பாஜக – தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து ராகுல்காந்தி நடத்துகிற யாத்திரையில் பிற மாநில அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது ஜனநாயகத்தை விழிப்புணர்வு உடையதாக மாற்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின் யாத்திரையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், அதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தற்போது தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பெயர்கள் விடுபட்டது. மரணம் காரணமாக பெயர்கள் விடுபட்டால் எளிதாக சரிசெய்துவிடலாம். இரண்டாவது, இடமாற்றம் காரணமாக விடுபட்ட பெயர்கள். 3வது முக்கிய குற்றச்சாட்டு ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் உள்ளது. இதை தேர்தல் ஆணையம் மறுக்க முடியாது. ஆதாரங்களுடன் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. எல்லா மாநிலங்களிலும் இது பரவலாக உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்ட இந்த நாளில் போலி வாக்காளர்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாகும். கணினி மிக எளிதாக இந்த வேலையை பார்த்துவிடும். அதற்கு மெஷின் ரீடபிள் தரவுகள் வேண்டும். இந்த தரவுகளை வைத்துள்ள தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பகிர்வதால் எந்த பிரச்சினையும் ஏற்படபோவது இல்லை. ஆனால் தேர்தல் ஆணையம் அதை கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் இடமில்லை என்று சொல்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் ஒரு காலகட்டத்தில் புனிதமானதாகவும், நடுநிலையோடும் செயல்பட்டது. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் என்பது அனைத்து துறைகளுக்கும் வந்துவிட்டது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வரை. ஆர்எஸ்எஸ் பின்னணி தான் இன்றைக்கு எல்லாவற்றுக்கும் அடிப்படை தகுதியாக மாறியுள்ளது. அதில் என்ன தவறு உள்ளது? என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் கேட்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவரை தேர்தல் ஆணையராக நியமிப்பதில் என்ன தவறு என்றால்? தேர்தல் ஆணையம் என்பதே அடிபட்டு போய்விடும். ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஒருவரை, நீதிபதியாக ஆக்கினால் நீதித்துறையே அடிபட்டு விடும். இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் சுதர்சன் ரெட்டி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு, நீதித்துறையை சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். அப்போது இந்த நாடு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது?
பீகார் மாநிலத்தில் ராகுல்காந்தி நடத்துகிற இந்த பயணம், அதனுடைய நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும்போது தான் மகிழ்ச்சி அடைய முடியும். வாக்காளர் பட்டியலில் நடைபெறும் மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வை தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கின்றனர். நாளைக்கு மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாட்டிற்கும் வரப் போகிறது. பீகார் போன்று தேர்தல் நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ள ஒரு மாநிலத்தில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்தை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னின்று நடத்துகிறார். இந்த பயணத்தில் பிற மாநில அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவை எல்லாம் ஜனநாயகத்தை விழிப்புணர்வு உடையதாக மாற்றுவதாகவே நான் பார்க்கிறேன்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை பாஜக விரும்பவில்லை. பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளனர். இந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான எம்.பிக்களின் பலம் பாஜகவிடம் இல்லை. அமித்ஷா, நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றிவிடுவோம். காங்கிரஸ் கட்சியே ஆதரவு அளிக்கும் என்று சொல்கிறார். இந்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதில் பங்கேற்க எதிர்க் கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டமே நடைபெறாது. அதனால் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டதுடனே முடிந்துவிட்டது. இதற்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி இந்த மசோதா செல்வது என்பது மிகவும் கடினம்.
பொதுவான சில மசோதாக்களுக்கு சட்டமன்றங்களின் ஆதரவு தேவையில்லை. ஆனால், குறிப்பிட்ட சில மசோதாக்களுக்கு அரசியல் திருத்த சட்டமாக இருந்தாலும், நாடாளுமன்றம் நிறைவேற்றினாலும், 50 சதவீதத்திற்கு குறையாமல் நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றங்களும் மசோதாவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதா அடிப்படையையே மாற்றுவது என்பதால் அதை நோக்கி தான் போக வேண்டும். ஆனால் இதுபோகாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அடுத்த குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, இருக்கும் எம்.பிக்களை வைத்து மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பார்கள். ஏனெனில் மசோதாவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வேன் என்று அமித்ஷா சொல்கிறார். அப்போது அந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்வதாக திசை திருப்புவார்கள். தற்போது SIR நடவடிக்கைக்கு எதிராக யாத்திரை. அதில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள், தலைவர்கள் பங்கேற்பது. இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிற ஏற்பாடு ஆகும். திசை திருப்புதல் என்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமம் தானே.
தகுதி நீக்கம் செய்வதற்கு ஏராளமான சட்டங்கள், வழிமுறைகள் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் லில்லி தாமஸ் வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளும் உள்ளன. அதே தகுதிநீக்க மசோதாவை மாற்றம் செய்து, அரசியல் சட்டத் திருத்தமாக கொண்டு வருவதே தவறு. இது உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் அடிபட்டு போய்விடும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற நிறைய அரசியல் சாசன வழக்குகள் நிறைய நிலுவையில் தான் இருக்கின்றன. உச்சநீதிமன்றமும் ஒன்றும் வேகமாக செயல்படவும் இல்லை. அப்போது பாஜகவினர் இந்த மசோதாவை தற்போது நிறைவேற்றுவோம் என்று நினைக்கிறார்கள். அதற்காக எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்றும் எண்ணுகிறார்கள். அவசர நிலையை கொண்டுவந்த இந்திரா காந்தி தேர்தலில் தோற்று போனார். அப்படி தோல்வி அடைந்த உடன், அவர் அவசர நிலையை நீட்டிப்பதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை. உடனடியாக அவசர நிலையை முழுமையாக விலக்கி கொண்டார். ஜனநாயக மாண்பு என்பது இயல்பாக ரத்தத்தில் இருக்க வேண்டும். மாண்பு இல்லை. எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று தலைமையே நினைக்கும் என்றால்? இந்த நாட்டில் ஜனநாயகம் செத்து போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.