அண்ணாமலையால் பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட குஷ்பு, கே.டி.ராகவன் போன்றவர்களை மீண்டும் பொறுப்புக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம் நயினார் நாகேந்திரன் அவருக்கு செக் வைத்துள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.


பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் மற்றும் அண்ணாமலையால் புறக்கணிக்கப் பட்டவர்களுக்கு மீண்டும் இடம் கிடைத்திருப்பதன் பின்னணி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜகவில் அண்ணாமலையால் ஓரங்கட்டப்பட்ட கே.டி.ராகவன், குஷ்பு போன்றவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நயினார் நாகேந்திரன் ஒரு அக்மார்க் அரசியல்வாதி. அவருக்கு அரசியல் எப்படி செய்வது என்று நன்றாக தெரியும். அண்ணாமலை முன்னாலும், பின்னாலும் கேமராவை வைத்துக்கொண்டு ரீல்ஸ் போடுவதுதான் அரசியல் என்று நினைக்கிறார். அது தளத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் களத்தில் சரிபட்டு வராது. களத்தில் கில்லி யார் என்றால் இப்போது நயினார் நாகேந்திரன்தான் என்று நிரூபித்துள்ளார். இதில் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பது கே.டி.ராகவன் உள்ளே வந்ததுதான். யாரால், மோசமாக அம்பலப்பட்டு வெளியேற்றப்பட்டாரோ, அவரை கொண்டுவந்து, தன்னுடைய கேபினட்டில் வைத்துள்ளார். பாஜகவின் நிர்வாக குழுவுக்குள் கே.டி.ராகவனை கொண்டு வந்துவிட்டார். அப்படி என்றால் அண்ணாமலைக்கு செக் வைக்க, நயினார் நாகேந்திரன் தயாராகிவிட்டேன் என்று சொல்கிறார்.

அண்ணாமலை தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார். ஆனால் பாஜக மேடைகளில் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று உறுதி செயது கொண்ட பின்னரே அவர் பங்கேற்பது ஏன்? தற்போதும் கூட பாஜகவில் பல மாவட்ட தலைவர்களை மாற்றுவதற்கு முட்டுக்கட்டை போடுவது அண்ணாமலைதான். பாஜக போன்ற தேசிய கட்சிகளில் மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உடன், அவர்களுக்கு வசதியான நபர்களை மாவட்ட தலைவர்களாக, மாவட்ட செயலாளர்களாக நியமித்துக் கொள்வார்கள். காரணம் அண்ணாமலை நியமித்த ஆட்களை வைத்து, நயினார் நாகேந்திரனால் கட்சி நடத்த முடியாது. அப்போது, மாவட்ட தலைவர்களை மாற்றுவதற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள். கட்சியின் அதிகார கட்டமைப்பை முழுமையாக மாற்றி தனக்கு ஏற்ற மாதிரி அமைத்துக் கொண்டிருந்தார் அண்ணாமலை. தற்போது அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தன்பக்கம் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இருந்தபோதும் எஸ்.ஜி.சூர்யா, அமர்பிரசாத் ரெட்டி போன்ற அண்ணாமலையின் ஆதரவாளர்களும் நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாஜகவில் உள்ள தலைவர்களான நயினார் நாகேந்திரன், குஷ்பு, சசிகலா புஷ்பா, வி.பி.துரைசாமி, ஏ.ஜி. சம்பத் போன்றவர்கள் எல்லாம் வெளிக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான். ஒட்டுமொத்தமாக வெளியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு கொடுக்கிறபோது, விஜயதாரணிக்கு பொறுப்பு கொடுக்க முடியவில்லையா? அதற்கு காரணம் விஜயதாரணிக்கு ஏற்ற பொறுப்பு பாஜகவில் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜகவில் பொறுப்பேற்கும் அளவுக்கு விஜயதாரணிக்கு தகுதி இல்லை என்று தான் அர்த்தமாகும். இதை அவர்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு போக நினைப்பவர்களுக்கு, விஜயதாரணி ஒரு பாடமாக இருக்கிறார்.

அண்ணாமலையால் பாஜகவில் பார்ப்பனர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. வெளிப்பார்வைக்கு அப்படி இருந்ததே தவிர, கடைசியில் அவர்கள் எல்லோரும் இன்றைக்கு பாஜகவிலேயே நிலை பெறுகிறார்கள். ஹெச்.ராஜா பாஜகவிலேயே நிலை பெறுகிறார். ஆயிரம் அவமானங்கள். தோல்விகள் வந்தபோதும் அவர் வெளியே வரவில்லை. கே.டி.ராகவனை, வெளியில் தலைகாட்ட முடியாமல் அண்ணாமலை செய்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கே ஆலோசனை சொல்கிற இடத்தில் இருந்தவர் கே.டி.ராகவன். இன்றைக்கு அவர் என்ன கெட்டா போய்விட்டார். மீண்டும் பாஜகவுக்குள் வந்துவிட்டார். இதன் மூலம் பாஜக என்பது பார்ப்பனர்களின் கட்சி என்பது உறுதியாகிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளலாம். நயினார், அண்ணாமலை, முருகன் போன்றவர்கள் அவர்களின் வீட்டிற்கு வெள்ளை அடிக்க வந்தவர்கள். பாஜகவில் பார்ப்பனர் அல்லாமல் ஓர் சீர்திருத்தம் செய்கிறார்கள் என்றால் அதை நம்பக்கூடாது. ஏனென்றால் பார்ப்பனர்களை பாஜகவில் இருந்து அப்புறப்படுத்த முடியாது. காரணம் அது அவர்களுக்கான கட்சியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


