எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது சாமானிய மக்களால் முடியாத காரியமாகும், எனவே இது தன்னிச்சையாகவே அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமையாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் தேர்தல் வெற்றி குறித்து பேசிய பிரதமர் மோடி, இதே முடிவுகள் தமிழ்நாட்டிலும் பிரதிபலிக்கும் என்று தனது ஆசையை சொல்லியுள்ளார். பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எதிரொலிக்காது. அந்தந்த மாநிலத்திற்கான கூட்டணி அமைப்புகள் வேறு, மாநில அரசியல் வேறு. பீகார் தேர்தலில் புரிந்துகொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது. அது கூட்டணிக்கு மிக முக்கியம் கெமிஸ்ட்ரி என்பதாகும். முதலமைச்சர் பீகார் தேர்தலில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு செய்தியை சொல்லி இருக்கிறார். கூட்டணியை பேசி பேசி கெடுத்தால், கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்பதுதான் அந்த செய்தியாகும்.
காங்கிரஸ் 60 தொகுதிகளை வாங்கிவிடலாம். ஆனால் கன்னியாகுமரி எல்லையான வள்ளியூரில் தான் வெற்றி பெற்றார்கள். அவர்கள் 30 தொகுதிகள் வாங்கினாலும் அந்த பகுதியில் தான் கேட்பார்கள். சீட்டை கொடுங்கள். வெற்றி பெறுவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்வதில் பயனில்லை. ஏனென்றால் காங்கிரஸ் தோற்றால் கூட்டணியும் தோற்றுவிடும். அத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளையும் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இவற்றை எல்லாம் வைத்துதான் ஒரு கட்சி தலைமை முடிவு எடுக்கிறது. முடிவு எடுப்பதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியினர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தால், நல்ல விதமாக முடிவு எடுத்தாலும் திருப்தி ஏற்படாது.

பீகார் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தரப்பில் தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பீகார் தோல்விக்கு பிறகு, தவெக தெளிவான நிலைக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான கட்டுரையில், தவெக தங்களது கூட்டணி திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக சொல்லியுள்ளனர். முன்பு காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது என்று அவர்கள் நினைத்தனர். பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடைபெற்றது.
பீகார் தேர்தலுக்கு பிறகு அந்த எண்ணத்தில் இருந்து விஜய் மாறுபட்டிருப்பார். அதற்கு காரணம் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி சரிபட்டு வராது என்பதுதான். காங்கிரஸ் கட்சி காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது. ஆனால் திமுக அண்ணா வழியில் பயணிக்கும் ஜனநாயக கட்சி. தன்னை எதிர்த்து போராடிய ஈ.வெ.கி. சம்பத் போராட்டக்களத்திற்கே நேரில் சென்றவர் அவர். அத்தகைய ஜனநாயக பண்பை தான் காங்கிரசிடம் முதலமைச்சர் எதிர்பார்ப்பதாக தோன்றுகிறது. ஆனால் அவர்கள் கடைபிடிப்பார்களா என்பதை காலம்தான் உணர்த்தும்.

பீகாரில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட சில இடங்களில் தான் டெபாசிட் தொகையே வாங்கியது. அதே நிலைமை தான் விஜய்க்கும் ஏற்படும். அவரால் எப்படி டெபாசிட் வாங்க முடியும். விஜய்க்கு 15 சதவீதம் வாக்குகள் இருந்தாலும் டெபாசிட் வாங்க முடியாது. ஏனென்றால் பதிவாகிய வாக்குகளில் 16.6 சதவீதம் வாக்குகளை பெற்றால்தான் டெபாசிட் தொகையை வாங்க முடியும். 16.6 சதவீதம் வாக்குகளை வாங்க நாம் எபெக்டிவாக 20 சதவீதம் வாக்குகளை கொண்டுவர வேண்டும். அப்போது தான் அது நிஜத்தில் 16.6 சதவீதமாக மாறும். விஜய் தனிப்பட்ட முறையில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக சொல்கிறார். அவை எல்லாம் வாக்குகளாக மாறாது. தனிப்பட்ட முறையில் மாஸ் இருக்கலாம். அந்த மாஸ்-ஐ வாக்குகளாக மாற்ற களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
அப்படி கீழ்மட்டத்தில் வேலை பார்க்காமல் சென்ற கதையை தான் நாம் பீகாரில் பார்க்கிறோம். எஸ்.ஐ.ஆர். குறித்தும், தேர்தல் ஆணையம் குறித்தும் தற்போது இவ்வளவு பேசுகிறோம். இவற்றை எல்லாம் பீகாரிலும் பார்த்தோம். தேர்தல் ஆணையம் இன்று மட்டும் அல்ல. என்றுமே டெல்லி தலைமைக்கு அது வாலை ஆட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதை தாண்டி தான் நாம் வெற்றி பெறுகிறோம். நாம் வென்றுவிட்டால் தேர்தல் ஆணையம் ஒன்றுமே செய்யவில்லை என்று அர்த்தமா?

