முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சித்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் தனது பெயரில் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் ஐ.டி. விங் பெயரில் கண்டனம் தெரிவித்துள்ளது மிகவும் தவறானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ திரையிடப்பட்ட நிலையில், அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து முன்னணி அமைப்பினர் தங்கள் கட்சியின் மாநாடு என்று வைத்து அதில் இதுபோன்று தங்களின் தியாகங்களை சொல்கிற வீடியோக்களை போட்டால் அது தவறில்லை. ஆனால் முருக பக்தர்கள் மாநாடு என்று சொல்லி இதுபோன்று செய்தது தான் அரசியல் சேட்டையாகும். இதை தான் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று திரும்ப திரும்ப சொல்கிறோம். இனிமேல் சாமி பெயரை சொல்லி யாரேனும் கூட்டம் போட்டால் போகவே கூடாது என்கிற விழிப்புணர்வை இந்து முன்னணி மக்களிடம் ஏற்படுத்திவிட்டது. அதர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போது அண்ணா, கலைஞர் படம் காட்டப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசு பழனியில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் போட்டால் ஏற்றுக்கொள்வார்களா? அப்போது முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று தீர்மானம் போட்டது ஏன்? திராவிடம் கடவுள் மறுப்பை மட்டுமா பேசியது? சமூகநீதியை பேசவில்லையா?
பவன் கல்யாண், ஆந்திர பாஜக கூட்டணி அரசில் துணை முதலமைச்சராக உள்ளவர். அவர் பாஜக உடன் இரண்டறக் கலந்துதான் பேசுவார். அவரது பேச்சுக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்று பாஜக காலங்காலமாக சொல்லி வருகிறது. அப்படி அரசு வெளியே போய்விட்டால், அந்த கோவில்களை யார் நிர்வகிப்பது என்று சொல்லவே மாட்டார்கள். அதையும் சேர்த்து சொன்னால் தான், மக்களும் யோசிப்பார்கள். கோவில்களில் உள்ள நகைகயை எல்லாம் பூட்டி சாவியை யாரிடம் கொடுப்பது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பாஜகவின் கைகளில் அதை தர வேண்டும் என்று. இதைவிட அயோக்கியத்தனம் எதாவது உள்ளதா?
கோவில்களின் கட்டுப்பாடு அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அது திமுக அரசா? அதிமுக அரசா என்பது முக்கியம் கிடையாது. இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போது நீங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்று சொல்லிவிட்டு வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். சென்னிமலை கோவிலில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் திரண்டனர். ஆனால் சென்னிமலையை உள்ளடக்கிய ஈரோடு தொகுதியில் திமுக தான் வெற்றி பெற்றது. மக்கள் தெளிவாக உள்ளனர். மதுரை மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் போனார்கள். இது உங்களுக்கு அரசியலில் கை கொடுக்கும் என்று நம்பினால் உங்களை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியின் அனுமதி இல்லாமல் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்று இருக்க மாட்டார்கள். பத்திரிகை வைத்ததால் போய்விட்டு வாங்க என்று சொல்லி இருப்பார். என்னை பொறுத்தவரை இந்த மாநாட்டிற்கு எதற்காக அதிமுகவினர் போக வேண்டும்? ஒரு வருடத்திற்கு முன்னதாக கூட்டணி அறிவித்தால், இதுபோன்ற சங்கடங்கள் எல்லாம் ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரித்தேன். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு போகவிட்டால், அமித்ஷா என்ன நினைப்பார் என்று எடப்பாடி நினைத்திருக்கலாம். இல்லாவிட்டால் இந்த கூட்டத்திற்கு போக வேண்டிய அவசியமே கிடையாது. பத்திரிகை வைத்தற்கு வாழ்த்து சொல்லியதுடன் முடித்துக் கொண்டிருக்கலாம்.
ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஒரு விஷயம் சரியானது. இப்படி எல்லாம் வீடியோ ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார். அது உண்மைதான். அண்ணாமலை, பவன் கல்யாண் போன்றவர்கள் விமர்சித்து பேசிய போது சபை நாகரிகம் கருதி அமைதியாக இருந்தோம் என்றார்கள் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அரசியல் பேசுவது எங்களுக்கு தெரியாது என்று சொல்வதை சின்ன பிள்ளைகள் கூட நம்பாது. ஏனென்றால் மதுரை நகரம் முழுவதும் திராவிடத்தை விமர்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதை இவர்கள் பார்க்கவில்லையா?
