பெரியார் மீதான சீமானின் தாக்குதல் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வின் படிநிலை என்றும், இதனை பெரியாரியவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.
பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டம் குறித்து சீமான் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக தோழர் மருதையன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீமானுடைய புகைப்படம் மட்டும் அல்ல, அவருடைய அரசியல் என்பதே போட்டோஷாப் செய்யப்பட்டதுதான். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை பட்டியல் போட்டு மாளாது. எழும்பூரில் சாலையோரம் அமர்ந்து கைரேகை பார்ப்பவர்கள் எம்ஜிஆர், சிவாஜிக்கு ஜோசியம் பார்ப்பது போன்ற புகைப்படம் இருக்கும். மக்கள் அவர்கள் தலைவர்களுக்கு ஜோசியம் பார்த்தவர் என்ற நம்பிக்கை மட்டும் இன்றி, அவரது பேச்சிலும் மயங்குவார்கள். சீமான் பேசும் அரசியல் என்பதும் இதுபோன்றது தான். அவருக்குஅந்த கூட்டம் கூடுவது. சப்போர்ட்டுக்கு பின்னால் ஒரு பிரபாகரன் படம். முன்னால் சீமான் பேசும் அரசியல் திராவிட கட்சிகள் எதிர்ப்பு மற்றும் இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு, டூரிஸ்ட் கைடு வேலை போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் போன்றதாகும். இது போலிச்சாமியார்கள் செய்யும் உத்தி. இதில் பிரச்சினை என்னவென்றால் அளவுகடந்து வளர்த்து விட்டாகிவிட்டது.
சீமான் ஏன் முதலில் போட்டோஷாப் என கூறவில்லை என கேட்பது நியாயமான கேள்வி ஆகும். சீமான் பெரியாரை பேசிய பின்னர்தான் அவர் பிராடு என்பது நமக்கு தெரியுமா?. சீமான் இலங்கை சென்று பிரபாகரனுடன் போட்டோவே எடுத்திருந்தாலும் என்ன? பிரபாகரனுடன் எத்தனையோ பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்படி போட்டோ எடுத்தவர்கள் எல்லாம் பிரபாகரனின் வாரிசா, அவர்களது அரசியல் வழிகாட்டியா? இதை வைத்துக்கொண்டு என்னிடம்தான் ஈழ பிரச்சினையை தமிழ்நாட்டு பிரச்சினையை ஒப்படைத்தார் என்று சொல்கிறார். அப்போ புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள், தலைவர்கள், புலம் பெயர் திமிழர்கள் யாராவது இத்தனை நாட்களில் சீமானை கேள்வி எழுப்பினார்களா? அதற்கு மாறாக சீமானோடு சேர்ந்துகொண்டு கலைஞரை சாடிக்கொண்டிருந்தனர். இதுதான் இதுநாள் வரை நடந்துகொண்டிருந்தது. சீமான் இன்று இவ்வளவு திமிராக பேசுகிறார் என்றால் இத்தகைய பின்புலம் உள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து பெரியாரை அவதூறாக பேசிக்கொண்டிருக்கிறார்.
நாகையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அன்றைய காங்கிரஸ் கட்சியினர் நாகம்மை குறித்து அவதூறாக சுவர்களில் எழுதினர். இது குறித்து திராவிடர் கழகத்தினர் கேட்டபோது, பெரியார் அதனை பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும் என கூறினார். சிதம்பரம் தண்டபாணி பிள்ளை என்பவர் நாரதர் என்ற பத்திரிகை நடத்திவந்தார். அவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ஈ.வெ.ரா வாழ்க்கை ரகசியங்கள் என்ற தொடரை எழுதியுள்ளார். அதில் பெரியார் சொல்லியுள்ளார். நான் சீமானாக, பொறுக்கியாக, காலியாக இருந்த காலத்தில் என்று அவரே சொல்லியுள்ளார். தண்டபாணிபிள்ளை இவற்றை எல்லாம் எழுதியுள்ளார். ஆனால் பெரியாரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பொறுமை இழந்தத தண்டபாணி பெரியாரிடம் சென்று நான் உங்களை பற்றி தொடர் எழுதுகிறேன் தெரியுமா என கேட்டார். அப்போது பெரியார், ஆம் நான் பார்த்தேன். எல்லாம் சரியாக உள்ளது. வேறு ஏதும் வேண்டும் என்றால் கேளுங்கள் நான் சொல்லுகிறேன், மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பதில் அளித்தார். இதனால் மனம் வருந்திய தண்டபாணி, பின்னர் தனது தொடரின் பெயரை ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு என மாற்றிக்கொண்டார்.