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள். அதற்கு சற்று முன்னதாக குடும்பத்திற்கு தலா ரூ.10,000 அறிவிக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்போது பிரதமர், உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இருந்திருக்கும். தமிழ்நாட்டில் கலர் டிவி திட்டம் செயல்பாட்டில் இருந்தபோது அதை கொடுக்கக் கூடாது என்று ஆணையம் சொன்னது. அதேபோல் ரூ.10,000 தொகையை 2வது தவணை கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. செயல்பாட்டில் உள்ள திட்டமாக இருப்பினும் நேரடியாக வாக்காளர்களின் கைகளுக்கு பணம் செல்வதால் அதை கொடுக்கக்கூடாது என்று தான் தேர்தல் ஆணையம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை.
எனவே தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது நாட்டிற்கு புதிது கிடையாது. அதையும் தாண்டி தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுகின்றன. எனவே அந்த குற்றச்சாட்டை சொல்வதில் அர்த்தமில்லை. எஸ்ஐஆரை தாண்டி எப்படி வெற்றி பெறுவது என்று நீங்கள் யோசித்திருக்க வேண்டும். தேஜஸ்வி யோசித்து, களப்பணி ஆற்றினார். ஆனால் காங்கிரசிடம் இருந்து எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிலும் அப்படி தான். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக களப்பணி ஆற்றுகிறது. ஆனால் காங்கிரஸ் எங்கே இருக்கிறது?

விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், திமுகவின் பாக முகவர்களை வைத்து விசிக வாக்காளர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். திமுக சேர்த்துவிடும் வாக்காளர்களில் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்களும் இருக்கிறார்கள். அடிப்படையில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது கடினமானதாகும். மெத்த படித்த மேதாவிகளுக்கே அது சிரமமானதாக தான் இருக்கிறது. பாமர மக்களால் வங்கியில் பாரங்களை கூட பூர்த்தி செய்ய தெரியாது. ஆனால் இவ்வளவு பெரிய விண்ணப்பத்தை கொடுத்து, போட்டோவையும் எடுத்து ஒட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம். தன்னிச்சையாகவே அதை அரசியல் கட்சிகள் தான் செய்ய வேண்டும். ஒரு புறம் சட்ட போராட்டம் நடத்தி எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள். மறுபுறம் களத்தில் பாக நிலை முகவர்களை அனுப்பி விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்கிறார்கள். இப்படி பீகாரில் தேஜஸ்வி செய்தபோதும், அவருக்கு மற்ற கூட்டணி கட்சிகளிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. இங்கே அனைத்துக் கூட்டணி கட்சிகளின் சார்பில் திமுக செய்கிறது.
காங்கிரஸ் கட்சி நாளைக்கு மாற்று சிந்தனை எடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பாக தான் முடியும். தவெக எச்சரிக்கையாக இருக்கும். திமுகவிடம் இருந்து காங்கிரஸ் வெளியேறி தவெக உடன் கூட்டணி பேசுவார்கள். அப்போது, திமுகவே உங்களுக்கு இவ்வளவு இடங்கள் தான் தருகிறது. நாங்கள் திமுகவை விட பெரிய கட்சி. உங்களுக்கு குறைந்த இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னால் என்ன செய்வார்கள். தற்போதே திமுக Vs தவெக தான் என்று சொல்கிறார்கள். அவர்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று தவெகவினர் நினைப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


