தந்தை பெரியார் தான் எடுத்த முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் என்றும், ஆனால் அவரை விமர்சித்தவர்கள் அத்தனை பேரும் மன்னிப்பு கேட்டனர் என்றும் இயக்குநர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து இயக்குநர் பழ.கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியினர் பெரியாரை ஈ.வெ.ரா என விமர்சிக்கின்றனர். அவர் உயிருடன் இருந்திருப்பார் என்றால், அதற்காக அவர் வருத்தப்படமாட்டார். பெரியார், தன்னை விமர்சித்ததற்காக யார் மீதாவது வழக்கு தொடர்ந்துள்ளாரா? அவர் எந்த வழக்கிலாவது மன்னிப்பு கேட்டுள்ளாரா? ஆனால் அவரை விமர்சித்தவர் அத்தனை பேரும் கிட்னி பாதிப்பு, உடல்நிலை சரியில்லை என்று எதாவது ஒரு காரணங்களை சொல்லி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டனர். பெரியார் எல்லா இடத்திலும் சென்று நான் தான் செய்தேன் என்பார். பிள்ளையார் சிலை உடைப்பு தொடர்பான வழக்கில், மன்னிப்பு கேட்க வைக்க நீதிபதி எவ்வளவோ மடக்கி மடக்கி பேசியபோதும், நேரடியாக நீதிமன்றத்தில் நான் உடைத்தேன் என்று சொன்னவர் பெரியார். தான் எடுத்த முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் அவர்.
தனது கடைசி கால கட்டத்தில் உடல்நலம் குன்றிய பின்னர் கையில் மூத்திரவாளியை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக மேடைகளில் ஏறி பேசினார். அவர் ஆட்சி அமைக்கவோ, பங்கு பணத்திற்காகவோ அல்லது 8 சதவீதம் வாக்குகள் உள்ளதற்காக பேரத்தை அதிகரிக்க போகிறாரா?. காமராஜர், ராஜாஜியை எதிர்த்தார் என்பதற்காக அவரை பெரியார் ஆதரித்தார். அண்ணா ஆட்சி அமைந்த அன்றைய தினமே ராஜாஜியை வெளியேற்றி விட்டு பெரியாரிடம் வந்து இந்த ஆட்சி உங்களுடைய ஆட்சி என்று சொன்னார். அன்று முதல் தனது மறைவு வரை திமுகவை தான் பெரியார் ஆதரித்தார். இரட்டை வாக்குரிமை விவகாரத்தில் காந்தி உண்ணா நோன்பு இருந்தார். காந்தியடிகளின் உடல்நிலையை கருதி அனைவரும் அம்பேத்கருக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவருக்கு ஆதரவாக நின்றவர் பெரியார் மட்டும்தான். அதே பெரியார் காந்தி இறப்பின்போது, காந்தியை கொன்றது ஒரு ஊதாரி பார்ப்பான் என்று நாளிதழில் எழுதினார். அடுத்த நாள் இந்த நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் வைக்க வேண்டும் என சொன்னார்.

சீமான் இன்னும் பெரியார் குறித்த அபத்தங்களை பேசட்டும். அதனால் எல்லாம் பெரியார் வீழ்ந்துவிட மாட்டார். இவர்களுக்கு அந்த அச்சம் உள்ளது. அதனால்தான் 52 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஒருவரை மீண்டும் மீண்டும் சண்டைக்கு கூப்பிடுகிறார்கள். இதனை பேருந்துக்கு காத்திருப்பவர்கள் சிறிது நேரம் சாலையோரம் நடைபெறும் சண்டையை வேடிக்கை பார்ப்பது போன்றது தான். 2026 சட்டமன்ற தேர்தல் வரட்டும். திமுக சொல்வதை போல 200ஐ வெல்வார்கள். இங்குள்ள பெண்கள் படித்ததற்கு பெரியார்தான் காரணம். பெண்களுக்காக தொடர்ச்சியாக பாடுபட்ட ஒரே தலைவர் பெரியார்தான். மற்றவர் தலைவர்களும் பாடுபட்டார்கள். ஆனால் கடைசிவரை அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பெரியார் மட்டும்தான். அதனால்தான் வ.உ.சியே பெரியாரை பாராட்டினார். அவர் பெரியாரின் புகைப்படத்த போட்டோ போட்டு ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மாட்டி வையுங்கள் என்கிறார். அவரை விட சீமான் பெரிய ஆளா? சீமான் போன்ற நபர்கள் பேச பேச பெரியார் என்பவர் இங்கு நீடித்திருப்பார். ஏனென்றால் பெரியாரின் தேவை இங்கே உள்ளது.
இன்று பெண்களுக்கான உயர்கல்வில் இன்று தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. எங்கு இருந்தோம். இப்போது எங்கு வந்து நிற்கிறோம். இது பெண்களுக்கு, நலன் பெற்றவர்களுக்கு நன்றாக தெரியும். இன்று ஒரு வீட்டில் கூட மாத விலக்கு ஆன பெண்கள் தங்குவதற்காக என்று தனி அறை கிடையாது. இது எப்படி வந்தது. சட்டம் போட்டு ஒழித்தோமா?, பச்சை மட்டையால் அடித்து ஒழித்தோமா?. இல்லை அவர்களை படிக்க வைத்து ஒழித்தோம், பெண்ணுக்கு கல்வி கொடுத்து ஒழித்தோம். அதன் விளைவாக இன்று பெண்கள் மாதவிடாய் காலத்தில் தனி அறையில் இருக்க வேண்டியது இல்லை என்று ஆக்கினோம். இது பெண்களுக்கு தெரியும். அத்திவரதர் வந்தால் லட்சக்கணக்கானோர் சென்று பார்ப்பார்கள் தான். ஆனால் தேர்தல் என்று வந்தால், பெரியார் என்ன சொன்னார் என்று கேட்டுத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். அதனால் சீமானின் பிரச்சாரம் நல்லது தான். அவர்கள் பெரியார் என்ற பிம்பத்தை உடைக்க முற்படட்டும். அவர்கள் உடைக்க உடைக்க பின்னால் வருபவர்கள் பெரியாரை படித்து, அவரது பாதையை தொடருவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்