விஜய், பாஜகவை நேரடியாக எதிர்க்காத வரை சிறுபான்மை மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் அதிமுகவை தாக்கி பேசினார். அதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்வினை ஆற்றப்படுகிறது. அதற்கு காரணம் விஜய் விமர்சனம் அதிமுகவுக்கு அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போய்விட்டு வந்ததும் விஜயின் விமர்சன பார்வை வேறுவிதமாக மாறியுள்ளது. டெல்லியில் பாஜக அணிக்கு வருவதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஆனால் விஜய் மறுத்துவிட்டார். அதன் காரணமாக தான் அழுத்தங்களுக்கு அடிபணிகிற ஆள் இல்லை என்று சொன்னார். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை தடுக்க கூட்டணியில் அதிக கட்சிகளை சேர்த்து, அதிக இடங்களை பெற பாஜக திட்டமிட்டது. விஜய் சொல்வது போன்று சிபிஐ அறிக்கை தர வேண்டுமானால், தங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜக சொன்னது. ஆனால் பாஜக உடன் சேர்ந்தால் தனது அரசியல் வாழ்க்கை காலியாகிவிடும். தனக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதால் சேர முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் அதிமுகவை விமர்சிக்க தொடங்கியுள்ளார்.

விஜய் அதிமுகவை விமர்சித்து, அவர்களின் வாக்குகளை பிரித்தாலும் அது பாஜகவுக்கு சாதகம் தான். போக போக அவர் காங்கிரசையும் கூட தாக்க தொடங்கலாம். அதிமுக தரப்பில் கரூர் மரணங்களுக்கு நீங்களும் தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் முதலில் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளனர். பாஜக மீதான விஜயின் பார்வை மிகவும் மென்மையானதாக இருப்பதால், அவருடைய செயல்பாடுகளில் பல விதமான சந்தேகங்கள் எழுகின்றன. அவர் பாஜகவை முழுமையாக எதிர்க்கத் தொடங்கினால் தான் சிறுபான்மையின மக்கள் நம்புவார்கள். அதேவேளையில் விஜய், திமுக பாஜகவுடன் மறைமுகமாக சரணடைந்துள்ளதாகவும், அதிமுக நேரடியாக சரணடைந்துள்ளதாகவும் பேசுகிறார். இதன் மூலம் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் பாஜகவை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெறலாம் என முயற்சிக்கிறார். ஆனால் அது நடக்காது. காரணம் அவர் பாஜகவை நேரடியாக எதிர்க்கும் வரை சிறுபான்மை மக்களோ, பாஜகவை எதிர்ப்பவர்களோ நம்பவே மாட்டார்கள்.

அதிமுக ஊழல் ஆட்சி கொடுத்துள்ளது என்றால்? அந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செங்கோட்டையன் தூய சக்தி ஆகிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல் விஜய், ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவை ஒரு தலைவராக தன்வசப்படுத்த முயற்சிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுந்துள்ளது. செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதற்கு பிறகே, விஜய் ஜெயலலிதாவின் பெயரை சொல்ல தொடங்கியுள்ளார். சர்ச்சைகள் ஏற்பட்ட பிறகு இனி அந்த பெயரை எடுப்பாரா? என்பது கேள்விக்குறிதான். கடந்த காலங்களில் செங்கோட்டையன் மீதும் ஊழல் வழக்குகள் இருந்தன. அதேபோல் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. அதிமுகவினரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி திமுகவை ஊழல் ஆட்சி என்று சொல்லக்கூடாது. திமுக மீது ஊழல் புகார் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். அதேவேளையில் அதிமுக மீதான ஊழல் புகார்கள் என்ன ஆகியது? அவர்கள் எல்லாம் உங்கள் பக்கத்தில் தானே அமர்ந்துள்ளனர். விஜய் அதிமுகவை எதிர்த்துவிட்டு, பாஜகவை எதிர்க்காமல் இருந்தார் என்றால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் திமுகவுக்கு தான் செல்லும். அதேவேளையில் அதிமுகவை விஜய் தாக்கி பேசுவதால் திமுக எதிர்ப்பு வாக்குகள் கொஞ்சம் அவருக்கு போகும்.

விஜயின் பேச்சை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இது ஆளும்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம். பாஜக தரப்பில் எப்படியாவது விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தான் முயற்சித்தார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் தனியாக நின்று திமுக வாக்குகளை பிரிக்க சொல்லிவிட்டனர். அதேநேரம், விஜய் பாஜகவை எதிர்க்காவிட்டால் சிறுபான்மை மக்கள் ஒருவரும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். நான்கு முனை போட்டி, விஜயின் நடவடிக்கைகள் ஆகியவற்றை பார்க்கும்போது, களம் திமுகவுக்கு தான் சாதகமாக உள்ளது. விஜயின் பேச்சில் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது அம்பலமாகிறது. கட்சியில் பழைய நபர்களுக்கு பொறுப்புகள் வழங்காமல், புதியவர்களுக்கு தான் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதனால் கட்சியினரை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதிமுக மீது ஊழல்வாதிகள், அடிமைகள் என்ற குற்றச்சாட்டுகளை விஜய் வைத்துள்ளார். அதன் காரணமாக பாஜக கூட்டணியை விரும்பாத அதிமுகவினர் அவரிடம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதன் கரணமாக அதிமுக திருப்பி அடிக்கிறது.


