spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசொதப்பிய மைக்! செல்ஃப் எடுக்குமா விஜய் அரசியல்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

சொதப்பிய மைக்! செல்ஃப் எடுக்குமா விஜய் அரசியல்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

திருச்சியில் பிரச்சார இடத்திற்கு விஜய் மிகவும் தாமதமாக வந்தது தவறு என்றும், அவர் அதை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகர் விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து இருப்பதாவது:- விஜயின் பிரச்சாரத்திற்கு தன்னெழுச்சியான ஒரு கூட்டம் இருந்தது. பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வருகை தந்தனர். ஆனால் அவர்களை பயன்படுத்திக் கொண்டார்களா? என்பதுதான் என்னுடைய கேள்வியாகும். நீங்கள் தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் சித்தாந்தங்களை, தமிழ்நாட்டின் அரசியலை காப்பாற்ற வேண்டும் என்றால், அது இளைய தலைமுறையின் கைகளில்தான் இருக்கிறது. தற்போது பயிற்சி பெறுபவர்கள் அடுத்து 40, 50 வருடங்களுக்கு இந்த எழுச்சியை தக்கவைப்பார்கள். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களை கொள்கை தலைவர்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தக்கூடாது.

கொள்கை தலைவர்களை, உங்களுடைய இயக்கத்தில் உள்ளவர்களுக்கு அல்லது உங்களுக்காக வந்திருப்பவர்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். விஜய் பிரச்சாரத்தின் போது மைக் பெயிலியர் ஆகிவிட்டது. ஆனால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். விஜய், தனது பிரச்சார இடத்திற்கு 10.30க்கு வர வேண்டும். ஆனால் தொண்டர்கள் பேருந்தை சூழ்ந்துகொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்ததை தவிர்த்திருக்க வேண்டும். தவெகவின் மூத்த தலைவர்களோ, அல்லது விஜயோ பேருந்தை சூழ்ந்து நிற்காதீர்கள். போகிற இடத்திற்கு தாமதமாகும் என்று கேட்டுக் கொண்டிருக்கலாம்.

1967க்கு முன்னதாக இதே திருச்சியில் ஒருங்கிணைந்த தஞ்சை – திருச்சி மாநாட்டை அண்ணா நடத்தினார். எம்ஜிஆர், கலைஞர் போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த மாநாட்டில் பேசினார்கள். மாநாட்டிற்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்தபோதும், கட்டுப்பாட்டுடன் இருந்தது. 1994ஆம் ஆண்டு வைகோ, மதிமுக மாநாட்டை இதே திருச்சியில் நடத்தினார். விடிய விடிய நடைபெற்ற மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த போதும், தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். 1989 ஜுலையில் பாமக கூட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கனோர் பங்கேற்றார்கள். ஆனால் எந்த பிரச்சினையும் இல்லை

. விஜய்க்கு முதல் பிரச்சாரம் என்கிறபோது நல்ல மதிப்பெண்கள் தான் கொடுக்கிறேன். ஆனால் பிரச்சினை என்ன எனில்? தலைவர், தனது தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்கிற அடிப்படை கேள்வி உள்ளது. தலைவர்கள் சொன்னால், தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும் அல்லவா? விஜய், தனது கட்சிக்கு அப்பாற்பட்டவர்களை வைத்துதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அவரது கட்சியினர் எப்படியும் அவருக்குதான் வாக்களிப்பார்கள். பொதுமக்களை சிரமப்படுத்தினால், அவர்கள் விரக்தி அடைந்துவிட மாட்டார்களா? இன்றைக்கு ஏராளமானோர் சிரமப்பட்டதாக தான் தெரிந்தது. ஏர்போர்ட்டில் இருந்து மரக்கடைக்கு செல்வதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருக்கக்கூடாது. அதை தாராளமாக தவிர்த்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.