பெரியார் தன்னுடைய வாழ்க்கையை ஓரு திறந்த புத்தகமாக வைத்திருந்தார். அவரை மேற்கோள்காட்டி பேசுவதற்கு ஒரு அறுகதை வேண்டும். ஏன் அப்படி இருந்தார் என்றால் இப்படி எல்லாம் நான் வாழ்ந்துள்ளேன். வாழ்ந்து இப்படி நான் மாறி வந்துள்ளேன் என்பதை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினார். இதன் முலம் எல்லோரும் மாற முடியும் என்று அவர் சொல்ல வந்தார். அதனால் பெரியாரை குறித்து நான் ஏதோ கண்டுபிடித்துவிட்டேன் என அவர்கள் சீமான் போன்றோர் சொல்வது அற்பத்தனமானது. பெரியாரிய தோழர்களோ, தொண்டர்களோ என்ன நினைக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நாம் பெரியாரின் கவுரவத்தை காக்க போராடவில்லை. மாறாக நம்மை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். இன்று பாஜக – ஆர்எஸ்எஸ் அபாயம் உள்ள நிலையில், ஒரு கோட்டையை போன்று நின்று பாதுகாப்பது எது என்றால் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் அது தோற்றுவித்த மரபு இன்னும் தமிழ்நாட்டில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாகதான் அவர்களால் வேருன்ற முடியவில்லை. அந்த கோட்டையில் ஓட்டைபோடும் வேலையை தான் சீமான் செய்துகொண்டிருக்கிறார். அவர் ரொம்ப காலமாக இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவர் தொடங்கி செய்துகொண்டிருக்கும்போது எல்லாம் கேட்காத நீங்கள் ஏன் இப்போது கேட்கிறீர்கள் என்று தான் சீமான் கூறுகிறார்.
பெரியாரியவாதிகள் போராட்டத்தை ஒட்டி சீமான் அளித்துள்ள பேட்டியில் பெரியாரா? பிரபாகரனா வாங்க மோதி பார்த்துவிடலாம் என சீமான் கூறுவது ஏன்? 1983 இனப்படுகொலையில் தொடங்கி 2009 முள்ளிவாய்க்கால் வரையிலான காலகட்டத்தில் முழுக்க முழுக்க விடுதலைப்புலிகள் மட்டும் இன்றி, ஈழத்தை சேர்ந்த அனைத்து இயக்கங்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பிரபலமானவர்கள் கோவை ராமகிருஷ்ணன், கொளத்துர் மணி ஆவர். இந்த காலகட்டத்தில் அனைவரது கவனமும் ஈழ ஆதரவில் தான் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் பாஜக வளர்ந்து வருகிறது. 2009 இனப்படுகொலைக்கு பின்னர் கலைஞர் நினைத்தால் போரை தடுத்திருக்க முடியும், அவர் செய்ய தவறிவிட்டார் என கூறி திராவிட இயக்கத்தினர் உள்பட பல திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டனர். ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்று பட்டம் வழங்கினார்கள். இந்த வழியில்தான் சீமான் உருவாகி வருகிறார். 2014ல் கூட வைகோ மோடிக்கு ஆதரவாக இருந்தார்.
பெரியாரின் சிலையை உடைப்பேன் என இன்று நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றார். இப்படி பெரியாரை எதிர்நிலைப்படுத்தும் வாய்ப்பு எப்படி வந்தது என பார்க்க வேண்டும் இது ஒரே படியில் வரவில்லை. முதலில் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பது எம்ஜிஆரா? கலைஞரா? என்று கேள்வி வந்தது. கலைஞர் நான் அனைத்து போராளி இயக்கங்களையும் ஆதரிக்க விரும்புவதாக கூறினார். எம்ஜிஆர் புலிகளை ஆதரிப்பதாக கூறினார். புலிகள் எம்ஜிஆரை தேர்வு செய்தனர். முதலில் எம்ஜிஆர் Vs கலைஞர், அடுத்து கலைஞர் vs ஜெயலலிதா, பின்னர் திராவிட இயக்கம் சரியானது ஆனால் கலைஞர் சரியில்லை. பிறகு திராவிட இயக்கம் தமிழ்தேசியத்திற்கு எதிரானது. பின்னர் திராவிட இயக்கத்தை ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் பெரியாரிடம் சிலவற்றை ஒப்புக்கொள்ளலாம். இப்போ கடைசியாக பெரியாரை உடைப்போம். இப்படி படிகளை தாண்டிதான் வந்துள்ளது. இதனை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதை பெரியாரியவாதிகள் தீவிரமாக யோசித்து பார்க்க வேண்டும். இப்போது வருந்துகிறார்கள். இதன் காரணமாக தான் சீமான் என்ற சக்தி வளர்ந்துள்ளது. அதனால் தான் ஏன் அன்றே பேசவில்லை என சீமான் கேட்கிறார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நெடுமாறன் அண்ணாமலையை அழைத்துவந்து கூட்டம் நடத்துகிறார். மோடியும், அண்ணாமலையும்தான் ஈழத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார். பிரபாகரன், துவாரகா போன்றோர் உயிருடன் உள்ளதாக கூறுகிறார். இதனை எல்லாம் எத்தனை பேர் எதிர்த்து எத்தனை பேர் பேசினார்கள். அதனால் சீமானை தனியாக பார்க்க முடியாது. பெரியார் Vs பிரபாகரன் என்று எதிர்நிலைப்படுத்தி சீமான் பேச காரணம் ஈழ விடுதலை போராட்டம் என்பதை பிரபாகரனை முன்னிலைப்படுத்தி நாம் பேச தவறி இருக்கிறோம். பிரச்சினையை திசை திருப்பும்போது கண்டிக்க தவறி இருக்கிறோம், இவ்வாறு அவர் பேசினார்.