2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவது எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் அல்ல. கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தான் அவர்களின் நோக்கம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது அதிமுகவினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஒபிஎஸ்-க்கு, தான் பாஜகவால் பாஜகவால் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக ஆதங்கம். அளவுக்கு அதிகமாக அவர் பாஜகவை நம்பினார். அப்படி பாஜகவை நம்பினால் இறுதியில் என்ன ஆகும் என்பதற்கு ஓபிஎஸ் மிகச்சிறந்த உதாரணம். இன்றக்கு உதாசினப்படுத்தப்பட்டு என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் அவர், அந்த முடிவில் உறுதியாக இருப்பாரா? கடந்த காலங்களில் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களை எதிர்த்த ஓபிஎஸ், பின்னர் அவர்களுடன் இணைந்து பயணித்தார். அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். இதனை எந்த அதிமுக தொண்டனும் ரசிக்க மாட்டோம். ஒரு பக்கம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றுத் தலைவராக தான் வர வேண்டும் என்று போராடுகிறார். அப்படி இருக்கும்போது அதிமுக தொண்டர்கள் சிறிதும் உடன்படாத திமுகவோடு அவர் அணி சேர நினைக்கிறார். அதிமுகவில் உருவான ஒரு தலைவர் திமுக பக்கம் செல்வதை எந்த தொண்டரும் விரும்ப மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமியுடன் நிபந்தனை இன்றி இணைவதற்கு தயார் என்று ஓபிஎஸ் பொதுவெளியில் அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் காரணமாகவும், சர்வாதிகாரப் போக்கினாலும் இந்த இயக்கத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்கிற முயற்சி மேற்கொள்ளவில்லை. ஓபிஎஸ் தற்போது அமைத்துள்ள தொண்டர்கள் மீட்புக்குழு மூலமாகவே விஜயோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அதில் வெற்றி என்பது சாத்தியமில்லை. அதை தாண்டி ஓபிஎஸ் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டாலோ, நட்புடன் பழகினாலோ அவர் அதிமுகவில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு விடுவார். ஓபிஎஸ் எதிர்பார்ப்பது என்பது பாஜக தன்னை சமாதானப்படுத்தி, மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதுதான். அதற்காக இவ்வளவு சித்து விளையாட்டுக்களை செய்து கொண்டிருக்கிறார். பெரியகுளத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த ஓபிஎஸ்-ஐ, தமிழக முதலமைச்சர் பதவியில் 3 முறை அமர்த்தி அழகு பார்த்தது அதிமுக. தன்னுடைய 50வது வயது முதல் கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலில் ஓபிஎஸ்-ஐ ஒரு தலைவராக, அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தியது அதிமுக என்கிற பேரியக்கம். இனிமேல் லாப நஷ்ட கணக்குகளை பார்த்து அதிமுகவுக்கு நேர் எதிரான திமுகவோடு பயணிப்பதை விட, அரசியலில் இருந்து ஓபிஎஸ் விலகிக்கொள்வது கூட பரவாயில்லை.
எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறபோது, அதை அமித்ஷாவை, மோடியை சொல்ல சொல்லுங்கள் என்று ஓபிஎஸ் கேட்கிறார். அதற்காக தான் இந்த நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார். எனக்கு தெரிந்தவரை இந்த கூட்டணியில் பேசப்பட்டது என்பது தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவரை அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஒபிஎஸ் அதிமுகவில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனிக்கட்சி அவர் தொடங்கினால் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவோடு இணைந்து போட்டியிட்டால், ஒன்று திமுக ஆதரவோடு சுயேட்சையாக போட்டியிட வேண்டும். அல்லது அந்த கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும். அப்படி செய்தால் அதிமுகவுக்கான உரிமையை அவர் விட்டுக்கொடுத்து விடுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் வெற்றிபெற்று அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணம் கிடையாது. அவருக்கு கட்சியை கைப்பற்றி ஒற்றைத்தலைமை கொண்டுவர வேண்டும் என்பதுதான் முக்கியமாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு தென் மாவட்டங்களில் மட்டும் எதிர்ப்பு உள்ளதாக சொல்வதில் உடன்பாடு இல்லை. அவருக்கு மேற்கு மண்டலத்திலேயே எதிர்ப்பு உள்ளது. இன்றைய தேதிக்கு ராமதாஸ், பிரேமலதா போன்றவர்கள் திமுகவை நோக்கி செல்கிறார்கள். கமலஹாசன் ஏற்கனவே அங்கே இணைந்துவிட்டார். அப்போது ஸ்டாலின் எல்லோரையும் அரவணைத்து தங்களின் வலிமையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி எல்லோரையும் வெளியேற்றிவிட்டு, கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே இருக்கிறது என்று உறுதிபடுத்திக்கொள்ள நினைக்கிறார். இரண்டாம் இடத்திற்கு விஜயுடன் போட்டி போட நினைக்கிறார். முதல் இடத்தை ஸ்டாலினுக்கு வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி, மனதளவில் தயாராகிவிட்டார். பாஜக இதைதான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூட்டணி சேரவில்லை. அதிமுகவை இந்த தேர்தலோடு அழித்துவிட்டு, அதனுடைய வாக்கு வங்கியை பாஜக தனதாக்கி கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் திராவிட சித்தாந்தத்திற்கும், இந்துத்துவா சித்தாந்தங்களுக்குமான அரசியல் களமாக தமிழக அரசியல் களத்தை உருவாக்க வேண்டும். பாஜகவா? திமுகவா? என்கிற களத்தில் அடுத்த தேர்தலில் அவர்கள் வெல்ல வேண்டும். இதை புரிந்துகொள்ளாத வகையில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் உள்ளது. ஒன்றுபட்ட அதிமுக என்பது காலத்தின் கட்டாயம். ஒன்றுபட்ட அதிமுக உருவாகாமல் எடப்பாடி பழனிசாமியால் மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்ற முடியாது. அவருடைய நோக்கம் தான் சம்பாதித்ததை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மகனையும், சம்பந்தியையும் வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். இதை நோக்கித்தான் அவர் பயணித்துக்கொண்டிருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.