திமுக கூட்டணிக்குள் உள்ள நெருக்கடி என்பது அதிக சீட்டுகள் தர வேண்டும் என்பதுதான். ஆனால் மற்ற கூட்டணிகளுக்குள் சீட்டு மட்டுமின்றி, ஆட்சியில் பங்கு என்கிற நெருக்கடியும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சியின் 2வது மாநாடு, அதிமுக – பாஜக கூட்டணியில் நிலவும் சிக்கல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- த.வெ.க இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின் திருமண நாள் மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் கட்சி மாநாட்டை நடத்துவதன் மூலம் அவர் ஒரு சீரியஸ் பொலிடிக்கல் பிளேயர் என்பதை உணர்த்த விரும்புகிறார். என்னை பொருத்தவரை சினிமா நட்சத்திரங்கள் முதல் முயற்சிகளை தனியாகத்தான் எடுப்பார்கள். என்னதான் முயற்சி செய்தாலும் தவெக, அதிமுக கூட்டணியும் வராது, பாஜக கூட்டணியும் வராது. ஏனென்றால் விஜய்க்கு அதில் விருப்பம் இருக்காது.
காரணம் திரை நட்சத்திரங்களுக்கு தங்களை குறித்த மிகை மதிப்பீடு இருக்கும். விஜயகாந்த், மதுரையில் மிகப் பெரிய ரசிகர் மாநாட்டை நடத்தினார். மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டார்கள். அதன் பிறகு விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கினார். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது, சென்னையில் பணிபுரிந்தவர்கள் எல்லாம் விடுமுறை போட்டிக்கொண்டு மதுரைக்கு சென்றார்கள். மதுரையை மையப்படுத்திய அரசியல் என்பது சரியானதுதான். ஆனால் அதற்கான வெற்றி, தோல்வி என்பது யாருடைய கையிலும் இல்லை. அந்த நேரத்திலும் இருக்கின்ற அரசியல் சூழல்கள்தான் அதை நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில் விஜய் எதை அடுத்தக்கட்ட ஆயுதமாக பயன்படுத்துவார் என்று கேள்வி எழலாம். அப்போது அவர் தேமுதிகவை இழுக்கப் பார்க்கிறார் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். தேமுதிகவை எப்படி இழுக்க பார்ப்பார் என்றால்? அந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் எவ்வளவு இடம் கிடைக்கும்? ஏற்கனவே கூட்டணி நிரம்பிவிட்டது. திருமாவளவனின் பேச்சுக்களை பார்க்கும்போது அவர் இரட்டை இலக்கத்தில் இடங்களை எதிர்பார்க்கிறார் என்று தெரிகிறது. சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் உள்ளன. அப்போது விஜயிடம் பேர வலிமை எப்படி வரும் தனி பெரும்பான்மை வந்தாலும் ஆட்சியில் பங்கு என்று சொல்வார். ஆனால் விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் தெரியாத கூட்டணிக்கு போய் ரிஸ்க் எடுக்கலாமா? என்று யோசிப்பார்கள்.
தேர்தல் என்றால் ஒருவருக்கு எவ்வளவு வாக்குகள் உள்ளன என்கிற கணக்கீடு இருக்கிறது. விஜய்க்கு சினிமா நட்சத்திரம், பார்க்க மக்கள் கூடுகிறார்கள் அவ்வளவுதான். அரசியல் ரீதியாக தனக்கு எவ்வளவு வாக்குகள் என்பது விஜய்கே தெரியாது. அதனால், விசிகவில் உள்ளவர்களுக்கு திமுகவிடமே பேரம் பேசி கூடுதல் இடங்களை வாங்குவதுதான் எண்ணமாக இருக்கும். கடைசி நேரத்தில் மனமுறிவு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகி போனால்தான் உண்டு. அப்போது மதுரையில் மாநாடு நடத்துவதன் மூலம் நான் ஒரு கவர்ச்சிகரமான அரசியல்வாதி என்று விஜய் நிரூபிக்க முடியும்.