அதிமுக யாருடைய பெயரால் கட்சி நடத்துகிறதோ அவர்களுடைய படத்தை போட்டு அதை போலி திராவிடம் என்ற அடையாளமாக காட்டுகிறார்கள். அதர்மத்தின் அடையாளங்களில் ஒருவராக காட்டுகிறார்கள். அதை கண்டித்து யார் அறிக்கை வெளியிட வேண்டும். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலோ, அல்லது தலைமை கழகம் பெயரிலோ வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் ஐ.டி.விங் மூலம் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிமுக தலைமை கழகம் பெயரில் கூட அறிக்கை விடாவிட்டால் இந்த கட்சியை எதற்காக நடத்துகிறீர்கள் என்று தொண்டன் கேட்க மாட்டானா?
அண்ணாமலை, 2026ல் அமையப் போவது பாஜக ஆட்சிதான் என்று சொல்வேன் என்கிறார். அதற்கு எடப்பாடி தான் பதில் அளிக்க வேண்டாம். அதிமுக துணை பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமி கேட்டிருக்கலாமே. அவருக்கு திராவிட உணர்வு சற்றும் குறைவு கிடையாது. நேற்று நடந்த கூட்டத்தில் முனுசாமிதான் சண்டை போட்டுள்ளார். யாரை கேட்டு முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுப்புனீர்கள் என்று சண்டை போட்டிருக்கிறார். எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த முனுசாமி, அண்ணாமலைக்கு பதில் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா?
சசிகலா, தினகரனை சேர்ப்பது என்றால் 10 பிரஸ்மீட் வைத்து முடியவே முடியாது என்று சொல்லும் கே.பி.முனுசாமி, உங்களின் உணர்ச்சியை இதை காட்ட வேண்டாமா? எதற்காக அண்ணாமலை அப்படி பேசினார் என யோசித்து பார்த்தாலும் புரியவில்லை. அடுத்து அரவக்குறிச்சி தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால், எந்த அதிமுக தொண்டன் ஓட்டு போடுவான். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்ப்பார்களா? அண்ணாமலையின் நோக்கம் கூட்டணியை சிதைப்பதாகவே இருக்கட்டும். அவருக்கு பதில் அளித்திருக்க வேண்டாமா? ஆனால் இந்த நிமிடம் வரை அதிமுக கள்ள மவுனம் சாதிக்கிறது.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் பேன்றவர்கள் இதை தவிர்த்து இருக்கலாம். இது நல்லதல்ல என்று நாகரிகமாக சொல்கிறார்கள். எடப்பாடி எதுவாது ஒரு கருத்து சொன்னாரா? 2023ல் தீர்மானம் போட்டு பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி வெளியே வந்தார் என்று எங்களுக்கும் தெரியும். அப்படிபட்ட எடப்பாடி தற்போது ஏன் மவுனமாக இருக்கிறார் என்றுதான் கேட்கிறோம். எடப்பாடி என்ன செய்தார் தெரியுமா? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் சொன்ன எடப்பாடி, அந்த அண்ணாமலையை கூப்பிட்டு வந்து விருந்து வைத்தார். அதையும் தான் சேர்த்து பேசுவார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அண்ணாமலை பேசுகிறார். இந்து முன்னணி அப்படி வீடியோ வெளியிடுகிறார்கள். அவர்கள் எல்லை மீறுகிறபோது நீங்கள் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது வெளிப்படுத்த வேண்டாமா? புலிப்பாய்ச்சல் வேண்டாம். பூனை போன்றாவது சத்தமிடலாமே? எதோ ஒரு நிர்பந்தத்திற்கு பணிந்து பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, இந்த விஷயத்திற்காக எல்லாம் கூட்டணியை விட்டு விலக மாட்டார். கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற கூட்டத்திற்கு வேலுமணி சென்றது தொடர்பாகவும், கே.பி.முனுசாமி எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முருகன் மாநாட்டிற்கு யாரை கேட்டு ஆட்களை அனுப்பியுள்ளீர்கள். அந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி, மோகன் பவத்துக்கு முருகன் சிலை வழங்கியுள்ளார். எதற்காக இப்படி அனுப்புகிறீர்கள்? என்று கே.பி.முனுசாமி கேட்கிறார். வேலுமணி, அந்த நிகழ்ச்சியில் போய் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?. இவ்வளவு நடந்த பிறகும் எடப்பாடி எதற்காக மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. எடப்பாடி – எம்.ஆர். விஜயகாஸ்கர் இடையே விவாதம் நடைபெற்றது உண்மைதான். அதை விஜயபாஸ்கரே மறுத்துள்ளபோது அது குறித்து பேச வேண்டியதில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.