P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும் அனுமதிக்க கூடாது…

மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது. குரங்கு இனங்களின் பரிணாம வளர்ச்சியே மனிதன் என்று தெரியவரும் நிலையில், தற்போது பல சாதி பிரிவுகளாக பிரிந்து வாழும் மனிதன் எந்த சாதி குரங்கிலிருந்து எந்த சாதி மனிதன் உருவானான் என்று யாராலும் கூற முடியுமா? முடியாது அல்லவா, இப்படி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து எந்த விதமான பிரிவினையும், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடையாளமும் இல்லாமல் வாழ்ந்த மனித இனம், காலப்போக்கில் அவர்கள் வாழ்ந்த நில வகைகளை கொண்டு தங்களின் குடிகளை அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது.
அந்த வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை ஆகிய நிலங்களில் வாழ்ந்த மனித இனம் அவர்கள் வாழ்விடத்திற்கு ஏற்றார் போல் செய்யக்கூடிய தொழில்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தங்கள் குடியிருப்புகளையும், தங்களையும் அடையாளப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் காலப்போக்கில் புத்தி கூர்மையையும், உடல் வலிமையையும் கொண்ட மனிதர்கள் மற்றவருடைய நிலங்களையும், வளங்களையும், சூறையாடியும், அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் மனித உழைப்புகளை சுரண்டியும் தங்களை மேலானவர்கள் எனவும் இனக்குழு தலைவன் எனவும், மன்னர்கள் எனவும் தங்களை அடையாளப்படுத்திகொண்டனர். அந்த காலகட்டத்தில் தான் மனுதர்மம் போன்ற சாசனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த காலகட்டத்தில் தான் மனிதர்களை அவர்கள் வாழ்விடத்திற்கு ஏற்றார் போல் செய்த தொழிலை அடிப்படையாக கொண்டு வர்ணாசிரம அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் எடுத்து கொண்டாலும் மங்கோலிய இனம், காங்கேசியஸ் இனம், நீக்ரோ இனம் என்ற மூன்று வகையயான மனிதர்கள் தலை முடி, தோல் நிறம், முக அமைப்பு உள்ளிட்ட வடிவமைப்புகளில் வித்தியாசத்துடன் பல நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் என பல நாடுகளின் ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது.
பொதுவாக நமது நாட்டின் அளவில் எடுத்து கொண்டால் அவ்வையார் மற்றும் திருவள்ளுவரும் கூட மேலே குறிப்பிட்டது போல் நில வகையின் அடிப்படையில் வாழ்ந்த குடிகளை பற்றியும், மனிதனின் குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று கூறியிருக்கிறார்களே தவிர தொழில் அடிப்படையில் உருவான சாதிகளை பற்றி குறிப்பிடவில்லை. மேலும், பல வரலாற்று ஆய்வுகளை கொண்டு நாம் பார்க்கையில் சாதி பிரிவுகள் என்பது சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களுடைய ஆட்சி காலத்தில் இருந்து தான் சிலருடைய சுயநலத்தாலும், சூழ்ச்சிகளாலும் இந்த சாதி பாகுபாடுகள் வர்ணாசிரம அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளன என்பது தெரியவருகிறது.
காலப்போக்கில் இதை நன்கு அறிந்து கொண்ட புத்தர், ராமானுஜர், வள்ளலார், அய்யா வைகுண்டர் உள்ளிட்ட மேலும் பல ஆன்மீக பெரியோர்கள் கடவுளின் பெயரால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகளை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வந்த அயோத்திதாச பண்டிதரில் துவங்கி, நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் உள்ளிட்ட, இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும் கூட இந்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறார்கள்.
இந்த சாதி பிரச்சனையை இந்திய அளவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக காந்தி பல முயற்சிகளை எடுத்திருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதிகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அடியோடு கலைய வேண்டும் என்பதற்காக பல சட்ட திட்டங்களை உருவாக்கி, சாதி பாகுபாட்டிற்கு எதிராக மக்கள் சட்ட போராட்டத்தை கையில் எடுக்க செய்தார். தமிழ்நாட்டு அளவில் எடுத்து கொண்டாலும், அரசியல் ரீதியாக அயோதிதாச பண்டித்தர், இரட்டைமலை சீனிவாசனார் இவர்களை தொடர்ந்து நீதி கட்சி தலைவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கலைப்பதற்காக மிகவும் வலிமையாக போராடினர்.
அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது சாதிக்கு எதிராக பல சட்ட திட்டங்களை உருவாக்கினர். நீதி கட்சி ஆட்சியின் போது தான் எம்.சி.ராஜா ஆகியோருடைய தீவிர முயற்சியால் பள்ளிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து அனைத்து மக்களுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த சௌந்தரபாண்டியனார், இரண்டு சாதியினர் இடையே மோதல் ஏற்பட்டு நடைபெற்ற கலவரத்தின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டாலும், ஒரு பிரிவினருடைய வீடுகள் மற்றும் உடமைகள் தீயிற்கு இரையாக்கபட்டாலும், அந்த வன்முறை செயலை செய்த பிரிவினரிடமிருந்து தண்டவரி என்ற ஒரு வரியை வசூலிக்கும் முறையை கொண்டு வந்தார். அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என பயண சீட்டில் அச்சிட்டு இருந்த பேருந்துகளின் நிர்வாகங்களை மிகவும் கடுமையாக கண்டிப்பதுடன் தாழ்த்தபட்ட மக்களை பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்காத பேருந்துகளின் உரிமைகள் ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டார்.