விஜய் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும். செப்டம்பரில் தான் பயணத்தை தொடங்குகிறார். அடுத்து ஒரு மாதம்தான். அரசியல் கட்சிகளின் அனைத்து திட்டங்களும் நவம்பர் முதல் வாரம் வரை தான். ஏனென்றால் நவம்பர் மாதத்தில் பருவமழை வந்துவிடும். அதனைவிட்டால் நேராக தேர்தல்தான். இன்றைய காலகட்டத்தில் பாஜகவின் வசதிக்கு தான் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் வருவதால் பல கட்டங்களாக நடத்தக்கூடும். அப்போது பிப்ரவரியில் முற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு தேர்தல் வைத்தால், உண்மையில் 2026ஆம் ஆண்டு பிறந்த உடனேயே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிடும். அப்போது விஜய், மக்களை சந்திப்பதற்கான பயணம் தடைபடும்.
அமித்ஷா வீட்டின் கதவை தட்டினால்தான் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் தீரும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அப்படி செய்ததால் இதுவரை என்ன பிரச்சினை தீர்ந்துள்ளது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக பாஜக உடன் கூட்டணி வைத்தது ஏன்? அதிமுக கூட்டணிக்கு பாஜகவிலும் நெருடல் உள்ளது. பாஜக கூட்டணிக்கு அதிமுகவிலும் நெருடல் உள்ளது. பாஜகவை நம்ப வேண்டாம் என்று நண்பர்கள் ஆலோசனை சொன்னதால் செங்கோட்டையன், தற்போது தான் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் போட்டுள்ளார். அப்போது, அதிமுகவில் உள்ள தலைவர்களுக்கும் பாஜக கூட்டணியில் ஒரு நெருடல் இருக்கிறது. வேலுமணி மாதிரியானவர்களுக்கு மட்டும் தான் நெருடல் இல்லை. தென் மாவட்டங்கள், டெல்டாவில் நெருடல் இருக்கிறது.
அப்போது கடைசி நேரத்தில் கூட்டணி முடிவு செய்வதுதானே நல்லது. அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா, பாஜக தலையெடுக்க முடியாது என்று சொல்கிறார். இதுபோன்ற அதிருப்தியை தவிர்க்க தான், தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக கூட்டணியை முடிவு செய்வார்கள். பாஜகவின் சித்தாந்தம் என்பது தமிழ்நாட்டு மண்ணுக்கு எடுபடுவது கிடையாது. அமித்ஷா வீட்டு கதவை தட்டினால் மட்டும் தமிழ்நாட்டிற்கு என்ன கிடைக்கும். தினகரன், ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடம் இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அமித்ஷா, அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகளில் தலையிட மாட்டோம் என்று சொல்கிறார். பிரதமர் மோடி இம்மாத இறுதியில் கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார். அவருடைய வருகைக்கு பின்னர் அதிமுகவில் கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு இடம் என்பது தெரியவரும்.
தமிழ்நாடு தேர்தல் விவகாரங்களை அமித்ஷா தான் முழுமையாக கவனிக்கிறார். அவரை பொறுத்த வரை கூட்டணி ஆட்சி என்பதுதான் நிலைப்பாடு. அதை நிலைதான் பாமக. இதே பாயிண்டை தான் விஜயும் சொல்கிறார். அப்போது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான வலை என்று வைத்துக் கொண்டோம் என்றால் கங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இஸ்லாமிய கட்சிகள், விசிக போன்றவை சொல்லிவிட்டன. விஜயின் அரசியல் முயற்சி மதுரை மாநாட்டில் மேலும் தெரியவரும். பாமகவின் முடிவும் தற்போதும் தெரிய வந்துவிடும்.
ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரத்தில் ராமதாஸ் காவல்துறையில் புகார் அளித்துவிட்டார். அது அன்புமணியை நோக்கி செல்வதாக பாமகவினர் சொல்கின்றனர். தன்னுடைய வீட்டில் அரியானா போலீசார் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டி தான் சந்திரசேகரின் அரசை ராஜிவ்காந்தி கவிழ்த்தார். திமுக கூட்டணிக்குள் உள்ள நெருக்கடி என்பது அதிக சீட்டுகள் தர வேண்டும் என்பதுதான். வேறு நெருக்கடிகள் கிடையாது. மற்ற கூட்டணிகளுக்குள் சீட்டு மட்டுமின்றி ஆட்சியில் பங்கு என்கிற நெருக்கடியும் உள்ளது. இதற்குள்ளாக தமிழக அரசியலும், தேர்தல் களமும் பரபரப்பாக உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.