ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது போல அதிமுக – பாஜக கூட்டணி என்கிற விமானம் விழுந்து நொறுங்கும் என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம் குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலத்தில் எந்த குறைபாடும் இல்லை. முதல் நாளில் அண்ணன் மு.க.முத்துவின் மறைவு காரணமாக அன்றைய நாள் முழுவதும் முதலமைச்சர் சாப்பிடவில்லை. மு.க.முத்து மிகவும் நெருக்கமாக இருந்ததால் முதலமைச்சருக்கு மனசோர்வு. இதனால் காலையில் எழுந்து நடை பயணம் செல்கிறபோது தலைச் சுற்றல் ஏற்படுகிறது. அதற்கு பிறகு அறிவாலயத்தில் அன்வர் ராஜா இணைந்த உடன், எங்களிடம் அரை மணி நேரத்தில் பரிசோதனை செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுதான் முதலமைச்சர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். மருத்துவர்கள் அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பது போன்று தெரிந்ததால் முழு உடல் பரிசோதனை செய்துவிடலாம். அதனால் ஓய்வில் இருங்கள் என்று சொன்னார்கள்.
மருத்துவர்கள் மற்றும் தலைவர்கள் சொன்னதற்கு பிறகு அவர் ஓய்வு எடுக்க சம்மதித்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. சோர்வின் காரணமாக தான் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாம் தொடங்கிவைத்த் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும் என விரும்பினார். அதன் பேரில் 3 மாவட்டங்களுக்கு போன் செய்து அதிகாரிகளிடமும், முகாமுக்கு வந்த மக்களிடமும் கேட்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டியிருந்த லுங்கிக்கு பின்னால் பெரிய வரலாறு உள்ளது. பெரியாரில் தொடங்கி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் மருத்துவமனைகளில் இருக்கிற போது லுங்கி தான் அணிந்திருப்பார்கள். முதலமைச்சர் மக்களை சந்திப்பதால் சட்டை அணிந்திருந்தார். இது பெரியார் காலம் தொட்டு தொடருகிற பாரம்பரியம் ஆகும். சில சங்கிகளுக்கு அது சங்கடத்தை தரலாம். அது அவர்களுடைய பார்வையாகும்.
கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு, அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இது குறித்து தன்மானஸ்தர் ஹெச்.ராஜா என்ன கருத்து சொல்கிறார்? கோயில்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 8 ஆயிரத்து 700 கோடி ரூபாயை அரசு மீட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார், இல்லை அந்த நிலத்தை அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். தற்போது ஹெச்.ராஜா சர்மா வகையறாக்கள் என்ன சொல்கிறார்கள்? அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கோயில் நிலம் என்பது, அந்த கோயிலில் நல்ல காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்டது. அதில் இருந்து பல நல்ல காரியங்கள் செய்யப்படுகிறது. எடப்பாடி சொல்வது போல் நாளைக்கே போய் கோயில் நிலத்தில் டெண்ட் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள் என்றால்? அந்த நிலத்தை அவர்களிடமே கொடுத்துவிடலாமா? ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கக்கூடாது என்பதல்ல நமது நோக்கம். ஏழை மக்களுக்கு அரசு நிலத்தில் செய்வது வேறு. கோயில் நிலத்தில் செய்வது வேறு. கோயில் நிலத்தில் இருப்பவர்களுக்கு கொடுப்பது என்றால்? ஒரு நாள் கோயில் உள்ளேயே போய் உட்கார்ந்து கொள்வார்களே? அப்போது கோயிலை அவர்களுக்கு கொடுத்துவிடலாமா?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முடக்குகின்றன என்பதை காட்டிலும், அவர்களது கோரிக்கை நியாயமானது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மத்திய அரசு என்ன சொல்கிறது? அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன சொல்கிறார். உலக நாடுகள் என்ன சொல்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இது நியாயமானது. எல்லாம் செய்தது சரி. மக்களை கொன்ற 8 பேர் எங்கே? அவர்களை பிடிக்ககூட வேண்டாம். அவர்கள் எப்படி வந்தார்கள். எப்படி சென்றார்கள் என்கிற விவரத்தையாவது கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா? பிறகு எப்படி ஆபரேஷன் சிந்தூர் வெற்றி என்று சொல்வீர்கள். இரண்டாவது பீகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம். முற்றிலும் உண்மையான ஒரு வாக்காளர் பட்டியல் வேண்டும் என்பது சரியானது. ஆனால் காலம் என்று ஒன்று உள்ளது அல்லவா? இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு திடீரென ஆதார் செல்லாது என்கிறார்கள். ஏற்கனவே வைத்திருந்த ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் செல்லாது என்கிறீர்கள்.