பின்னர், பெரியார் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு அமைப்பை துவக்கி அதனுடைய முதல் மாநில மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரும் இனி தங்களுடைய பெயருக்கு பின்னால் சாதிகளுடைய பெயர்களை சேர்ப்பது இல்லை எனவும், இப்படி பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்கள் இனி அதை நீக்கி விடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
அந்த புரட்சிகரமான முடிவை தமிழ்நாட்டில் எந்தவித பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒரே நிலைப்பாட்டில் ஒருமித்த கருத்துடன் மக்கள் அனைவரும் இன்று வரை கடைபிடித்து வருவது, தமிழர்களுடைய சுயமரியாதை கொள்கையையும், சாதிக்கு எதிரான தமிழர்களின் நிலைப்பாட்டையும் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் நம்மை பெருமை அடைய செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சாதி கட்சி தலைவர்கள் கூட தங்களுடைய பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை இன்று வரை சேர்க்காமல் இருப்பது தமிழ்நாடு இன்னும் சுயமரியாதை கொள்கையை கடைபிடிக்க கூடிய மண் என்பதை அடையாளப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில், இப்படிப்பட்ட சுயமரியாதை சீர்திருத்த செயல்பாடுகளை மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புடன் பின்பற்றுவதை பார்த்து தான், வட இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் அமிஷ் திரிபாதி
என்பவர், தனது பெயரை அமிஷ் என்று மாற்றி கொண்டார். அதற்கு முன்பு தனது பெயருக்கு பின்னால் இருந்த திரிபாதி என்ற சாதி அடையாளத்தை காலப்போக்கில் அவர் நீக்கிவிட்டார். அவர் அப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டதற்கான காரணம், தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் யாரும் தனது பெயருக்கு பின்னால் சாதியின் அடையாளத்தை இணைக்காதது மகிழ்ச்சியாக இருந்தது. அதன்படி தான் என்னுடைய பெயரையும் அமிஷ் என்று மாற்றி கொண்டேன் என கூறியிருக்கிறார்.
இப்படி சீர்திருத்த செயல்பாடுகள் தலைதூக்கி இருந்த தமிழ்நாட்டில் படிப்படியாக சாதிப்படி நிலை மாற்றங்கள் பழைய காலத்திற்கு திரும்பி கொண்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுகள் அடுத்து வரக்கூடிய இளைய தலைமுறையினர்களுடைய மனதில் படியக்கூடாது என்பதற்காக தான் தமிழ்நாடு அரசு பல சமூக சீர்திருத்த செயல்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சாதி வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் முற்றிலும் அகற்றுவதற்காக மேற்கொள்ள கூடிய செயல் திட்டங்கள் அனைத்தையும் தற்போது வட இந்தியாவில் இருக்க கூடிய மாநிலங்களுக்கும் பரவலாக போய் சேர்ந்து கொண்டு இருக்கின்றது என்பதை நாம் பார்க்கும் போது நமக்கு பெருமையாக இருக்கின்றது.
சாதி ஏற்ற தாழ்வுகளை கலைப்பதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளக்கூடிய சீர்திருத்த செயல்பாடுகளை போல், ஒன்றிய அரசும் பல சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வட இந்தியாவில் பெயருக்கு பின்னால் தனது ஜாதி அடையாளங்களை சேர்த்து கொள்வது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. பொது நிலைப்பாட்டில் இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை தங்களுடைய பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை சேர்த்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல், பள்ளி கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ,மாணவிகள் பெயருக்கு பின்னால் கூட தனது சாதி அடையாளங்களை போட்டு கொண்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்க கூடியதாக உள்ளது.இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்காலத்தில் அறவே அகற்றப்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் முடிவு எடுத்து அதற்கான சட்ட வழிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக சமூகத்தில் பொது நிலைப்பாட்டில் இருந்து தொண்டாற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள் தங்களுடைய பெயருக்கு பின்னால் சாதி பெயரை நீக்க வேண்டும். அப்படி சாதிப் பெயரை தனது பெயருடன் இருந்து நீக்காவிட்டால் அவர்களுக்கு தேர்தலில் போட்டிடுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க கூடாது. அதேபோல், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வு எழுதக்கூடிய தேர்வாளர்கள் தங்களுடைய பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை சேர்த்து இருந்தால் அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு தேர்வாணையம் அனுமதிக்க கூடாது. இப்படிப்பட்ட உறுதியான முடிவுகளை தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியா முழுவதும் சாதி ஏற்றத்தாழ்வுகளை அறவே அகற்ற முடியும்.