எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல்காந்தி பேரணி நடத்த உள்ளது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி யாத்திரை செல்லப் போவதாக அறிவித்துள்ளார். இது பீகார் தேர்தலில் பெரிய பேசு பொருளாக மாறும். இறந்து போனவர்களுடன் தேனீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இறந்ததாக சொல்லி நீக்கப்பட்டவர்களின் பேட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. 2025 ஜனவரியில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். அடுத்த சில மாதங்களில் 65 லட்சம் பேர் மரணமடைந்து உள்ளதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது.
முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது இயல்பானது. ஆனால் இறந்துவிட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மிகவும் பெரிய விஷயமாகும். இடம்பெயர்வு காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குபவர்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உயிருடன் இருந்தவர்களை இறந்துவிட்டதாக சொல்கிறபோது ராகுல்காந்தியின் அந்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எடுபடுகிறது. இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள் வரும். உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை பார்க்கிறபோது அது பயன் உள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. வாக்காளர் பட்டியலை திருத்தும் உரிமை, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதாக உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. அதனால் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் ராகுல்காந்தி எடுத்துச் சென்றுள்ளார். ஒரு வகையில் எதிர்க்கட்சிகளை, பாஜகவும், தேர்தல் ஆணையமும் ஒற்றுமைப்படுத்திவிட்டன.
பீகாரில் பிரச்சினை என்ன என்றால் அங்கே 2025ல் வெளியிடப்பட்ட ஒரு வாக்காளர் பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் செய்வது என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயமாகும். ஆனால் தேர்தல் ஆணையம் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலுக்கு பதிலாக 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொள்கிறது. அதற்கு காரணமாக 2003ஆண்டின் வாக்காளர் பட்டியல்தான் SIR முறையில் உருவாக்கப்பட்டது. அதை வைத்து நாங்கள் புதிய பட்டியலை உருவாக்குகிறோம். அதனால் 2003ல் இருந்து உயிரிழந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும் என்பதல் உயிரிழப்பு, புலம்பெயர்ந்தோர் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதில் பிரச்சினை எங்கே ஏற்படுகிறது என்றால் பெயரை நீக்க வேண்டும் என்றால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அது இங்கே மீறப்படுகிறது. இது ஆபத்தானதாகும். அப்படி அதை அனுமதித்தால் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ரேஷன் கார்டுகளில் இருந்து கூட பெயரை நீக்கிவிடலாம். இது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் மற்றொரு பிரச்சினை என்ன என்றால் நாடு முழுவதும் அதை செய்யப் போகிறோம் என்கிறார்கள். 2003ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை வைத்து, நாடு முழுவதும் செய்யப் போகிறோம் என்கிறார்கள். அப்படி செய்வதாக இருந்தால், இதற்கு அடிப்படை தேவையான மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்போது நடத்தினீர்கள். இது மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு நடக்க வேண்டிய விஷயாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பு தற்போதுதான் வந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் நடத்துவதன் மூலம் அவர்கள் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பை உருவாக்க நினைக்கிறார்களா? அல்லது பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு செய்யப்போகிறீர்களா? ஏன் இந்த அவசரத்தை காட்ட வேண்டும்? என்று வரும்போது, பீகாரில் ராகுல்காந்தி, தேர்தலையே திருட பார்க்கிறார்கள் என்று முன்னிறுத்துவார். பீகார் தேர்தலில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்காது. பாஜகவின் விருப்பம்தான் பிரதிபலிக்கும். தேர்தல் ஆணையம் அதற்கு உடந்தை என்றுதான் பிரச்சாரம் மேற்கொள்வார்.
தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் வைக்க வேண்டியது நம்முடைய கடமை. நாடாளுமன்றத்தில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த மறுப்பது ஏன்? காரணம் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க அமைச்சர் கிடையாது. இலாகா கிடையாது. எனவே நாடாளுமன்றத்தில் இல்லாத துறை குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பது தான் மத்திய அரசின் வாதமாகும். அந்த அளவுக்கு ஒரு உயர்ந்த அமைப்பு, சட்டத்தை மீறுகிறது. உண்மையான வாக்காளர் பட்டியலை கொடுக்க வேண்டியது தங்களுடைய கடமை என்று சொல்லி சட்டத்தை மீறுகிறது. ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒரு தொகுதிக்கோ, அல்லது தொகுதியின் ஒரு பகுதியிலோ தான் மேற்கொள்ள முடியும். 200 தொகுதிகள் உள்ள ஒரு மாநிலத்தில் ஓரிரு தொகுதிகளில் பிரச்சினை உள்ளது என்கிறபோது, அதனை சரிபார்க்கப் போகிறோம் என்பது சரி. ஆனால் ஒட்டுமொத்தமாக சரியில்லை முதலில் இருந்து வருகிறோம் என்பது ஏற்புடையது அல்ல.
இந்த நடவடிக்கையால் பாஜகவும்தான் பாதிக்கப்பட போகிறது.ராகுல்காந்தி பீகாரில் சுற்றுபயணம் மேற்கொள்ளப் போகிறார். நாடு முழுவதும் பாஜகவை திருடன் என்று சொல்லப் போகிறார். இதனால் தேர்தல் ஆணையத்திற்கு நஷ்டம் ஏற்பட போகிறது. உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக சொல்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. தவறை சரி செய்கிறோம் என்றால் அது ஒன்று, 100, 1000 என்று கணக்குகள் வரும். அப்போது வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரிபார்க்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு தானே உள்ளது. அவர்கள் எங்கே தவறு செய்தார்கள் என்பதற்கு பதிலே இல்லையே. 2025 ஜனவரி முதல் ஜுலை மாதத்திற்குள் அத்தனை லட்சம் பேர் இறந்துவிட்டார்களா? என்கிற அடிப்படை கேள்வி எழுகிறது. இதுபோக இணையத்தில் பதிவேற்றிய எந்த ஆவணங்களும் இல்லை? இவ்வளவு குளறுபடிகளோடு இதை ஏன் செய்ய வேண்டும்?
2025 ஜனவரி வெளியான வாக்காளர் பட்டியலை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டு தான் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜகதான் வெற்றி பெற்றிருந்தது. அப்போது எந்த கேள்வியும் எழவில்லை. ஜுலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும்போது கேள்வி எழுகிறது. ஏன் இந்த அவசரம்? அதற்கு பிறகு நடந்த மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்களில் நடைபெற்ற குளறுபடிகள். மூன்றாவது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்க வைக்க, உடனுக்குடன் தேர்தல் ஆணையம் பதில் சொல்கிறது. குற்றச்சாட்டுகளை சரிபார்க்கிறோம் என்று கூட சொல்வது கிடையாது. ராகுல்காந்தி தான் பிரமாண பத்திரம் வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலை படிக்க முடியாதபடி மாற்றிவிட்டனர். தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுக்கிறபோது, தவறுகளை மறைப்பதற்காக அது எடுக்கப்படும் நடவடிக்கையாக தான் பொதுவெளியில் கவனம் பெறுகிறது. இதில் உள்ள சிக்கலான இடம் அதுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.