ஏர்போர்ட்டில் திரண்ட கூட்டம் அங்கேயே வடிந்துவிட்டது. ஆனால் அந்த கூட்டம் விஜய் வாகனத்தையே பின்தொடர்ந்து வந்தன. ஒட்டுமொத்த கூட்டம் என்று பார்த்தால் ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். அதிகபட்சம் 20 ஆயிரம் பேர் இருக்க முடியும். மரக்கடை பகுதியில் 2 ஆயிரம் பேர் நின்றாலே பெரிய கூட்டமாக தெரியும். அங்கு நானும் பேசி இருக்கிறேன். தவெக தரப்பில் சில ஆயிரங்கள் வரலாம் என்று சொல்லி இருப்பார்கள். அதை விட இரண்டு, அல்லது 3 மடங்கு கூடுதலானவர்கள் வந்திருக்கலாம். ஆனால் பிற மாவட்ட தொண்டர்கள் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தால் கூட்டத்தை எளிதாக தவிர்த்து இருக்கலாம். அல்லது விஜய் பேசக்கூடிய இடங்களுக்கு பிரித்து அனுப்பி இருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக எல்லோரும் வாங்க என்று சொல்வதன் மூலம் ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை காட்சி ஊடகங்களில் காட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒரு சினிமாவில் எப்படி ஹைப் கிரியேட் செய்கிறோமோ அதுபோன்று செய்துள்ளனர். அரசியல் என்பது சினிமா கிடையாது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடைபெற்றால், எல்லோரும் பொறுப்பேற்க வேண்டி இருந்திருக்கும். கூட்டத்தை கட்டுப்படுத்த தவறுவது அரசியல் கடமையில் இருந்து தவறுவதாகும். காரணம் இதனால் பாதிக்கப்பட போவது மக்கள்தான்.

திமுக அரசு மீது விஜய் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தேர்தலுக்கு முன்பாக எல்லா எதிர்க்கட்சிகளும் வைக்கும் குற்றச்சாட்டுகள் தான். இதில் இருந்து அவர் எந்தத வாக்கு வங்கியை உருவாக்க விரும்புகிறார் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அடிப்படையில் அவர் உருவாக்க விரும்புவது விஜய் வாக்கு வங்கியாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் எல்லோரும் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள். விஜய், கிட்டத்தட்ட திராவிட அரசியலை தான் போதிக்கிறார். விஜயின் அரசியல் எப்போது புதுமையாகும் என்றால்? மக்களுக்கு தொந்தரவு தராமல்,  அதேநேரத்தில் தன்னுடைய சித்தாந்தங்களை வலிமையாக சொல்லக்கூடிய, மக்களோடு கலந்து பழகக்கூடிய, உப்பரிகை அரசியல் இல்லாத ஒரு அரசியலாக அவர் கொண்டு வர வேண்டும்.

அண்ணாவின் அரசியல் என்பது உப்பரிகை அரசியல் அல்ல, மக்களோடு கலந்து அரசியல் செய்வது. அந்த அரசியல் விஜய்க்கு இன்னும் வசப்படவில்லை. அதற்கு காரணம் அவர் தற்போது வரை உச்ச நட்சத்திரமாக உள்ளார். அவரால் கீழே வர முடியவில்லை. அப்படி இறங்கினால் சிக்கல் வருமோ என்று நம்புகிறார். ஆரம்பத்தில் இது நன்றாக தெரியும். ஆனால் போக போக விமர்சனங்கள் எழும். விஜய்க்கான வாய்ப்பு என்பது அவரிடம் இளைஞர் பட்டாளம் உள்ளது. அவர்களை அரசியல்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு உள்ளது. அதனை அவர் செவ்வனே செய்ய வேண்டும். இந்த கூட்டம் ஒரு நல்ல விஷயம்தான். இவர்களை அரசியல் ரீதியாக பண்படுத்த வேண்டும். அதேநேரம் அவர்களை பயன்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