மத்திய அரசு பாஜக ஆளுகின்ற பீகார் மாநிலத்திற்கு கல்வி நிதியாக ரூ.4000 கோடி, உ.பி. மற்றும் மத்திய பிரதேசத்துக்கு அதைவிட கூடுதலாக ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவே இல்லை. நீங்கள் கொண்டுவந்த மும்மொழி கொள்கையை மகராஷ்டிர அரசே வேண்டாம் என்று சொல்லிவிட்டதா? தற்போது அந்த அந்த மாநிலங்களே திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? அப்போது நிதியை விடுவிக்க வேண்டியது தானே? இப்போது தெரிகிறதா தமிழ்நாட்டின் மீது பாஜகவுக்கு எவ்வளவு ஆத்திரம், கோபம் உள்ளது என்று. தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என மொத்தம் ரூ.57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் மத்திய அரசு நாடு முழுமைக்கும் ஒட்டுமொத்தமாகவே ரூ.1.28 லட்சம் கோடியைதான் ஒதுக்குகிறது. அப்போது அவர்களின் நோக்கம் கல்வியை நம்மிடம் இருந்து பிரிப்பது. அதற்கு தத்துவார்த்த ரீதியாக சில வேலைகளை பார்ப்பது. உயர்கல்வி சார்பில் தேசிய கல்விக்கொள்கையை கொண்டுவருவது. மொத்தத்தில் தமிழ்நாட்டை முடித்துக்கட்ட வேண்டும். அதற்கு கோ பைலட் ஆக எடப்பாடி பழனிசாமி இணைந்துள்ளார்.
ஏர் இந்தியாவில் எந்த பைலட் ஆப் செய்தார் என்று தெரியவில்லை. அதனால் விமானம் போய்விட்டது. இதேதான் இந்த கூட்டணிக்கும் நடக்கப் போகிறது. எடப்பாடி ஆப் செய்வாரா? அமித்ஷா ஆப் செய்வாரா? என்று தெரியாது. இந்த கூட்டணி விமானம் விழுந்து நொறுங்கும். அதற்குதான் நாங்கள் இப்போது சொல்கிறோம். அவர்களே கோவை எம்.பி. எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மண்ணுக்கு, தமிழ் மக்களுக்கு, மொழிக்கு எதிராக அவர்களது கோபமும், ஆத்திரமும் எவ்வளவு இருக்கிறது என்பதை இந்த புள்ளிவிபரங்கள் சொல்லும். இந்த 3 காரணங்களுக்காக தான் நாடாளுமன்றம் முடக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் நடைபெற்றது தொடர்பான விளக்கம். எஸ்.ஐ.ஆர். ஜனநாயகத்திற்கு அடிப்படை சம்பந்தமான விஷயம். மூன்றாவது தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களின் பிரச்சினைகள் தீப்பற்றி எரிகிறபோது, பிரதமர் மோடி அழகாக பிடில் வாசிப்பது போல புறப்பட்டு செல்கிறார். ஆர்எஸ்எஸ் வேறு 75 வயதுக்கு பிறகு ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டது. அதனால் கடைசி நேரத்தில் வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க செல்கிறார். இதைதான் பாஜகவினர் அவர்தான் நாட்டை காப்பாற்றும் தலைவர் என்று சொல்கின்றனர். நம்மை போன்ற மக்கள் சேவகர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.