விஜய், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் தான் அவரால் சீமானின் 8 சதவீதம் வாக்குகளையே தாண்ட முடியும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அப்படி சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் எப்படி வளர்ச்சி வரும்? சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி கிடைத்துள்ளது. தமிழகத்தில் பதிவு செய்கிற வழக்குகள் மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் விகிதங்கள் அதிகமாகும். அதனால் தான் தமிழ்நாட்டில் குற்ற வழக்குகள் அதிகமாக பதிவாகிறது. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதே கிடையாது. தமிழ்நாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்படுதால், வழக்குகள் அதிகமாக பதிவாகியது போன்று தோன்றும்.
திமுக அரசு கடந்த 4.5 ஆண்டு காலத்தில் 11 லட்சம் முதலீட்டை கொண்டு வந்துள்ளது. திருத்தணி சம்பவத்தை வைத்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. போதைப் பொருட்கள் எல்லா ஆட்சியிலும் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் 3.5 லட்சம் கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது. ஸ்டாலின் ஆட்சியில் 6.5 லட்சம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனினும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யு.ஜி.சி சொல்வதாக கூறி பொறியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் அந்தஸ்தில் உள்ள பொறியியல் அல்லாத ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்க அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனை கேரளா, கர்நாடகா போன்று வேறு எந்த மாநிலமும் செய்யவில்லை. தமிழக உயர்கல்வித் துறை இன்றைக்கு முழுமையாக சீரழிந்து கிடக்கிறது. அதற்கு முழு முதற் காரணம் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் ஆகும். அதை சரிய செய்ய வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடமையாகும்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமியோ, சீமானோ, விஜயோ பேசவில்லை. உயர்கல்வித் துறை சீரடைந்தால் தான் தமிழ்நாட்டின் ஜிடிபி உயரும். ஜிடிபி உயர்ந்தால் தான் தமிழக அரசால் ஒரு லட்சம் கோடி டாலர் என்கிற இலக்கை அடைய முடியும். உயர்கல்விக்கு முக்கியத்தும் தராமல் ஓரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கை எட்ட முடியாது.

தமிழக காவல்துறையில் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஒட்டுமொத்த காவல்துறையையும் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கான பட்ஜெட்டை உருவாக்க வளர்ச்சியை கொண்டுவர வேண்டும். புலன் விசாரணைகளுக்கு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிதிப் பற்றாக்குறை காரணமாகவே நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமைப் பண்பில் பிரச்சினை இல்லை. இன்றைக்கு மத்திய அரசு செய்கிற அனைத்து சட்ட விரோதமான செயல்களை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்புவதாக இருந்தாலும், அதற்கு எதிராக போராடுவதாக இருந்தாலும் அதை திமுக தான் செய்கிறது.
விஜயோ, எடப்பாடி பழனிசாமியோ இதை கேட்கிறார்களா? விஜய், தனக்கு இளைஞர்கள் இருப்பதாக காட்டுகிற சூழலில், தங்களுக்கும் இளைஞர்கள் பலம் உள்ளது என்பதை காட்ட வேண்டிய அவசியம் திமுக உள்ளது. அதனால் மண்டல மாநாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை கூட்டுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை அவர்கள் தவெக உடன் கூட்டணிக்கு சென்றால் அவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம். ஆனால் எம்எல்ஏக்கள் கிடைப்பார்களா? திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அத்துறையை விட்டு வரும்போது அவரை பார்க்க அனைத்து ரசிகர்களும் திரள்வார்கள். அவரது மாநாட்டில் அதிகபட்சமாக 5 லட்சம் பேர் திரண்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் வீட்டிற்கு 4 பேர் என்று வைத்தாலும், 20 லட்சம் வாக்குகள் தான். ஒட்டுமொத்த வாக்காளர்களில் இது வெறும் 5 சதவீதம் பேர். இதுதான் விஜயின் வாக்கு சதவீதம் ஆகும். இந்த 5 லட்சம் பேரை தமிழகம் சுற்றி சுற்றி அழைத்து வந்து கூட்டம் சேர்வதாகவும், விஜய்க்கு ஜென்ஸி இளைஞர்களின் ஆதரவு உள்ளதாகவும் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
இதற்கு வலதுசாரி ஊடகங்களும், நேர்காணல் எடுப்பவர்களும் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 5 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் விஜய், 8 சதவீதம் வைத்திருக்கும் சீமானை முந்தவே அவருக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக போன்றவர்கள் வேண்டும். ஆனால் அவர்களால் சீட் வெற்றி பெற முடியாது. அவரால் சீமானை போன்று தனித்து நின்று 8 சதவீதம் வாக்குகளை வாங்க விஜய்க்கு துணிவு இருக்கிறதா?

கூட்டணி ஆட்சி தொடர்பாக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கும் சூழலில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அது அவருடைய வெற்று ஆசையாகும். முதலில் விஜய் அதிமுக உடன் கூட்டணிக்கு வருவார் என்று சொல்லி அவமானப்பட்டார். தற்போது காங்கிரஸ் வரும் என்று தவறான தகவலை சொல்கிறார். அமித்ஷாவை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமியால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது நன்றாக தெரிந்துவிட்டது. நயினார் தலைமையிலான பாஜகவுக்கு அதிகபட்சாக 3 – 4 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும். அவர்களுக்கு அண்ணாமலை ஒருபோதும் ஒத்துழைப்பு தர மாட்டார்கள்.
எனவே அண்ணாமலையை தனி ஆவர்த்தனம் செய்ய வைத்து, டிடிவி – ஓபிஎஸ் போன்றவர்களை எல்லாம் ஒன்று திரட்டி, தவெக பக்கம் கொண்டு சென்று அவரை வெற்றி வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? அதிமுக அழித்துவிட்டால் பாஜக வளரும். தவெகவை உருவாக்கிய அவர்களால் எப்போது வேண்டுமானாலும் அழிக்கவும் முடியும் என்கிற எண்ணம் தான் அவரிடம் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


