பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.


பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்குள்ள கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பீர்முகமது, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் நாட்டிலேயே இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலமாகும். பீகாரில் இளைஞர்களின் சராசரி வயது என்பது 19 ஆகும். எமர்ஜென்சிக்கு பிறகு இந்தியாவின் மனசாட்சியை வெளிப்படுத்தும் தேர்தலாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு மிகவும் கவனிக்கப்பட கூடிய தேர்தலாகவும் இது அமைந்துள்ளது. நிதிஷ்குமாருக்கு உள்ளூரில் அரசியல் செய்வதற்கு பாஜக உடன் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேநேரம் தேஜஸ்வி மீதான கரிஷ்மா இருக்கிறது. வலிமையான எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் செயல்பட்டிருக்கிறார். அது தற்போதைய தேர்தலில் எதிரொலிக்க போகிறதா? என்பதும் முக்கியமானதாகும்.
பீகார் தேர்தலை பொறுத்தவரை நிதிஷ்குமாருக்கு மிக முக்கியமான பரிசோதனை என்றும் கூட வைத்துக்கொள்ளலாம். ஒடிசாவில் நீண்ட காலம் ஆட்சிபுரிந்தது நவீன் பட்நாயக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் பீகாரில் 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் ஆட்புரிந்து வருவது அவருக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளதா? என்பதும் முக்கியமான விஷயமாகும். அதேநேரத்தில் ராகுல்காந்தி, ஆட்சி திருட்டு என்கிற குற்றச்சாட்டை வைத்தார். ஆளுங்கட்சியின் ஏற்படுத்தும் பல்வேறு தடைகளை தாண்டி இந்தியா கூட்டணி நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள மிகப்பெரிய அளவிலான இளம் வாக்காளர்களை நோக்கி அவர்கள் பேசியுள்ளனர்.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஒரு பரீட்சார்த்த முறையில் தான் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவருடைய இலக்கு என்பது நிதிஷ், தேஜஸ்வி மீது அதிருப்தியில் உள்ளவர்கள் தான். என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மக்களை நேரடியாக சென்றடைவதற்கான கட்டமைப்புகள் இருக்கிறது. அத்தகைய கட்டமைப்பு பிரசாந்த் கிஷோரிடம் கிடையாது. அவர் மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவராக இன்னும் மாறவில்லை. பீகார் தேர்தலை பொருத்தவரை இந்தியா கூட்டணி மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் பேசுகிறார்கள்.
பாஜக சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறது. காங்கிரஸ் சமூகநீதி பாதைக்கு திரும்பியதால் தான் 2024 மக்களவை தேர்தலில் பாஜக குறைவான இடங்களை பெறுவதற்கு காரணம். அதற்கு முன்பு இத்தகைய தொலைநோக்கு பார்வை இல்லாமல் தான் காங்கிரஸ் பலமிழந்து போயிருந்தது. அத்தகைய சமூகநீதி தமிழ்நாட்டில் வெற்றி பெற்று நிரூபித்து காண்பித்தது. எனவே அதை பீகார் போன்ற மாநிலத்தில் பரிசீலித்து பார்த்துள்ளனர். இது வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற மாநிலங்களுக்கும் செல்வார்கள்.

சமூகநீதி அரசியல் திட்டத்தில் இலவசங்களை வழங்குவது முக்கியமான ஒன்றாகும். பாஜக சமூக நீதியில் உள்ள மக்கள் நல திட்டங்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பெரும்பான்மை மக்கள் தாக்கப்படுவதாக நேரட்டிவ் செட் செய்வார்கள். டொனால்டு டிரம்ப் நேரேட்டிவும் இதுதான். அவர்கள் இருவரின் நேரேட்டிவ்களுக்கு இடையிலான ஒற்றுமையை நீங்கள் பார்க்கலாம். நாம் பெரும்பான்மையினர் என்தால் தாக்கப்படுகிறோம் என்று சொல்வார்கள். நிதிஷ் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களை தக்க வைப்பதற்காக சமூகநீதியில் உள்ள இலவச திட்டங்கள் என்கிற சில பகுதிகளையும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக உடனான கூட்டணிக்கும் அவர்கள் சமூகநீதியில் உள்ள இலவச திட்டங்களை எடுத்துக்கொள்வார்கள். அதேசமயம் பாஜகவின் மிகப்பெரிய அஜெண்டா என்பது க்ரானி கேப்பிட்டலிசம் என்பதாகும். குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவார்கள். அதை ஒருபக்கம் செயல்படுத்தி கொண்டே இருப்பார்கள். மறுபுறம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சமூகநீதி திட்டங்களில் இருந்து இலவசம் போன்ற கூறுகளை எடுத்துக்கொள்வார்கள்.

பாஜக இலவசங்களை அறிவிப்பதால், இந்தியா கூட்டணியும் இலவசங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக சொல்ல முடியாது. அரசியலில் இலவச திட்டங்களை அறிவிக்கும்போது அதை விட கூடுதலாக தான் அறிவிக்க வேண்டும். ஒரு இலவச திட்டத்தை அதிமுக அறிவித்தால், திமுக அதைவிட சிறந்த இலவச திட்டத்தை அறிவிக்கும். ஜனநாயக அரசியலில் இது தவிர்க்க முடியாததாகும். நியூயார்க் நகர மேயர் தேர்தலில் குடியிருப்புகளின் வாடகையை உயர்த்தவே முடியாது என்று ஜோரான் அதிரடியாக அறிவித்தார். அதை ஜோரான் அறிவித்தாலும் சரி, டிரம்ப் அறிவித்தாலும் சரி. அது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்புக்குரிய திட்டமாகும்.
பீகார் தேர்தலை பொறுத்தவரை தேஜஸ்வி யாதவுக்கு இருக்கும் கரிஷ்மா மற்றும் தேர்தல் களத்தில் அவர்கள் செய்திருக்கும் பிரச்சாரம் மிகவும் நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது. பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் அவருக்கான வாய்ப்பை பீகார் மக்கள் வழங்கக் கூடும். ஹரியானாவில் அவர்கள் அரசை திருடலாம். மகாராஷ்டிராவில் 76 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிக்கலாம். ஆனால், இவற்றுக்கு எல்லாம் மத்தியிலும் மக்களின் குரல் எழுந்து வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பல்வேறு தடைகள் இருந்தபோதும் அதை எதிர்த்து களமாடினால் வெற்றி பெற முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


