பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்ட விவகாரத்தில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து இருப்பதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நயினார் நாகேந்திரன் விருந்து வைத்துள்ளது தொடர்பாகவும், பீகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்க நடைபெறும் முயற்சிகள் குறித்தும் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- நயினார் நாகேந்திரன் தன்னுடைய வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து வைத்துள்ளார். அவருடைய விருந்து பாமக வைத்த விருந்தைதான் நினைவு படுத்துகிறது. தைலாபுரம் தோட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் போன்றவர்களை அழைத்து ராமதாசும், அன்புமணியும் விருந்து வைத்து மகிழ்ந்தனர். அதன் பிறகு தேர்தலில் அது என்னவாக எதிரொலித்தது என்பதை தமிழ்நாடு களம் பார்த்துதான். விருந்து கொடுப்பதன் மூலம் கூட்டணி உறுதியாகும் என்றால் நாள்தோறும் விருந்து கொடுக்கலாம். ஆனால் உங்கள் கூட்டணியில் இருந்த சிலர் வெளியேறி, முதலமைச்சரை சென்று பார்க்கிறார்கள். அதை நீங்கள் சரி செய்கிறீர்களா என்றால், அப்படி செய்யவில்லை என்றுதான் எல்லோரும் குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை விட அமித்ஷா, மோடிக்கு மிகவும் விசுவாசமானவர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார். அதற்கு நயினார் நாகேந்திரன், தன்னிடம் கேட்டிருந்தால் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று கூறினார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய போனில் இருந்து நயினாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசெஜை பத்திரிகையாளர்களிடம் காண்பித்து, பிரதமரை சந்திக்க அனுமதி கோரிய தன்னுடைய மெசேஜுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அப்போது திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து இருப்பதற்கு காரணம் என்ன என்று நயினார் நாகேந்திரன் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், பாஜக கூட்டணியில் இருக்கிறீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நான் கூட்டணியில் இருக்கிறேனா? இல்லையா? என்று நயினார் நாகேந்திரனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். மேலும், தங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இதுவரை அமித்ஷா சொல்லவில்லை. அவர் சொன்னதும் போய் சந்திப்பதாக சொல்கிறார். அப்போது, நயினார் நாகேந்திரன் விருந்து வைப்பதன் நோக்கம் என்ன? தினகரனின் கேள்விகளுக்கு நயினாரும், ஓபிஎஸ்-ம் பதில் சொன்னார்களா? அப்போது அதிமுக – பாஜக கூட்டணி எதை நோக்கி நகர்கிறது. ஆக்கப்பூர்வமாக எதாவது இந்த கூட்டணியில் நடந்திருக்கிறதா? திமுக கூட்டணியில் ஒரு வெளியேறுகிறது என்கிறபோது நாங்கள் போகவில்லை என்று சத்தியம் செய்கிறார். நடைபயிற்சி சென்ற ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்து பேசுகிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதலமைச்சரை சந்தித்து பேசுகிறார். இப்படி திமுக கூட்டணியில் பழைய கட்சிகள் தொடர்கின்றன. மேலும் புதிய கட்சிகளும் கூட்டணிக்கு வருகிறது. இந்த கூட்டணி எவ்வளவு வலுவாக உள்ளது.
மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, பெரிய கட்சிகள் எல்லாம் நம்முடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . மெகா கூட்டணி அமையும் என்று சொல்கிறார். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அது நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. அதேவேளையில் பாஜக எதாவது கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா என்றால் அதுவும் கிடையாது. பாஜக கூட்டணில் முடிவு எடுக்கும் இடத்தில் தாங்கள் தான் இருக்கிறோம் என்று பாஜக சொல்லாமல் சொல்கிறது. ஆனால் அதிமுக, தாங்கள் தான் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ளோம் என்று அச்சத்துடன் சொல்லி வருகிறது. இதில் எதையாவது சரி செய்தீர்களா? என்றால் சரிசெய்யவில்லை. பிறகு எதற்கு இந்த விருந்து? அப்படி இந்த விருந்தில் பிரச்சினைகளை சரிசெய்து விட்டீர்கள் என்றால் எதிர்வரும் நாட்களில் அதன் உண்மை தன்மை தெரிந்துவிடும்.
பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ராகுல்காந்தியின் வீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ராகுல்காந்தி 2 அறிவிப்புகளை சொல்கிறார். முதலாவது தம்மிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாக சொல்கிறார். தேர்தல் ஆணையம் தவறு செய்ததை கண்டுபிடித்துவிட்டோம் என்றும் ராகுல்காந்தி சொல்கிறார். பீகாரின் பிரதான கட்சியின் தலைவரான தேஜஸ்வி தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவர் போலியான வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. 63 லட்சம் வாக்காளர்கள் ஒரே நாளில் காணாமல் போகிறார்கள். பெயரை நீக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம். மற்றவர்கள் என்ன ஆவார்கள். ப.சிதம்பரம், 6.5 லட்சம் பீகாரிகளை தமிழ்நாட்டில் கொண்டுவந்து வாக்காளர்களாக சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக சொல்கிறார். இந்திய பிரஜைகள் எங்கே குடியேறினாலும் அங்கே தன்னுடைய வாக்குரிமையை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் வீடு பீகாரில் இருக்கும்போது இங்கு வாக்குரிமையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இதற்கு பின்னால் உள்ள திட்டத்தை அம்பலப்படுத்தப் போகிறேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மக்களவை தேர்தலின் போது சசிகாந்த் செந்திலுக்கு போடப்பட்ட 12 ஆயிரம் வாக்குகள் மாயமானது. அப்போது தேர்தல் ஆணையம் என்ன பதில் சொன்னது? மகாராஷ்டிராவில் இதேபோல் முறைகேடு நடைபெற்றதாக சரத்பவார் சொன்னார். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்ததா? அமித்ஷா சொன்னார், தற்போது மட்டுமல்ல இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் என்று. இப்படி தேர்தல் நடைபெற்றால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆட்சி செய்யும். இன்றைக்கு பாஜக ஆட்சியில் இருப்பதற்கு 15 முதல் 20 தொகுதிகள் வரை தான் வித்தியாசம் உள்ளது. இந்த 15-20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் மிகப் பெரிய அளவில் துணை நின்றுள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு ஆவணங்களுடன் பதில் சொல்லுங்கள். சீர்திருத்தம் செய்கிறோம் என்கிற பெயரில், இந்த நாட்டை சீர்கெடுத்துவிட்டீர்கள். இன்னும் சீர்திருத்தம் செய்வீர்கள் என்றால் அது வேண்டாம் என்று சொல்கிறோம். தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை பொய்த்துபோய் விட்டது.
ராகுல்காந்தி ஒரு அணுகுண்டு தயாராக உள்ளது என்று சொல்லிவிட்டார். அதை எப்படி வெடிக்க வைக்கப் போகிறார்கள் என்றுதான் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்யப் போகிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தம் தென்னிந்தியாவை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் யார் ஆட்சிபுரிய வேண்டும் என்று நான் உறுதியாக உள்ளேன். தமிழர்களின் வாக்குகள் தானே மோடிக்கு கிடைக்காது. அதனால் பீகாரில் இருந்து 6.5 லட்சம் பேரை கொண்டுவந்து தமிழ்நாட்டில் சேர்த்துவிடுவோம். அவர்கள் எனக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அது தமிழ்நாட்டில் பாஜக ஒரு முன்னணி அரசியல் சக்தியாக மாற செய்யும். பீகாரில் நீக்கப்பட்ட 63 லட்சம் பேரில் 3.5 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டார்கள். அப்போது இது முழுமையாக தென்னிந்தியாவை பாதிக்கிறது. எனவே அனைத்து மாநிலங்களும் ஒன்றாக சேர்ந்துதான் எதிர்க்க வேண்டும். அந்த அணிதிரட்டும் வேலையை தான் இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.