திமுக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பதன் மூலம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என திராவிட இயக்க செயற்பாட்டாளர் மதிமாறன் குற்றம்சாட்டியுள்ளளார்.

அம்பேத்கர் நூல் வெயீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய் ஆகியோரது பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு திராவிட இயக்க செயற்பாட்டாளர் மதிமாறன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது:- விகடன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ஆதவ் அர்ஜுனா, அந்த நூல் குறித்து ஓரு வார்த்தை கூட பேசவில்லை. அதில் என்ன என்ன தலைப்புகளில் கட்டுரை உள்ளது, எத்தனை பேர் எழுதியுள்ளனர், நூலின் சிறப்புகள் என்ன என்று ஓரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக தங்களுடைய திமுக எதிர்ப்புக்காக அந்த மேடையை அவர்கள் பயன்படுத்தினார்கள். ஆனந்த விகடன் உரிமையாளர் பாசிசம் என்ற வார்த்தையை இணையத்திற்கு கற்றுக்கொடுத்தவர் விஜய் என பாராட்டுகிறார். அம்பேத்கர் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு திமுக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக அதை பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டிலேயே அம்பேத்கரை முதன் முதலாக அடையாளப்படுத்தியவர் கலைஞர் தான். காமராஜர் நல்லாட்சி புரிந்தாலும், அம்பேத்கரை புறக்கணிக்கவே செய்தார். ஆனால் கலைஞர் முதலமைச்சரான பின்னர் வியாசர்பாடி அரசுக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டினார். மாரத்வாடா பல்கலை.க்கு அம்பேத்கர் பெயர் வைக்க வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெற்று அனுப்பி வைத்தார். சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்தார். வடஆற்காடு மாவட்டத்திற்கு அவர் பெயர் சூட்டினார். அம்பேத்கருக்கு மணி மண்டபம் அமைப்பது என பல்வேறு தளங்களில் அம்பேத்கரை முன்னிலைப்படுத்தினார். தற்போதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்து, அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுக்க வைத்தார். எனவே அம்பேத்கரை முன்னிலைப்படுத்தவில்லை என்ற வாதம் தவறானது.
பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக கூடாது என்று கூறுகிறார். 2019ல் கலைஞரின் மறைவால் மு.க.ஸ்டாலின் தனித்து விடப்படுகிறார். நடிகர்கள் வெற்றிடம் உள்ளதாக கூறியபோது, தந்தைக்கு உதவியாக பிரச்சாரத்துக்கு வருகிறார். மக்களும், தொண்டர்களும் அவருக்கு அளித்த மிகப்பெரிய ஆதரவு அவரை முழுநேர அரசியலுக்கு இழுத்தது. தன் தொகுதியை போல மற்ற தொகுதிகளையும் கருதும் எம்.ஜி.ஆர். கலைஞர் வழியில் 234 தொகுதிகளிலும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு நாள் தான் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கலைஞர் குடும்பத்தில் 6 பேர் இருந்தபோதும் ஸ்டாலினும், கனிமொழி மட்டும் தான் அரசியலுக்கு வந்தனர். தற்செயலாகத்தான் உதயநிதி அரசியலுக்கு வந்தார். ஆனால் மகக்ள் அளித்த ஆதரவு அவரை முழுநேர அரசியலுக்கு இழுத்துக்கொண்டது.
பொது தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்த முடியுமா என ஆதவ் அர்ஜுனா கேட்கிறார். ஆனால் திருமாவளவனுக்காக விடுதலை சிறுத்தைகள் கொடியை தனது கழுத்தில் போட்டு வாக்கு சேகரித்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆதவ் அர்ஜுனாவின் கருத்து தவறானது என்பது திருமாவளவனுக்கே தெரியும். அவர்கள் திமுகவை தலித் விரோத கட்சி என கட்டமைப்பதன் மூலம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என திருமாவளவனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கின்றனர். அதன் வாயிலாக திமுக கூட்டணியை உடைக்க முயற்சிக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கூட்டணியை தேர்தலுக்காக அமைக்கவில்லை. மாறாக பாஜகவுக்கு எதிரான கொள்கை கூட்டணியாக உருவாக்கியுளளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.