச்சாண்மையை வெளிப்படுத்துபவர்களின் தனிமை, கெட்டவன் என்கிற இமேஜ் வேண்டாம். அதனால் நச்சாண்மையால் பலன் பெறுவர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு மத்தியில் இவர் சகோதர விதியைப் பின்பற்றுபவராக இருக்கிறார் என்ற ஒரு பெருமையையும் பரப்பி இருப்பார்கள்.
உண்மையில் சகோதரவிதியைப் பின்பற்றுபவராக இருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? நச்சாண்மையை வெளிப்படுத்தும் ஒரு நண்பன் இருந்தால், அவனிடம் போய் “நண்பா, நீ இப்பிடி இருக்குறதால உனக்கு அன்பு வந்து சேராது, வன்மம்தான் வந்து சேரும், பெண்களை சக உயிரா பாரு, நாகரீகமா பேசு, கெட்ட வார்த்தைகள் மனச நோகடிக்கும்” என்று சொல்லவேண்டும் அல்லவா? சொல்லவே மாட்டார்கள். குறைந்த பட்சம், “டேய், என்னைப்போல நடிக்கவாச்சும் செய்” என்றாவது? மாட்டவே மாட்டார்கள். ஏனென்றால், இந்த இடையில் இருக்கும் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் விருப்பம் போல பெண்களை அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வைக்க இந்த நச்சாண்மை பலிகடாக்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த இடையில் இருக்கும் ஆண்கள், தாங்கள் வாழ, நல்லவனாகக் காட்டிக்கொள்ள, பெண்களை அச்சுறுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த, ”உன்னய கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துறேன்” என்று வசனம் பேச நச்சாண்மையாளர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். முரண் இன்றி வாழ்ந்து, அதனால், பெண்களுடனான மேம்பட்ட உறவுநிலை, தரமான குடும்பவாழ்வு, சமூக அந்தஸ்து என்று பயன்பெற இவர்கள் பெண்களிடம் நடிப்பது போலவே, ஆண்களிடமும் நச்சாண்மையை ஊக்குவிக்கும் விதமாக, “நீங்கள்லாம் மாஸ் தலைவா” என்று ஊக்குவிப்பதோடல்லாமல், கொடுமைக்கார மனைவி அப்பாவி கணவன் நகைச்சுவையை தன்மீதே நிகழ்த்திகொள்வார்.
இந்த நச்சாண்மையாளன் தான்முட்டாளாயிற்றே ! இந்த இடைநிலை ஆணைப்பார்த்து சிரித்துவிட்டு, நானெல்லாம் யார் தெரியுமா என்ற நினைப்பில் பெருமையாக, கழட்டிப்போடும் சட்டையின் காலரை தூக்கிவிட்டும், மழித்துப்போடும் மீசையை முறுக்கிவிட்டும் ஒரு மாயையிலேயே வாழ்வார்கள்.
பிள்ளையை கிள்ளுபவனையும் புகழ்ந்து, தொட்டிலையும் ஆட்டும் இந்த “பிள்ளை புடிக்கிற” இடைப்பகுதி ஆண், பிள்ளையை தூக்கிக்கொண்டு தப்பித்துவிட, அத்தனை பிள்ளை கடத்தல் கேசையும் பிள்ளையை கிள்ளியவன் மேலே எழுதுவது தானே உலக வழக்கம்.
இப்போது சொல்லுங்கள், இந்த இடைப் பகுதி ஆணிடம்,
எனக்கு நல்லையும் அல்லை நீ,
நச்சாண்மை ஆண் தனக்கு நல்லையும் அல்லை,
பகுத்தறிவில் நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை,
நச்சாண்மை முற்றி அதை மறைத்து
உனக்கு வேண்டுவது சொல்லினை
கோணல் மதி மனத்தோய்!
என்று சொல்லலாமா?